.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 December 2013

ஜடமாகவே இருக்கிறேன்...கவிதை!!!




பணம் கிடைத்திருந்தால்
பணக்காரனாக இருந்திருப்பேன்...

நல்ல குரல் வளம் இல்லை
இருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...

நடிக்க தெரியவில்லை
தெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...

நல்ல படித்திருந்தால்
சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...

எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காது
கிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...

நல்ல நண்பர்கள்
இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...

விமானம் பார்த்தது கூட இல்லை
பிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...

காதலி கிடைக்காததால்
பித்தனாக இருந்திருப்பேன்...

இன்னும் சொல்ல போனால்

மனிதர்களை காணவில்லை
அதனால் மனிதனாக மாறாமல்
ஜடமாகவே இருக்கிறேன்...

மதயானைகளின் அட்டகாசம் - விமர்சனம்!!!!




வறட்டு கவுரவமும் பிடிவாத மும் ஊறிப்போன மனிதர் கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது கதைதான் மதயானைக் கூட்டம்.


சாவு வீட்டின் சடங்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்குகிறது படம். நடனமாடிக் கொண்டிருக்கும் திருநங்கைள் பேசும் வசனங்களினூடே பாத்திரங்களும் பின்னணியும் சொல்லப்படுகின்றன.


ஊர்ப் பெரிய மனிதருக்கு இரண்டு மனைவிகள். இரு குடும் பங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையும் வன்முறை வெறியாட்டமும்தான் கதையின் மையம்.


சாவு வீட்டிலிருந்து படத்தைத் தொடங்கும் புது இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கவனத்தைக் கவர்கிறார். பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கட்டமைத்த விதத்திலும் முத்திரை பதிக்கிறார். வறட்டு கவுரவம், வீம்பு, சாவுச் சடங்குகளின்போது ஏற்படும் கடுமையான மனத்தாங்கல்கள், வன்முறையை அந்தச் சமூகம் அணுகும் விதம் ஆகியவை வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாயகனின் அம்மா கொல்லப்படும் காட்சியில் தெறிக்கும் வன்மம் அச்சமூட்டக்கூடியது. வசனங்கள் இயல்பாக உள்ளன. கறுப்பு நிறத்தைக் கேவலப்படுத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான குரலை நாயகன் எழுப்புவது ஆறுதல் அளிக்கிறது.


படத்தின் தொடக்கம் ஆவணப் படத்தின் தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ரகுநந்தன். பின்னணி இசையிலும் பாடல்களிலும் மண் வாசனை நிறைவாக உள்ளது.


நாயகன் கதிர் நன்றாக நடித்தி ருக்கிறார். முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகரின் நடிப்பு அற்புதம். அவர் அண்ணனாக வரும் வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றமும் சிறப்பான நடிப்புமாக மனதில் நிற்கிறார். கோழைத் தனமாகக் கொலை செய்த பிறகும் தன் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அவர் கை, மீசையை முறுக்கும் காட்சி அபாரம்.


ஓவியா பாத்திரம் கொலை வெறிக்கு நடுவே மென்மையான இளைப்பாறலுக்குப் பயன்பட்டி ருக்கிறது. பொலிவான தோற்றத்தா லும் பளிச்சிடும் புன்னகையாலும் ஓவியா கவர்கிறார்.


ரகு தருமனின் ஒளிப்பதிவு குறிப் பிடத்தக்கது. இரவுக் காட்சிகள் இயல்பான வெளிச்சத்தில் தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளன.


பிற்போக்குத்தனங்களை விமர்சனப் பார்வை இல்லாமல் அணுகுவதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். ஒரு சமூகத்தை அதன் நிறை குறைகளோடு சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் சிக்கலான சாதி அமைப்பும் வெவ்வேறு சாதியினருக்கிடையே கவலைக்குரிய உறவுகளும் உள்ள தமிழ்ச் சமூகத்தில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றிக் கவலை ஏற்படுகிறது. சாதிப் பெருமிதத்தை மட்டுமின்றி ‘வீரத்தையும்’ பறைசாற்றுகிறது இப்படம். இது இந்தச் சாதியினரிடமும் பிற சாதியினரிடமும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.


பண்பாட்டுக் கூறுகளின் யதார்த்தமான சித்தரிப்பு, வலுவான பாத்திரப் படைப்புகள், வசனங்கள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்கள். சாதியக் கூறுகளை அப்பட்டமாக முன்வைப்பது, திரைக்கதையின் தொய்வு ஆகியவை பலவீனங்கள்.


மதயானைக் கூட்டம் அதன் குறைகளை மீறி, மண் சார்ந்த வலுவான படமாக அமைந்துள்ளது.

கடவுளும் தூதுவர்களும் - குட்டிக்கதைகள்!




கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"

சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.

அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.

பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்?

வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்." என்றார்.

1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!…அதிசிய கார் தயார்!!!




உலகத்தின் அதி வேக கார் தயார்!

சென்னை டு டெல்லி – ஒன்னேகால் மணி நேர கார் பயணம்? – இது சாத்தியமா என்றால் – ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம்.


உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன்ட் தன் பிளாக்கில் இதை எழுதியிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் ஒருவரே இது வரை அதி வேக தரை கார் சாதனையாளர். இவர் தற்போது உலகின் அதி வேக கார் ரெடியாகிறது என்று அதன் சில படங்களை வெளியிட்டு இதை தானே 2015 ல் ஓட்ட போவதாய் தெரிவித்திருக்கிறார்.


இந்த காருக்கு யூரோஃபைட்டரின் டைஃபூன் எஞ்சின் ரகம் பொருத்த படுகிறதாம். இந்த அதிவேக கார் பயணம் சவூத் ஆஃப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஆடி கியூ 7 இருந்தாலும் டாட்டா நானோ இருந்தாலும் என்ன பயன்? இருக்கிற டிராஃபிக்கில 30 போகவே மூச்சு முட்டுது இதுல 1610 கிலோமீட்டர் வேகாமான்னு நீங்க சலிச்சிகிறது எனக்கு கேட்கும் – யெஸ் நான் உங்க மைன்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்…………..


இன்னொரு ஆச்சர்யம் இந்த 1610 கிலோமீட்டர் வேகம் வெறும் 0-42 நொடிகளில்…..!!!…

குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க வேண்டும்?




சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது.இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித்தான் செலுத்தப்படுகின்றன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும். ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவதுதான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளி கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். விண்வெளி கேந்திர அதிகாரிகள் ராக்கெட் கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை நடுவானில் அழிப்பர். இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர் 25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திசை மாறியபோது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளி கேந்திரத்தை கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93 மணி நேரம் பிடிக்கிறது. பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல, இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில், சுழற்சி வேகம் மணிக்கு 1569 கிலோ மீட்டராகத்தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளி கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத்தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளி கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில்தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளி கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளி கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன.

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காக செலுத்த முடிவதில்லை. அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீது செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்க வேண்டிய பிரச்சினையே இருக்காது. செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்பு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இல்லையேல் நாடே ஸ்தம்பித்து விடும். எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற அதிக சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்தே செலுத்த இயலும். தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை. ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.

ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம். ஆனால் ஒன்று.

இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது என்பது உறுதி.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top