.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 31 December 2013

வெற்றிப் படிக்கட்டுகள் - இவ்வளவுதான்..?





வெற்றிப் படிக்கட்டுகள்:-



சிறு வயதிலிருந்தே நாம் பழக்கப்பட்ட ஒரு விஷயம் நேர அட்டவணை போடுவது. இந்த நேரத்துல, இந்தப் பாடத்தைப் படிக்கணும் என ஒரு டைம் டேபிள் போட்டு வைத்திருப்போம். இந்த விஷயத்தை நம்மளோட நிறுத்தினமா..? ம்ஹூம்.. நம் தங்கை, தம்பி… குழந்தைகள்.. பேரக்குழந்தைகள் அப்படினு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம். இந்த நேரத்துல இதைத்தான் படிக்கணும், எழதணும்னு நாம பழகற சின்ன வயது பழக்கம், வளர்ந்து பெரியவங்களானதும், இந்த சமயத்துல இந்த வேலையைத்தான் செய்யணும், செய்தாகணும்னு நம்ம மனசுல பதிவாகி நம்மளை நாமளே கட்டாயப்படுத்திக்கிறோம். இல்ல, அடுத்தவங்களை வற்புறுத்தறோம். அதிக பட்சமா, அளவுக்கதிகமா சோம்பேறித்தனத்தோட இருக்கறப்போ அல்லது பல புதிய விஷயங்களை பழக்கப்படுத்திக்கவோ இந்த கால அட்டவணை விஷயம்.


 யுக்தி உதவலாம். ஆனா, எல்லா சமயங்களிலேயும் இந்த ‘உறுதி’ உதவாது. வளைந்து கொடுக்கும். எந்த நேரத்தில் எது முக்கியம் என யோசித்து செயல்படும் தன்மை, தொழில்சார்ந்த நடவடிக்கைகளில் மிகவும் முக்கியம். நேரநிர்வாகத்தின் ஒரு அம்சமான இந்தப் பண்பைப் பற்றி நாம் முழுதாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஏனெனில், நாம் இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை விஷயங்களும், ஏதோ பொழுது போவதற்கோ அல்லது வார்த்தை ஜால தோரணங்களைப் படித்து ‘அட’ என்று நீங்கள் வியப்பதற்காகவோ அல்ல, உங்களது தினசரி ‘தொழில் வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றியாக வேண்டிய வெற்றிக்கான கட்டளைகள், நிதர்சமன ஆலோசனைகள் (Practcal tips).


இப்ப கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பார்க்க பார்க்கலாமா? நீங்க உங்களோட ‘அட்டவணைப்படி’ வேலை செஞ்சுட்டிருக்கீங்க. உங்க ‘நேர அட்டவணை’யிலேயே இல்லாத, ஆனால் உடனே சரிசெஞ்சே ஆகணும்ங்கற விதத்துல ஒரு பிரச்சனை அல்லது இக்கட்டான சூழ்நிலை ஏற்படுது.


 இப்ப என்ன செய்வீங்க…? என்னோட ‘தினசரி கால அட்டவணையை ‘ எக்காரணம் கொண்டும் பிடிவாதமாக இருப்பீங்களா…? இல்ல, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம என்ன செஞ்சா, நஷ்டம் ஏற்படாம தவிர்க்கலாம்.. அப்படினு யோசிச்சு, அதுக்கான முயற்சிகள் எடுப்பீங்களா…? நிச்சயமா இரண்டாவது முடிவைத்தான் பின்பற்றுவீங்க, இல்லையா? ஏன் இவ்வளவு உறுதியா நான் சொல்றேன். அப்படினா, எந்த வெற்றிகரமான தொழில் முனைவோரும் நீங்க வெற்றிகரமான நபர்தான்னு நான் நம்பறேன். சரியா…?


அதனால், இதுதான்.. இப்படித்தான்.. இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்…. செய்ய வேண்டிய வேலை என்ன, எதைச் செய்தால் நல்லது, எடுக்க வேண்டிய சரியான முடிவு என்ன என்பதையெல்லாம் உணர்ந்து, நேரம் உங்களை கையாளாமல், உங்களை கட்டுப்படுத்த நேரத்தை அனுமதிக்காமல், நீங்கள் நேரத்தை எப்போது கையாளத் தொடங்குகிறீர்களோ, உங்கள் கட்டுப் பாட்டுக்குள்ள் வைக்கிறீர்களோ, அது தான் சரியான நேர நிர்வாகம் ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலதிபரும் பின்பற்றும் விதிமுறை இதுதான்.


