.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 30 December 2013

20 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்...!!!




கோலிவுட்டின் மற்றொரு நம்பகமான ஹீரோவாக உருவெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருவெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது. இவர் தற்பொழுது “மான் கராத்தே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.


மான் கராத்தே திரைப்படம் தற்பொழுதுதான் உருவாகிவரும் சூழலில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைகள் ஏற்கெனவே 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் ரிலீசிற்கும் முன்பாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படும். அத்தகைய சாதனையை சிவகார்த்திகேயன் மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துப் பெற்றிருக்கிறார்.


மான் கராத்தே திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில், அவரது முன்னால் உதவி இயக்குனரான திருக்குமரனால் இயக்கப்பட்டு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.


ஹன்சிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

400 கோடிகளைக் குவித்துள்ள தூம் 3




அமீர்கான், கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான தூம் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்கள் வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.



தூம் படவரிசையான தூம் 3 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ல் வெளியானது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தூம் படவரிசைகளான தூம் மற்றும் தூம் 2 ஆகிய படங்களின் வசூலை விட அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.



இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 250 கோடிகள் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இந்தி வெர்சன் 200 கோடிகளுக்கும் மேலாகவும் இதர மொழிகளில் சுமார் 20 கோடிகள் வரையிலும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.



இப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியினை அமீர்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் பிரபிவின் அரிமா நம்பி





விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.


விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.


விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,
பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.

நாளை மாலை வெளியாகிறது வேலையில்லாப் பட்டதாரி டீசர்!




அறிமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துவரும் தனுஷின் இருப்பத்து ஐந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் இயக்குனர் தனுஷின் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், 3 மற்றும் நைய்யாண்டி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவராவார். தனுஷ் கேட்டுக்கொண்டதன் பேரில் இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.


வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்தின் பாடல்களை தனுஷே எழுதியிருக்கிறார். 


மூன்று படத்தின் மெஹாஹிட் பாடலான ஒய் திஸ் கொலவெறி மற்றும் எதிர் நீச்சல் படத்தின் “பூமி என்ன சுத்துதே” போன்ற பாடல்கள் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கைக்கு அனுப்பட்டது ஜில்லா..?





இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜில்லா திரைப்படம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜில்லா படத்தின் தயாரிப்பாளார் ஆர்.பி.சௌத்ரி ஜில்லா படத்தினை இன்று தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், ஜில்லா திரைப்படம் நாளை அல்லது ஜனவரி 2ல் தணிக்கை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.


இதற்கிடையில் ஜில்லா படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பதால், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இன்று தணிக்கை செய்யப்படலாம் என்றும், முழு திரைப்படம் நாளை தணிக்கை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஜில்லா திரைப்படத்துடன் ரிலீசாகவிருக்கும் அஜித்தின் வீரம் திரைப்படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு U சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top