.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 27 December 2013

கமலுடன் நடிப்பதற்காகவே விஷ்வரூபத்தில் நடிக்கிறேன் - சேகர் கபூர்



பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ள சேகர் கபூர் உலகநாயகன் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தில் நடித்திருந்தார். விஷ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான விஷ்வரூபம்-2 படத்திலும் நடித்துவருகிறார்.

பாலிவுட் படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களையும் இயக்கிவரும் உலகப் பிரபலமான சேகர் கபூர் விஷ்வரூபம் பட வரிசைகளில் “காலனெல் ஜெகநாதனாக” நடித்துவருகிறார்.

விஷ்வரூபம் படத்தில் தான் நடிப்பதற்கான காரணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். விஷ்வரூபம் படம் தனக்கு நம்பமுடியாத வாய்ப்பான கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வழங்கியதாலேயே தான் விஷ்வரூபம் படத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடித்துவரும் விஷ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரலில் வெளியாகலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

"சோர்வு"




சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும்.  அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள்.  தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும்  இருப்பவர்களுக்கும் சோர்வு தோன்றும்.  ஆனால் அந்த சோர்வே நிரந்தரமாக இருந்தால் அது ஒரு நோயாகத்தான் கருத வேண்டும்.
இத்தகைய சோர்வு இருவகைகளில் ஏற்படுகிறது.  உடல் சோர்வாகவும், மனச் சோர்வாகவும் வெளிப்படும்.  உடல் சோர்வை உடற்பயிற்சி மூலமும் ஓய்வின் மூலமும் போக்கலாம்.  மனச் சோர்வை தியானம், யோகா மூலம் போக்கலாம்.

சோர்வடைய காரணங்கள்
 சோர்வு என்பதே உடலின் சக்தியற்ற தன்மைதான்.  சத்து குறைந்த தன்மையின் வெளிப்பாடே சோர்வுதான்.  இந்த சோர்வுக்குக் காரணம் உடல் செல்கள், சுறுசுறுப்பாக இயங்குவதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெற இயலாமல் போவதேயாகும்.

இவை தவிர இரத்தச் சோகை, மந்தம் போன்றவை இருப்பின் அடிக்கடி உடல் களைப்பு மேலிடும். சிலருக்கு சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப்படி ஏறினாலோ உடல் சோர்ந்து அமர்ந்து விடுவார்கள்.

இரத்தச் சோகை காரணமாக மிகக் குறைந்த அளவே ஆக்ஸி-ஜன் திசுக்களுக்கு செல்கிறது.  இதனால் திசுக்கள் போதுமான அளவு சக்தியை பெற இயலாமல் உடலும், மனமும் களைத்துவிடுகிறது.
குடற்புழுக்கள் இருந்தாலும் சோர்வு உண்டாகும்.  ஏனெனில் குடற்புழுக்கள் சத்துக்களை உறிஞ்சி விடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.  இதுபோல் குறைந்த இரத்த அழுத்தம், இரத்தத்தில் குறைந்த சர்க்கரை, நோய்த் தொற்று, கல்லீரல் பாதிப்பு போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகிறது.

மனச் சோர்வு

உடலை சோர்வுக்கு அழைத்துச் சென்று தீராத தொல்லையைக் கொடுப்பது மனம்தான்.  மனம் சோர்வுற்றால் உடலும் சோர்வுறும்.  ஆரோக்கிய மாக மனதை வைத்திருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும்.  மனச்சிக்கல், மன இறுக்கம், மனக் கிளர்ச்சி இவைகளால் உடலில் இரத்தத்தின் வேகம் அதிகரித்து இரத்தம் சூடேறுவதால், பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்குச் சென்றடைகிறது.  இதனால் உடல் உறுப்புகள் அதிக சோர்வு பெறுகின்றன.  இந்த சோர்வு,  நாள் செல்லச் செல்ல நீடித்துக்கொண்டே போகும்.  பல நோய்களுக்கு இதுவே வழியாக மாறும்.
மேலும் சூழ்நிலைக்கேற்ப மனச் சோர்வு உண்டாகும்.

சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளுக்கும் சோர்வு முக்கிய காரணமாகிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதால் அதன் வெளிப்பாடு சோர்வாகத்தான் முதலில் அமையும். சோர்வு என்பது ஒரு நோயல்ல.  அது நோயின் அறிகுறியாகும்.  இந்தச் சோர்வை நாம் எளிதில் விரட்டலாம்.  சோர்வை போக்கினாலே மனிதன் சாதனை படைக்க முடியும்.

சோர்வை நீக்க

சோர்வைப் போக்க நாம் சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.  சோர்வு வரும் போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது.  அல்லது எந்த செயலில் ஈடுபடும்போது சோர்வு வந்ததோ அந்த செயலை சற்று நிறுத்திவிட்டு வேறு சில வேலைகளில்  நம் கவனத்தை திசை திருப்பினால் அந்த சோர்வு நீங்கும்.  மீண்டும் நிறுத்தி வைத்த வேலையை உற்சாகமாகத் தொடரலாம் .

சோர்வைப் போக்க ஓய்வு ஒரு மருந்தாகும்.  ஆனால் அந்த ஓய்வு நீடித்தால் அதுவே சோர்வை வளர்க்கும் விஷமாக மாறும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி அதிகம் பார்ப்பது, அல்லது தனிமையில் அமர்ந்து தேவையற்ற சிந்தனைகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்தால் சோர்வு ஏற்படாது.

உடல் சோர்வைப் போக்க எளிய வழி உணவு முறைதான்.  சிலர் மூன்று வேளை உணவு சாப்பிடுவதோடு வேறு எதையும் இடையில் சாப்பிடமாட்டார்கள்.  இதனால் இவர்களுக்கு உணவு உண்டபின்பும் சோர்வு ஏற்படும்.  சாப்பிடும் முன்பும், சோர்வு ஏற்படும்.  ஆனால் இடையிடையே சிறிது உண்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துக்கொண்டிருக்கும்.  வயிற்றுக்கும் வேலை சீராக கிடைக்கும்.  இதனால் இவர்கள் சோர்வின்றி எப்போதும் புத்துணர்வுடன் காணப்படுவார்கள்.

சோர்வைப் போக்க தினமும் உணவில் அதிக காய்கறிகள், கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  பழங்கள், கோதுமை ரொட்டி, முளைகட்டிய பயறு வகைகள், கீரை, சூப், காய்கறி சாலட் சாப்பிடலாம்.
வயிறு புடைக்க உண்பதை விட அரை வயிறு உணவே உற்சாகத்தை அளிக்க வல்லது.

வலி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், அதிக காஃபி, மது, போதை வஸ்துக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது.

சோர்வை நீக்க சரப்பயிற்சி சிறந்தது.  சரப்பயிற்சி செய்தால் சோர்வு நீங்கும்.  அலுத்துப்போன உடம்பிற்கும் மனதிற்கும் சரசுவாசமே சிறந்த மருந்தாகும்.

சோர்வு ஏற்படும் நேரத்தில், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து சரசுவாசம் செய்தால் உடல் புத்துணர்ச்சி அடைவதை கண்கூடாக நாம் காணலாம்.

உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்வு தரும் எண்ணங்களையே வளர்க்க வேண்டும்.  தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம்,  சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  சோர்வைப் போக்க மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர நிரந்தர நிவாரணம் ஆகாது.  இயற்கை முறையிலும், உணவு முறை மாற்றத்தின் மூலமும் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் வாழ்வோமாக.

மௌனம்....?




வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

தன்னம்பிக்கை ....?




சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.

“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.

இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.

சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.

“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது.

புதுமைக்குத் தேவை சவால் ...?



நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை,
எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர்
ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப்
போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!

டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார். அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.

இந்த ஒரு சவால் மட்டுமே - ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள். விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல “சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.

போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும், சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல;  இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!

                 சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top