நேர நிர்வாகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அது தொடர்பான இன்னொரு முக்கியமான அம்சத்தை, கருத்தைப் (Concept) பற்றியும் பேசியே ஆக வேண்டும். நம் நாட்டில் பெரும்பாலானோர், குறிப்பாக தொழில் முனைவோர் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் இது. நிறைய கவலைப்படற, யோசிக்கற, தவறிப் போய்விடக்கூடாதேனு பதைபதைக்கிற.. அந்த விஷயம் …. சரி, உங்க இதயத் துடிப்பை அதிகரிக்க விரும்பல, சொல்லிடறேன். ‘நல்ல நேரம், கெட்ட நேரம்…’ பார்க்கறதுதாங்க. ஒரு புது தொழில் துவங்கும்போது, அது தொடர்பான பூஜை அல்லது கடைதிறப்பு விழா….


இந்த மாதிரியான சமயங்கள்ல நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கறது இயல்புதான். ஆனால், சிலபேர் தங்களோட தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகத் தொழிலில் சின்ன சின்ன விஷயங்களுக்காகக் கூட, எடுத்துக்காட்டாக, தொழில் ரீதியான சந்திப்புகள், கூட்டம், இந்த மாதிரி எல்லாத்துக்குமே நேரம் பார்த்து செயல்படனும்னு ஒரு முடிவோட இருப்பாங்க. ராகு காலத்திலயோ அல்லது செவ்வாய் கிழமை மற்றும் சந்திராஷ்டம் நாட்கள்லயோ யாராவது முக்கியமான நபர் தொழில் விஷயமா வரச்சொன்னாக்கூட, ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துடுவாரு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு நாள் ரொம்ப சோகமான மனநிலை, முகபாவத்தோட என்கிட்ட ஆலோசனை கேட்டு வந்திருந்தார்.


ரொம்ப ரொம்ப கவலையா, தனக்கு கிடைத்திருக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்டை தான் இழந்துட்டதா சொன்னார். அவர் சொன்ன காரணம் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. “நான் சந்திக்க வேண்டிய கெம்பெனியோட முதலாளி கல்கத்தாவில இருக்கிறவர். மாசத்துல ஒருநாள், இரண்டு நாள் மட்டும்தான் சென்னை ஆபீசை பார்வையிட வருவார். நேத்து மத்தியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க வருவார். நேத்து மதியானம் என்னை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். ஆனா, அது சரியான எமகண்டம். ரொம்ப முக்கியமான தொழில் விஷயங்கறதால, எமகண்டம் முடிஞ்சு போலாமேனு நான் ஒரு மணி நேரம் லேட்டா போனேன்.


அதுக்குள்ள, அவர் ஊருக்குக் கிளம்பி போய்ட்டதா அவரோட ஆபீஸ் வேலையாட்கள் சொல்லிட்டாங்க. உண்மையிலேயே அவர் ஊருக்குப் போய்ட்டாரா, இல்ல ரொம்ப முக்கியமான அவரோட நேரத்தை நான் வேஸ்ட் பண்ணிட்டேன்ங்கற கோபத்துல என்னை சந்திக்கிறதை தவிர்த்துட்டாராங்கறது தெரியல. அதுவே எனக்கு பெரிய குழப்பமா இருக்கு. ஆனா, அன்னைக்கு எனக்கு சாதகமா முடிஞ்சிருக்க வேண்டிய அந்த தொழில் ஒப்பந்தம் நடக்காமலேயே போயிடுச்சு.. அதுக்கப்புறம் எத்தனை முறை முயற்சி செய்தும் அவரோட பேசவே முடியல….” அப்படினு பெருமூச்சோட, தனது சோகத்திற்கான, கவலைக்கான காரணத்தை சொல்லி முடித்தார்.


ஒரு செயலோட சந்திப்போட முக்கியத்துவம் என்ன, நாம சந்திக்க நேரம் வாங்கியிருக்கற நபரோட அந்தஸ்து என்ன..? அவர் வேலையோட தன்மை… வேலை பளு… இந்த அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, சீர் தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில்தான் நீங்க அவரை சந்திக்கிற நேரத்தை, அதன் முக்கியத்துவத்தை உணரனும். ரொம்ப, ரொம்ப உண்மையான, அதி முக்கியமான, தவிர்க்க முடியாத காரணமா இருந்தாலொழிய, வேறெந்த சின்ன, சின்ன காரணத்துக்காகவும் நீங்க வாங்கின முன் அனுமதியை ரத்து செய்யக் கூடாது.


