.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 31 December 2013

பெண்: நீண்டுசெல்லும் கண்ணீர்ப்பாதை.....??




ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்கவேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்துவிடமுடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.


‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.


‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.


‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.


“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.


சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.


‘பெண்ணாதிக்கம் பெருகிவிட்டது’

போகிறான்
வேண்டுகோள்களைக் கையேந்தி
தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும்
பெண் வாழும் தெருவால்…
அறிவார்ந்த சபைகளில்
பரிமாறும் பணி மட்டும் விதிக்கப்பட்ட
அவளைக் கடந்து
அதிர்ந்தொலித்துப் போகிறது பறை.



பூமியென பெண் உவமிக்கப்படுகிறாள். ஆண் பெரும்பாலும் புயலோடு ஒப்பிடப்படுகிறான். பெரும் காற்றாய் வந்து மரங்களைச் சாய்த்து, கூரைகளைப் பிய்த்தெறிந்து, எதிர்ப்படுவனவெல்லாவற்றையும் துவம்சம் செய்து சுழன்றடித்துப் போய்விடுகிறது புயல். பூமி இருக்கிறது துக்கித்து. அதனால் பெயர்ந்து செல்லவியலாது. பெண்ணும் இருக்கிறாள் செயலற்று. குழந்தைகளின் அடைக்கலமாக, வீட்டை அடைகாப்பவளாக, சமூகத்தால் சூட்டப்படும் ‘ஓடுகாலி’ என்ற பட்டத்தைச் சுமக்கத் திராணியற்றவளாக வீட்டோடு அவளைக் கட்டிவைத்திருக்கிறது ஒரு மாயக்கயிறு.


பாட்டும், சத்தமும் என தன்னியல்பாக இருக்கும் வீடு ஒரு ஆணின் வருகையால் எப்படி ஒடுங்குகிறது என நாம் பார்க்கிறோம். ஓசைகள் ஒரு செருப்பொலியில் உறிஞ்சப்பட மௌனப்பந்தாய் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறது மகிழ்ச்சி. (இதற்கு விதிவிலக்கான வீடுகள் உண்டு. ஆனால், எத்தனை வீதம்…?)


அப்பா வாறார்… ஓடிப்போய் படியுங்கோ…!”


“செருப்பெல்லாம் இப்பிடிச் சிதறிக்கிடந்தால் அவருக்குப் பிடிக்காது”


“அவருக்கு மச்சமில்லாட்டில் சரிவராது…”

அவரால், அவருக்காகவே இயங்கும் வீட்டில் பெண்ணின் இடம் எது…?


வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய வீட்டு வேலை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா…? என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘இல்லை’என்றே பதிலளிப்பர். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பிள்ளைகளைப் பராமரிப்பது, இன்முகத்துடன் இருப்பது… இவையே நல்ல பெண்ணுக்குரிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து பிறழ்பவள் ‘நீலி’என்றும் ‘அடங்காப்பிடாரி’என்றும் அடைமொழிகளால் சுட்டப்படுகிறாள்.


‘பெண் இரண்டாம் பிரஜைதான்’ என்று, எம்மால் கொண்டாடப்படும் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கின்றன.


சீதைக்குக் கோடு…
நளாயினிக்குக் கூடை…
கண்ணகிக்கு பத்தினிப் பட்டம்…
அருந்ததிக்கு வானம்…
புராணம் படி! புரிந்துகொள்…!
நீ அகாலத்தில் இறந்தால்
புன்னகை உறைந்த
உன் புகைப்படத்திற்கு
மாலை போட
மூன்றே மாதங்களில் மற்றொருத்தி…!



