.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 4 January 2014

இரட்டைவேடங்களில் சூர்யா..!



              லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.

              அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடங்கள் என்பது மட்டும் உறுதியாம். அந்தப்படத்துக்குத் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பெயர், கல்யாணராமன். இரட்டைவேடம் என்று சொல்லிவிட்டு கல்யாணராமன் என்று பெயரும் வைத்தால் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில்கல்யாணராமன் ஆகிய படங்களின் நினைவு வரும். அதுபோன்ற ஒரு படத்தையே மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? இந்தப்படமும் நகைச்சுவை பெருமளவில் கலந்த சண்டைப்படம் தானாம்.

               பிதாமகன் படத்துக்குப் பிறகு சூர்யா, நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அந்தப்பாணியில் ஒரு கதையைத் தயார் செய்தால், அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சூர்யாவை வேறுபடுத்திக்காட்டலாம் என்கிற வெங்கட்பிரபுவின் எண்ணம் செயலாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பலருடைய எதிர்ப்பை¬யும் மீறி வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் படம் முடிவதற்கு முன்பே இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

இப்படியும் பெண்கள்...!



கணவரின் சிகிச்சைக்கு பரிசுப்பணத்தை சேகரிப்பதற்காக 3 கி.மீ. ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற 61 வயது பெண் ...?

மூன்று கிலோமீற்றர் வீதியோட்டப் போட்டியில் 61 வயதான பெண்ணொருவர் முதலிடம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சேலை அணிந்த நிலையில் வெறுங்காலுடன் இப்பெண் ஓடி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தின், பராமத்தி நகரில் நடைபெற்ற பராமத்தி மரதன் எனும் போட்டியில் இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது கணவரின் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில,; இந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 5000 இந்திய ரூபா பரிசு வழங்கப்படும் எனக் கேள்விப்பட்டவுடன் இப்போட்டியில் பங்குபற்ற லதா பக்வான் கரே எனும் இப்பெண் தீர்மானித்தாராம்.

இவருடன் போட்டியில் பங்குபற்றிய ஏனையோர் பயிற்சிப் பெற்ற ஓட்டப் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலையொன்றை அணிந்துகொண்டு வெறுங்காலுடன் ஓட்டக்களத்தில் வந்து நின்ற தன்னைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்ததாக லதா பக்வான் கரே கூறுகிறார். ஆனால், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக முந்தத் தொடங்கினார்.

இறுதியில் முதலிடத்தைப் பெற்று பராமத்தி மரதன் ஓட்டப்போட்டியின் அதிவேகமான நபர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார் அவர். லதா பக்வான் ஓட ஆரம்பித்ததையே வித்தியாசமாக பார்த்தவர்கள் அவர் முதலிடம் பெற்றதை அறிந்து பெரும் வியப்படைந்தனர்.

பண்ணையொன்றில் தொழிலாளியாக பணியாற்றுபவர் லதா பக்வான். இது குறித்து லதா பக்வான் கரே கூறுகையில், 'இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நாம் 15,000 - : 20,000 ரூபாவை திரட்ட வேண்டும்.

எனது அயலவர் ஒருவர்தான் இந்த மரதன் போட்டி குறித்த தகவலை எனக்குத் தெரிவித்தார். இதில் கிடைக்கும் பரிசுப்பணம் மூலம் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என மற்றொரு அயலவர் தெரிவித்தார். அதனால் நான் இப்போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்தேன்.

எனது மகனிடம் இவ்விருப்பத்தை தெரிவித்தபோது, எனது வயதை கருத்திற்கொண்டு அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். இது சாத்தியமில்லாத செயல் என அவர் எண்ணினார். ஆனால் நான் உறுதியாக இருந்ததால் இறுதியில் அவர் சம்மதித்தார். போட்டியில் ஓடும்போது நான் வெற்றி பெற வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்' என்றார்.

புல்தனா எனும் இடத்திலிருந்து 3 வருடங்களுக்குமுன் தொழில் தேடி பிம்பிலி எனும் கிராமத்துக்கு இவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால் அங்கும் நல்ல தொழில் எதுவும் கிடைக்கவில்லை. பண்ணையொன்றில் பணியாற்றி 80 - 100 ரூபாவை சம்பாதித்தார் இவர்.

இந்த ஓட்டப்போட்டிக்குமுன் தினமும் காலையில் காலையில் தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வாராம் லதா பக்வான். ஆனால் ஒருபோதும் ஓடியதில்லை. 'நான் ஓடினால்' மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள்' என என்கிறார் அவர்.

போட்டி ஏற்பாட்டாளரான சச்சின் சதாவ் கூறுகையில், 'பராமத்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தடவை என்பதால் நாம் சிறிய அளவில் 4 பிரிவாக இப்போட்டியை நடத்தினோம். லதா பக்வான் சிரேஷ்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் பங்குபற்றினார். இது 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட போட்டி. ஏனைய போட்டியாளர்கள் முழுமையான தயார் நிலையில் ஓடினார். ஆனால் லதா கரே முதல் தடவையாக ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய நிலையிலும் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பெற்றவர் அவரைவிட 2:3 நிமிடங்கள் பின்னால் இருந்தார். முறையான ஆடையோ பயிற்சியோ இன்றி லதா பக்வான் வெற்றிபெற்று ஆச்சரியமளித்துள்ளார்' என்றார்.

லதா பக்வானின் மகன் சுனில் கருத்துத் தெரிவிக்கையில், 'எனது தாயார் உடற்திடமானாவர் என்பது தெரியும். நானும் அவருக்குத் துணையாக ஓட நினைத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக என்னால் பங்குபற்ற முடியவில்லை.

ஆனால், போட்டிக்கு முதல்நாள் இரவு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் இந்த போட்டியில் பங்குபற்றும் திட்டத்தை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் காலையில் குளிசையொன்றை அருந்திவிட்டு என்னிடமும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் வெற்றிபெற்றதை பின்னர்தான் அறிந்தேன்' என்றார்.

'எனது கணவரின் சிகிச்சைக்காகவும் குடும்பத்துக்காகவும்தான் நான் ஓடினேன். சமூகத்திடமிருந்து சில உதவிகளை நான் எதிர்பார்க்கிறேன். எனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும். அப்போது எமது குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்' என லதா பக்வான் தெரிவித்துள்ளார்.

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!




ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.


தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.


அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

 
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!




“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய முதல்வர்:ஜெயலலிதா பேசும்போது, ”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி சேலை திட்டத்தையும்; பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை இன்று நான் துவக்கி வைக்க உள்ளேன்.
3 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடையக் கூடிய வேட்டி-சேலைத் திட்டத்தினை இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் என்ற சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவிகளை நான் செய்து வருவதால் தான் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய இடத்திலே நீங்கள் என்னை வைத்து இருக்கிறீர்கள்.


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அப்போது ஜனாதிபதியாக இருந்தார். சிக்கல் மிகுந்த அந்த வேளையில் ஒரு மூதாட்டி, ஆபிரகாம் லிங்கனை அணுகி அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ஒன்றைச் சொன்னார். “ஜனாதிபதி அவர்களே, எதற்கும் கவலைப்படாதீர்கள், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.


இதற்கு பதில் அளித்த ஆபிரகாம் லிங்கன், “தாயே உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய கடமை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னாராம்.


இதைப் போல, எனது அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே எனது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.


பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரே நலம் தான் இருக்கிறது. அது தமிழக மக்களின் நலம். அதனால் தான் என் அன்புக்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் இருக்கிறேன்.


தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உங்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Windows 8 பிரச்சினைக்கான தீர்வு...



நண்பரே நீங்க விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.

இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்; அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.

ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top