மத்தவங்களோட நேரத்தை வீணடிக்கிற இந்த மாதிரியான செயல்களுக்கு, ‘கெட்ட நேரத்த’ காரணமா காட்டாதீங்க. அப்படி நீங்க முயற்சி போட்டுக்கற அடிக்கல். உங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப தவறான, கேலிக்குரிய அபிப்ராயம் அடுத்தவங்க மனசில ரொம்ப சுலபமா ஏற்பட்டுவிடும். இது நிச்சயமா உங்களோட தொழில் முன்னேற்றத்துக்கு வேகத்தடையா அமையும்.


சமீபத்துல நான் படிச்ச ஒரு விஷயம். நல்ல நேரம், கெட்ட நேரம் குறித்த ஒரு ஆய்வு என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. சொல்லப் போனா, ரொம்ப அதிர்ச்சியாகூட இருந்தது. பெரும்பாலான நேரங்கள்ல, எந்த ஒரு சின்ன வேலையை, ஆக்கபூர்வமான வேலையைத் தொடங்கறதுக்கும் நாம நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். கெட்ட நேரத்துமேல பழியைப் போட்டுட்டு ஒரு செயலைத் தொடங்க லேட் பண்றோம்… பல சமயங்கள்ல, அப்படியே அது துவங்கப்படாமலேயே போய்டுது. நீங்களும் அந்த ரக மனிதரா…? அப்ப நான் சொல்லப் போற அந்த ஆய்வை நீங்க அவசியம் படிக்கனும். ஆனால் அதுக்கு நீங்க இன்னும் ஒரு மாதம் காத்திருக்கணுமே…!

மவுசு கூடிய ஸ்ரீதிவ்யா - மவுசு குறையாத நயன்தாரா...



 தமிழ் திரையுலகின் நடிகைகளை பொருத்தவரையில், ரசிகர்கள் மனதில் மீண்டும் ராணியாக அமர்ந்தார் 'நயன்தாரா'. எல்லா வருடத்தையும் போலவே இந்த வருடமும் நாயகியை முன்னிலைப்படுத்தி நிறைய படங்கள் வெளிவரவில்லை. 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா மற்றும் 'விடியும் முன்' படத்தில் பூஜா ஆகிய படங்களைத் தவிர நாயகிகளைத் முன்னிலைப்படுத்தி எந்த ஒரு படமும் வரவில்லை.

முன்னணி நாயகிகளான அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளுமளவில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்பது மிகப்பெரிய சோகமே. லட்சுமி மேனன், நஸ்ரியா ஆகிய புதுமுக நடிகைகளும் தங்களது பங்களிப்பை அளித்தார்களே தவிர, அவர்களுக்கும் முன்னணி நாயகிகள் நிலைமை தான்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படத்தில் நாயகியாக நடித்ததின் விளைவு, ஸ்ரீதிவ்யா கால்ஷீட் டைரி 2014ல் ஃபுல்லாகிவிட்டது. 'ஊதா கலரு ரிப்பன்' பல படங்களுக்கான வாசலை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு முன்பு ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'காட்டுமல்லி', 'நகர்ப்புறம்' ஆகிய படங்கள் முடிந்தாலும் இன்னும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் ஹிட், 2014ல் ஜி.வி.பிரகாஷுடன் 'பென்சில்', அதர்வாவிற்கு ஜோடியாக 'ஈட்டி', விஷ்ணுவிற்கு ஜோடியாக 'வீர தீர சூரன்' என ஸ்ரீதிவ்யா பயங்கர பிஸி.

'ராஜா ராணி' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார் நயன்தாரா. ’மெளன ராகம்’ படத்தின் நிழல் தான் என்று அனைவரும் கூறினாலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாயகியாக நடித்தாலும், இவரது மார்கெட் குறையாதது இவரை மேலும் சந்தோஷமாக ஆக்கியது. 'ராஜா ராணி' படம் வெளிவருவதற்கு முந்தைய தினம் ட்விட்டர் தளத்தில் இவரது பெயர் இந்தியளவில் டிரெண்டானது தான் ஹைலைட்.