மாதவியின் மீது கொண்ட மயக்கம் தீர்ந்து திரும்பிவந்த கோவலனை குற்றம்சொல்லாமல் ஏற்றுக்கொண்ட கண்ணகி கற்புத்தெய்வம். வயதான கணவனை கூடையில் வைத்து பரத்தை வீட்டிற்குத் தூக்கிச்சென்ற நளாயினி போற்றுதற்குரியவள். கல்லிலும் முள்ளிலும் கணவனை நிழலெனத் தொடர்ந்த சீதையின் மீது சந்தேகித்த இராமன் கடவுள். தோற்ற மயக்கத்தால் இந்திரனோடு கூடிய அகலிகை கல்லாய் சபிக்கத்தக்கவள். கோபியரோடு கூடிக்களித்த கிருஷ்ணன் வணங்கத்தக்கவன். நினைத்துப் பாருங்கள்… கிருஷ்ணனைப் போன்று ஒரு பெண் (அவள் தெய்வமேயானாலும்) யாதவர்களோடு கூடிக்களித்திருந்தால் அவளை வணங்கியிருப்போமா என்று. இந்த புராணங்கள், இதிகாசங்கள் வாழ்வியல் நீதியைப் போதித்திருக்கின்றன என்பது ஒரு பக்கம்தான். மறுபக்கம் பெண்ணைக் கீழ்மைப்படுத்தவும் செய்திருக்கின்றன.


புராணங்கள்தான் இப்படியென்றால் நம் பொழுதுபோக்குச் சாதனங்களுள் முதலிடம் வகிக்கும் சினிமாவைப் பாருங்கள். ஆணை முதன்மைப்படுத்தும் கதைகள்…! நேர்மையானவனாக, பத்துப் பேரை பந்தாடும் பலம்பொருந்தியவனாக, இலட்சியவாதியாக, இரக்கமுள்ளவனாக… சற்றேறக்குறைய கடவுளாக கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான். பெண் அவனைச் சார்ந்தவளாக, அரைகுறை ஆடைகளோடு வெண்ணிற மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து நடனமாடுபவளாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறாள். அதாவது கதாநாயகன் விருந்தின்போது தொட்டுக்கொள்ளும் ‘ஊறுகாய்’ மட்டுந்தான் அவள்.


பெண்கள் மீதான அநீதி என்பது காலகாலங்களுக்கும் தொடரும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. போரில் வெற்றிவாகை சூடிய தரப்பின் முதற் பார்வை விழுந்த இடமாக அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. கைப்பற்றப்பட்ட நிலத்திற்குரிய பெண்ணை இழிவுசெய்வது அந்த நிலத்தைச் சார்ந்த ஆண்களை இழிவுசெய்வதற்கொப்பானதாகக் கருதப்பட்டது. நிலத்தைப்போல, ஆநிரைகளைப் போல பெண்ணும் ஆணின் உடமை. அவளைக் கவர்ந்து அவள் உடலையும் ஆன்மாவையும் சிதைப்பது ஆண்மையாம். அதை நாம் இன்று எமது நாட்டிலேயே கண்கூடாகக் காண்கிறோம்.


மேலும், ஓசைநயம் என்பது காதுக்கு இனிமையான விடயமே. ஆனால், அந்த ஓசை நயத்தை பழமொழிகளை இயற்றியவர்கள் எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும்.

‘க’ல்லானாலும் ‘க’ணவன்-‘பு’ல்லானாலும் ‘பு’ருசன்
‘க’ணவனே ‘க’ண்கண்ட தெய்வம்
பொம்பிளை சிரிச்சாப் போச்சு… புகையிலை விரிச்சாப் போச்சு!

சிரிப்பிற்கும் சிறை! 21ஆம் நூற்றாண்டிற்கூட இத்தகைய பழமொழிகள் பிரயோகத்தில் இருக்கின்றன என்பது இன்னும் வேதனையான விடயம்.


இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று பலரும் பேசக் கேட்டிருக்கிறோம். அந்தக் காலக்கண்ணாடியைப் படைக்கும் சிருஷ்டிகர்த்தாக்கள் எழுத்தாளர்கள். சமூகத்தில் ஏனைய எல்லோரையும் விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாக, உணர்வுகளை வாசிப்பவர்களாக, அறிவுஜீவிகளாகப் போற்றப்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையும் ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. அந்த உலகத்திற்குள் எப்போதாவது வந்துபோகும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். வீட்டில், வேலைத்தளங்களில், அரசியலில், அறிவியலில், கலையுலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பழக்கதோஷம் விடவில்லை. அண்மைக்காலங்களில் பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் மொழியை வரையறுப்பவர்களாகவும் இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தையை நீ எப்படிப் பிரயோகிக்கலாம்’என ஆவேசம் கொள்ளுமளவிற்கு விரிந்திருக்கிறது அவர்களது கட்டற்ற அதிகார வெளி.


பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள். வெளிமனிதரைப் புரிதல் இரண்டாம் கட்டம். முதலில் வீட்டிலிருந்து பெருகட்டும் அன்பு. வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும். எனது சக உயிர் பெண் என்று ஆண்கள் நினைக்கும் நாளுக்காக எத்தனை நூற்றாண்டுதான் துயரத்தோடு காத்திருப்பது…?

சந்தோஷம் ....?




சந்தோஷம்தான் நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத்தான். வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமாக இருக்கும். எனவே தேவையானதைத் தேட வேண்டும், தேவையற்றதை தள்ளியாக வேண்டும்.

***

நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் தருவது தூக்கம். எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது. தூங்கி எழுந்தால் துக்கம்கூட மாறிவிடும். குழப்பங்களும் நீங்கிவிடும் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் தூங்கும் நேரத்தில் உடலில் நடைபெறுகிறது. இரைச்சல் இல்லாத, வெளிச்சம் புகாத அமைதியான அறையில் நிம்மதியாக உறங்குங்கள். ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள், வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.

***

வேலையில் மெனக்கெடாதீர்கள். சிலர் வேலை வேலையென்றும், பணம் பணமென்றும் திரிவார்கள். இதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். வேலை என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

வேலையில் தொடர்ந்து நெருக்கடி இருந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருந்தால் அது வேலையல்ல `கஷ்டம்'. தினமும் 8 மணி நேரம் உழைக்க செலவிட்டால் 8 மணி நேரம் ரிலாக்ஸாக இருங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள்.

***

துன்பம் வந்துவிட்டால் எல்லோரும் துவண்டு போய் விடுகிறார்கள். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் சந்திக்காத துன்பமே இல்லை. அவரிடம் ஒருமுறை, `நீங்கள் இவ்வளவு துன்பத்துக்கிடையிலும் பெருமளவு சாதித்திருக்கிறீர்ர்களே எப்படி?' என்று கேட்டார்கள்.

அப்போது அவர் `எந்த துன்பமும் மாறிவிடும்' என்று பதிலளித்தார். அதுதான் நிஜம். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பு. வாழ்வில் இன்பம், துன்பம் எல்லாம் மாறிமாறி வரும். பணமும், புகழும் அப்படித்தான்.

***

தேவையை நிறைவேற்றிக் கொள்ள நீங்களே களம் இறங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு தேவையானதை மற்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச் சொல்லவேண்டாம். இப்படிச் செய்வது சுலபம் என்று பலரும் எண்ணுவது உண்டு. ஆனால் அவர்கள் வாங்கி வந்தபிறகு அதில் குறைகள் இருந்தால் உங்களுக்குத்தான் இழப்பு. அதற்காக கோபப்பட்டால் உங்கள் உறவும்கூட பாதிக்கும். எனவே உங்கள் தேவையை நிறைவேற்ற நீங்களே செயல்படுங்கள். விரும்பியதை வாங்குங்கள், செய்யுங்கள், சாப்பிடுங்கள். மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.

***

வற்புறுத்துதலுக்கு இணங்க வேண்டாம். நண்பர்களுடன் கலந்து கொள்ளும் விழாக்களில் மதுப்பழக்கத்தை கற்றவர்கள்தான் ஏராளம். உங்கள் நண்பர்களும் அதுபோல் `சும்மா சாப்பிடு' என்று கூறி வற்புறுத்தலாம். `வா சினிமாவுக்கு போகலாம்', `ஜாலியாக இருக்கலாம்' என்று உங்கள் நேரத்தை வீணடிக்கலாம். எனக்காக இதைச் செய்து கொடு என்று அலைக்கழிக்கலாம். அவை அனாவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதுதான் உங்கள் மகிழ்ச்சிக்கு கியாரண்டி.