அஜித்துடன் நடித்த 'ஆரம்பம்' படமும் வசூலை குவிக்க நயன் மவுசு குறையவே இல்லை. 2014ல் பாண்டிராஜ் - சிம்பு படம், ஜெயம் ரவி - ஜெயம் ராஜா படம், 'கஹானி' தமிழ், தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா' என நயனின் பட புக்கிங்களும் ஃபுல் ஸ்டாப் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எதார்த்தமான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் லட்சுமி மேனன், அதே பாணியை தொடர்வாரா அல்லது தனது பாணியை மாற்றிக் கொள்வாரா என்பது போகப் போகத் தெரியும்.

2014ல் நாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிகமான படங்கள் வெளிவருமா என்பது கேள்விக்குறியே.

தமிழ் சினிமா 2013 ஒரு பார்வை




 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ம் ஆண்டும் காமெடி படங்களே பெரும் அளவில் வெளியாகின. பெரிய நடிகர்கள் படங்கள் வசூல் ரிதியில் முன்னணியில் இருந்தாலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிறு நடிகர்களின் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.

மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. நலன் குமாரசாமி, நவீன் உள்ளிட்ட புதிய இயக்குநர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

காமெடி நடிகர்கள் பட்டியலில் சந்தானம் இல்லாத சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சூரி, ’எதிர்நீச்சல்’ சதிஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் தங்களது முத்திரையை பதித்தார்கள்.

மொத்தத்தில் புதிய இயக்குநர்கள் கவனம் ஈர்த்தனர். சிறு நடிகர்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்தன. புதிய கதைகளத்தில், புதிய நடிகர்கள் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழ் திரையுலகிற்கு உணர்த்தினார்கள் ரசிகர்கள்.

அவ்வகையில் 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வெளியான முக்கியமான படங்களும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்க்கலாம்.

ஜனவரி : ஆரம்பமே அதிர்ச்சியளித்த 'அலெக்ஸ் பாண்டியன்'

'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'சமர்' ஆகிய படங்கள் ஜனவரியில் வெளியான முக்கியமான படங்கள். பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. ஆனால் நடந்ததோ, 'எப்படி விளம்பரப்படுத்தினாலும் படம் பிடிக்கவில்லை' என்று நிராகரித்தனர் ரசிகர்கள். வருடத் தொடக்கமே கார்த்திக்கு அதிர்ச்சியளித்தது.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெளியீட்டு சமயத்தில் பாக்யராஜ், 'இது எனது 'இன்று போய் நாளை வா' படத்தின் மறுபதிப்பு. ஆகையால் எனக்கு பணம் தர வேண்டும்' என்று கே.பாக்யராஜ் செய்த சர்ச்சையினிடையில் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சந்தானம். சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர் ரசிகர்களுக்கு லட்டை அளித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளினார்கள்.

வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான 'சமர்' போதிய வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்று பெரும் சர்ச்சையில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் மக்களால் கொண்டாடப்படவில்லை.

பிப்ரவரி : விஸ்வரூபமெடுத்த கமல்

'கடல்', 'டேவிட்', 'விஸ்வரூபம்', 'ஆதிபகவன்', 'ஹரிதாஸ்' ஆகிய படங்கள் பிப்ரவரியில் வெளியான முக்கியமான படங்கள்.

படத்தின் புகைப்படம் ஒன்றைக் கூட வெளியிடாமல், 'நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் மூலம் மக்களை திரையரங்கிற்கு இழுத்த படம் 'கடல்'. ஆனால் 'கடல்'க்கு உள்ளே போயிட்டு, மணிரத்னம் அளித்த சுனாமியால் மக்களுக்கு தலைவலியை உண்டாக்கி, நிராகரிக்க வைத்த படம். 'கடல்' மூலம் அதிர்ச்சியளித்தார் மணிரத்னம் என்றால், அவரது உதவி இயக்குநர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' மூலம் பேரதிர்ச்சி கொடுத்தார்.

கடும் சர்ச்சைக்கு இடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது 'விஸ்வரூபம்'. முதலில் தமிழகத்தை தவிர இதர இடங்களில் வெளியானது. வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் கேரளா, பெங்களூர் என வெளியூர்களுக்குச் சென்று 'விஸ்வரூபம்' படத்தினை கண்டு களித்தார்கள். 'எனது ஆழ்வார்பேட்டை வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன். படம் வெளிவராவிட்டால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவேன்' என்று கமல் கூறினார். ரசிகர்களோ அவருக்கு செக் மூலமாக பணத்தை அனுப்பி கமலை தங்களது அன்பால் அடிமையாக்கினார்கள். பின்னர் தமிழகத்திலும் படம் வெளியானது. படம் வெற்றியடைந்தவுடன் பணம் அனுப்பிய இதயங்களுக்கு நன்றியுடன் அவர்களது பணத்தை உரியவர்களுக்கே அனுப்பி வைத்தார் கமல்.

நீண்ட மாதங்கள் தயாரிப்பிற்கு பிறகு வெளியான அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படம், படம் பார்க்க வந்தவர்களை 'பகவானே.. படமா இது' என்று கேட்க வைத்தது. அமீர் இயக்கத்தில் வெளியாகி முற்றிலும் நிராகரிக்க படமாக 'ஆதிபகவன்' அமைந்தது. இப்படத்திற்காக ஜெயம் ரவியின் காத்திருப்பு வீணானது.

சினிமா விமர்சகர்கள் கொண்டாடிய படம் 'ஹரிதாஸ்'. குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினேகா இப்படத்தில் நடித்தார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்கள். வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும், அனைவரது பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களுள் ஒன்றாக இடம் பிடித்தது.

மார்ச் : 'பரதேசி' மூலம் திரும்பிய பாலா

'பரதேசி', 'வத்திக்குச்சி', 'சென்னையில் ஒரு நாள்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் மார்ச்சில் வெளியான முக்கியமான படங்கள். 'அவன் இவன்' படத்தின் மூலம் சற்றே சறுக்கிய பாலா, மீண்டும் தனது எதார்த்த உலகிற்கு திரும்பிய படம் 'பரதேசி'. 'ரெட் டீ' என்ற நாவலை மையப்படுத்தி எடுத்தாலும், அதில் அதர்வா, வேதிகா போன்ற நடிகர்களை கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து 'பாலா இஸ் பேக்' என்று பேச வைத்தார். அதர்வாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது ‘பரதேசி’.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியானதால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டு, குச்சி தீப்பிடிக்காமல் தீப்பெட்டிக்குள் அடங்கிய படம் 'வத்திக்குச்சி'.

'டிராபிக்' என்ற வரவேற்பை பெற்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'. விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரியளவிற்கு படம் சோபிக்கவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. பாண்டிராஜின் காமெடி பாணி இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம்.

ஏப்ரல் : பவர் கட்டானலும் இருப்பேன் என அடம்பிடித்த ராஜகுமாரன்


'சேட்டை', 'கெளரவம்', 'திருமதி தமிழ்', 'உதயம் NH4' ஆகிய படங்கள் ஏப்ரலில் வெளியான முக்கியமான படங்கள். 'டெல்லி பெல்லி' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா என முக்கியமான நடிகர்கள் நடிப்பில் வெளியானலும், இவங்களுக்கு எல்லாம் சேட்டை ஒவராயிடுச்சு என்று மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள். ராதாமோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கெளரவம்', படக்குழுவுக்கு கௌரவத்தை தரவில்லை.

'திருமதி தமிழ்' படத்தைப் பார்த்து விமர்சகர்கள், மக்கள் என அனைவருமே சிரித்தார்கள்; படம் பார்த்து அல்ல, படத்திற்காக ராஜகுமாரன் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து. ராஜகுமாரனின் மேக்கப்பும், அவர் கொடுத்த ’போஸ்’களும், முக்கியமாக அவரே அவருக்கு கொடுத்துக் கொண்ட 'சோலார் ஸ்டார்'பட்டமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் போஸ்டரில் மட்டும் நூறு நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது.

சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கலாம் என்று உணரவைத்த படம் 'உதயம் NH4'. விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்தவித பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை.

மே : சூது கவ்வும் நேரம்

'எதிர்நீச்சல்', 'மூன்று பேர் மூன்று காதல்', 'சூது கவ்வும்', 'நாகராஜ சோழன்', 'நேரம்', 'குட்டிப்புலி' ஆகிய படங்கள் மே மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். பாடல்கள் மூலமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிர் நீச்சல்' மக்களிடையே வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது மட்டுமன்றி, சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக்கியது. தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார்.