***

உணவுப் பழக்க வழக்கத்தில் ஒழுங்கு முறையை கடைபிடியுங்கள். உணவுக்கட்டுப்பாடு நல்லது. சத்து நிறைந்த உணவை உண்பது உடலுக்கு நலம் சேர்க்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நலமாக இருந்தால் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள். அதேபோல் இரு வேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுங்கள். காலை மாலை நேரங்களில் பார்க், பீச்சில் உலாவி வாருங்கள்.

***

குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சிக்கும், பாதுகாப்புக்கும்தான் மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தான். தேவைக்காக மட்டும் சகோதரர்களை நாடுவதும், ஆசைக்காக மட்டும் மனைவியை நாடுவதும் உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வதாகும்.

உறவுகளிடம் இனிமையாகப் பழகுங்கள். மனைவி, குழந்தைகளை அவ்வப்போது மகிழ்ச்சிப்படுத்துங்கள். சினிமா, சுற்றுலா என்று இன்ப உலா செல்லுங்கள். விளையாட்டு, மகிழ்ச்சி என்று ஜாலியாக இருங்கள். வாழ்வே வசந்தமாக தோன்றும்.

***

ஒரு போதும் விரக்தியாக இருக்காதீர்கள். `எனக்கேன் இந்த சோதனை, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன், செத்துவிடலாம் போலிருக்கு' என்று விரக்தி புலம்பல்களை வெளியிடாதீர்கள். நெருக்கடி வரும்போது சிறிது நேரம் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருங்கள். காலம் சூழலை மாற்றி நிம்மதியை திரும்பச் செய்யும் என்று நம்புங்கள்.

நெருக்கடி நேரத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.

பத்துவிதமான சக்திகள்...!!!





தசமஹவித்யாவின்  பத்துவிதமான சக்திகள்


தசமஹவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்து விதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹா சக்திகளை முழுமையாக உணர முடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் - அஷ்டமா சித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.


ஓர் ஊரில் மாபெரும்ஞானி ஒருவர் வாழ்ந்துவந்தார். தினமும் அவரிடம் பலர்அறிவுரைகேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் "நானே" காரணம் என்றார்.


'நான்' என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள் தனமே.


தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அது சுவை [ நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம்.

1. மாதங்கி : என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி : மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி : பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி : பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா : நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம்.
வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி : கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி : கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கையில் புகைகக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுர பைரவி : பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜய தசமி வரை இவர்களே வணங்கப்படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடபடுவதாக சொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹா சக்தியின் அம்சம் உண்டு. மஹா சக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹா சக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹா சக்திகளின் தொடர்பு கொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளிய வடிவமே.


தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இதுபோல வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இந்த நவ தானியங்களில் அரிசி ,கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யாவாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின்மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹா வித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதி சங்கராச்சாரியார் இதை தொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீ சக்ரத்தில் அமைந்திருக்கும் மஹா சக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்துகொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹா சக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்துவித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

செல்போன் போதை.....??



 
எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.


வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.


அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

 நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.

செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.


கோபுரங்களால் கோடி தொல்லை


செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

 
செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.


கழிவறைகளில்...


யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள்  என்றில்லை, பேருந்து நிலையம்,
மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.


காவல்துறை சொல்வதென்ன?


செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அந்த சுகம் வேண்டுமா..இந்த சுகம் வேண்டுமா?.. தொடர்பு கொள்ளவும்... என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் நிலத்தை விற்பதற்கில்லை,என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.


வெறும் 2 நிமிடங்கள்தான்



சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.


எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.


செல்போன் போதை


வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

தீய பழக்கங்களில் இருந்து விடுபட .....?



மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.


ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.


இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.


தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை


என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.


மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.


ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.


நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.


’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.


நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.


எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.


சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.


முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.


பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள்.


அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.


அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.


இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.


இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)


எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top