அர்ஜுன், விமல், சேரன் நடிப்பில் முன்னணி இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படம் வரவேற்பைப் பெறவில்லை.

'சூது கவ்வும்' என்ற படத்தின் மூலம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் முக்கியமான இயக்குநர் ஆனார் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி களத்தில், தமிழக அரசியலை சாடி எடுக்கப்பட்ட படம். மணிவண்ணன் - சத்யராஜ் இணைப்பில் வெளியான 'நாகராஜ சோழன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, படம் பார்த்தவர்களால் 'ம்ஹூம்.. அமைதிப் படை மாதிரி இல்லை..' என நிராகரிப்பட்டது.

'பிஸ்தா' என்ற YOUTUBEல் வெளியான பாடல் மூலம் படம் எப்போபா ரிலீஸ் என்று கேட்க வைத்த படம் 'நேரம்'. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

சசிகுமார் நடிப்பில் வெளியான 'குட்டிப்புலி', விமர்சகர்கள் மத்தியில் எடுத்த கதையே தான் எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு நிலவினாலும், வசூலில் பாய்ச்சல் காட்டியது 'குட்டிப்புலி'

ஜூன் : திக்குமுக்காடிய தில்லு முல்லுவும்...  அம்பேலான அன்னக்கொடியும்


'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு', 'அன்னக்கொடி' ஆகிய படங்கள் ஜுன் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு' ஆகியவை காமெடியை நம்பி களமிறங்க, 'தீயா வேலை செய்யணும் குமாரு' மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆனால் ரஜினி நடித்தளவிற்கு சிவா நடிப்பு எடுபடாமல் பெட்டிக்குள் படுத்து விட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை இழந்து, 2013ல் படுதோல்வியை சந்தித்தது.

ஜூலை : ரஹ்மானுக்கு மரியாதை கொடுத்த மரியான்

'சிங்கம் 2', 'மரியான்', 'பட்டத்து யானை' ஆகிய படங்கள் ஜுலை மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் 2' வெளியானது. பரபரப்பான திரைக்கதை, பாட்டிற்கு டான்ஸ் ஆட அனுஷ்கா, காமெடிக்கு கைகொடுக்க சந்தானம், இளசுகளைக் கவர ஹன்சிகா, பரபர காட்சியமைப்பு, விறுவிறு வசனம் என பார்வையாளர்களை யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், வசூலை அள்ளியது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சொதுப்பலாகி, தோல்வியடைந்த படம்.

படம் தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டு, ‘மரியான்’ பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் எதிர்பார்க்கப்பட 'பட்டத்து யானை' வெளியாகி தோல்வியடைந்தது.

ஆகஸ்ட் : விஜய்யை அதிரவைத்த ஆகஸ்ட்


'ஐந்து ஐந்து ஐந்து', 'ஆதலால் காதல் செய்வீர்', 'தலைவா', 'தேசிங்கு ராஜா', 'தங்க மீன்கள்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான 'ஐந்து ஐந்து ஐந்து' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது 'ஆதலால் காதல் செய்வீர்'. தற்போதுள்ள இளைஞர்களின் வாழ்க்கைமுறை, யுவனின் மனதை கொள்ளை கொள்ளும் இசை என வரவேற்பைப் பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியன் பனோராமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி, தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற விஜய் வீடியோ மூலம் பேசி என பலதரப்பட்ட முயற்சிக்கு பின் வெளியான படம் 'தலைவா'. போதிய வரவேற்பை பெறவில்லை, வசூலையும் பெறவில்லை.

எழில் இயக்கத்தில் விமல், சூரி நடிப்பில் வெளியான 'தேசிங்குராஜா' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி சூரியை முன்னணி காமெடி ராஜாவாக ஆக்கியது இந்த 'தேசிங்கு ராஜா'

செப்டம்பர் : சங்கம் தந்த செப்டம்பர்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'ராஜா ராணி' ஆகிய படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மூன்று படங்களுமே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம்.

நவீனின் அசத்தலான திரைக்கதை அமைப்பில் வெளியான 'மூடர் கூடம்', வி.சி.துரையின் உருக வைக்கும் திரைக்கதை, தூங்காமல் கண்ணுக்கு கீழே வீங்க வைத்து நடித்த ஷாம் ஆகிய வகையில் '6 மெழுகுவர்த்திகள்', மிஷ்கின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' என விமர்சகர்கள் பாராட்டினாலும் மூன்றில் எந்த படமுமே வசூல் ரீதியாக வெற்றி பெறாதது சோகமே.

சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் காமெடி கதகளியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூல் ரிதியில் பல முன்னணி நடிகர்களை கலங்கடித்தது. 'சிங்கம் 2' படத்தின் முதல் நாள் வசூலை பல இடங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முந்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா இப்படத்தில் அறிமுகமாகி, ஜி.வி. பிரகாஷ் உடன்’பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரதீரசூரன்’ என படபடவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். பலரையும் சந்தோஷப்படுத்தியது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

'மெளனராகம்' சாயலில் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடிய படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் பாத்திரப் படைப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு என ரசிகர்கள் மனதில் ‘ராஜா ராணி’ சிம்மாசனமிட்டது . குறிப்பாக, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நாயகியாக நயன்தாரா நடித்து, அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.

அக்டோபர் :அசத்தலான ஆரம்பம்.. ஆசைப்பட்டதை அடையாத பாலகுமாரன்


'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நய்யாண்டி', 'வணக்கம் சென்னை', 'ஆரம்பம்' ஆகிய படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி,எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சியாக இருக்கிறார். தனுஷ் நடித்து, நஸ்ரியாவின் பஞ்சாயத்திற்கு இடையே வெளியான 'நய்யாண்டி', படம் பார்க்க வருபவர்களை நய்யாண்டி செய்தது.

அனிருத்தின் ஹிட்டடித்த இசையால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட 'வணக்கம் சென்னை', மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பை பெற்றது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'ஆரம்பம்' வசூல் ரீதியில் கோடிகளை அள்ளியது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் விமர்சகர்கள் கூறினாலும், அஜித் இருக்காரு.. அவருக்கு நாங்க இருக்கோம் என்று படம் பார்த்தார்கள் அஜித் ரசிகர்கள்.

நவம்பர் : தடைகளைத் தாண்ட வைத்த பாண்டிய நாடு

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டியநாடு', 'வில்லா (பீட்சா 2)', 'இரண்டாம் உலகம்', 'விடியும் முன்' ஆகிய படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

கார்த்தி - ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', அழுக்கு ராஜாவாக பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது. சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விஷால் எதிர்நோக்கிய ஹிட்டை பரிசாக அளித்தது. தொடர்ந்த வந்த தோல்விப்படத் தடைகளை விஷால் உடைத்தார்.

'பீட்சா' படத்தின் அடுத்த பாகமாக வெளியான 'வில்லா', முதல் பாகம் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்' வெளியானது. ஆனால், ரசிகர்களை எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் என்று யோசிக்க வைத்து, சலிப்புடன் திருப்பி அனுப்பியது. 2013ல் படுதோல்வி அடைந்த படங்கள் ஒன்றாகவும் பெயர் பெற்றது.

பூஜா நடிப்பில் வெளியான 'விடியும் முன்' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், வசூலில் வானம் விடியவில்லை.

டிசம்பர் : கல்யாண சாப்பாடும், பிரியாணியும்

'கல்யாண சமையல் சாதம்', 'பிரியாணி', 'என்றென்றும் புன்னகை', 'தலைமுறைகள்', 'மதயானைக்கூட்டம்' ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'கல்யாண சமையல் சாதம்' ADULT COMEDY என்ற வகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு - கார்த்தி இணைப்பில் வெளியான 'பிரியாணி' வெளியானது. கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களோடு ஒப்பீடு செய்து அதற்கு 'பிரியாணி' பரவாயில்லை என்று பேச்சுகள் நிலவுகின்றன.

அஹ்மத் இயக்கத்தில் வெளியான 'என்றென்றும் புன்னகை', படம் வெளியான நாளில் கூட்டம் இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு படம் பிடித்து WORD OF MOUTH மூலம் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கும் 'மதயானைக்கூட்டம்' பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கூட்டத்தை சேர்த்து இருக்கிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

2014 ல் கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ்



 தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் ‘பிராண்ட் ஈக்குவிட்டியாக’ வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது!


நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ஆண்டு கண்டிப்பாக மாஸ் ஹீரோக்களின் ஆண்டாக இருக்கப்போவது உறுதி. மேலும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! அப்படியென்ன ஸ்பெஷல்? ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர்கள் அனைவருமே, முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.


2014ன் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகப் பாக்ஸ் ஆபிஸில் அஜித், விஜய் படங்கள் மோதவிருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - கெளதம் மேனன், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா - லிங்குசாமி, விக்ரம் - ஷங்கர் இணைப்பில் 'ஐ', சிம்பு - கெளதம் மேனன், சிம்பு - செல்வராகவன், சிம்பு - பாண்டிராஜ், தனுஷ் - கே.வி.ஆனந்த் இணையும் 'அநேகன்', வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 'காவியத் தலைவன்', பாலா - சசிகுமார் இணையும் படம், ஆர்யா - விஜய் சேதுபதி -ஜனநாதன் இணையும் 'புறம்போக்கு', ஜெயம் ரவி - சமுத்திரக்கனி இணைப்பில் 'நிமிர்ந்து நில்', ஆர்யா - ராஜேஷ் இணையும் படம், சூர்யா - வெங்கட்பிரபு இணையும் படம், விஷால் - ஹரி இணையும் படம் உள்ளிட்ட படங்கள் 2014ல் வெளியாக இருக்கின்றன.


மேலே குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்து நடிகர்களுமே முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில், இப்படங்களுக்கு மிகப்பெரியளவில் ஒப்பனிங் இருக்கும். படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை இருக்கும். 2014ல் இது போன்று, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு எந்தப் படத்தினை வாங்கினாலும் கண்டிப்பாகக் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.


விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கை ஒன்று தான். அந்தக் கோரிக்கை, அனைத்துப் படங்களுமே போதிய இடைவெளி விட்டு வந்தால் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,எங்களுக்கும் நல்லது என்பதுதான்.


டி.வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், எந்தப் படத்தின் உரிமை நமக்கு என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. தங்களது நிறுவனத்தின் விளம்பர வருவாய் குறைந்துள்ளதால், சன் டி.வி நிறுவனம் முக்கியப் படங்கள் அனைத்தையும் வாங்கி விளம்பர வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது. அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா', சூர்யா - லிங்குசாமி படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கிறது.


சன் டி.வியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஜி தமிழ் என முன்னணி டி,வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்தினை டி.ஆர்.பியை ஏற்றுவதற்கு பிரபல நடிகர்களுடைய படங்களை வாங்கும் போட்டியில் இறங்கி இருக்கின்றன.


மொத்தத்தில் 2014ம் ஆண்டு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டி.வி நிறுவனங்கள் என அனைவருக்கும் பண மழையில் நனைய வாய்ப்பு இருப்பது மட்டும் உறுதி.

எதிர்நீச்சலால் சங்கத் தலைவரான சிவகார்த்திகேயன்..!!!



 தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.

ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது.

படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது.

'ஆரம்பம்' 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.ஆனால், திரையரங்கள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்போ அந்தளவிற்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 'எந்திரன்' படம் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டியது என்றார்கள்.'ஆரம்பம்' தயாரிப்பாளர் வெளிப்படையாக வசூலைத் தெரிவிக்காத வரை, வசூல் 100 கோடி என்ற குழப்பம் தொடரத்தான் செய்யும்.

படத்தயாரிப்பாளருக்கு லாபம், வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபம், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் என்றால் கண்டிப்பாக 'எதிர்நீச்சல்', 'சூது கவ்வும்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'பாண்டியநாடு', 'ராஜா ராணி', 'தேசிங்குராஜா' எனப்பட்டது.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில், "எங்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த படங்கள் என்றால், 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபம்', 'ராஜா ராணி'. மற்ற படங்களான 'சூது கவ்வும்', 'பாண்டியநாடு', 'தேசிங்குராஜா' ஆகியவை குறைந்த லாபம் சம்பாதித்தது” என்றார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே கொடுத்த லாபத்தைப் பார்த்து, அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களின் வியாபாரம் குறைந்த காலத்தில் 20 கோடியைத் தொட்டு இருப்பது பல முன்னணி நடிகர்களை வியப்பில் ஆழ்ந்தியிருக்கிறது.

2013-ம் வருடத்தில் தடதடவென முன்னேறியது சிவகார்த்திகேயன் தான்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top