.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?




இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அந்த சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சஸ்பெண்ட் செய்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி), இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்தது.

ஐஓஏ மீதான தற்காலிக முடக்கத்தை நீக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகள் இன்னும் தகர்ந்தபாடில்லை. இதற்கு யார் காரணம் என்றால், அது ஐஓஏதான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஐஓசி.

நல்ல விஷயம்தானே அப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் என்ன பிரச்சினை என தோன்றலாம். ஆனால், அப்படியொரு திருத்தம் கொண்டு வரப்பட்டால் இந்திய விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாக இருக்கும் பெரும்பாலான பெரிய மனிதர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அந்தத் திருத்தத்தை செய்யாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள்.

ஐஓசி எச்சரிக்கை 

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு ஐஓசிக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐஓஏவின் நீதி நெறிக்குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை உடனடியாக நிராகரித்த ஐஓசி, தாங்கள் கூறியபடி சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால் ஐஓஏவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அப்போதே ஐஓஏ தேர்தல் தேதியும் (பிப்ரவரி 9) அறிவிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் பனோட் மற்றும் அபய் சிங் சௌதாலா ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது “இந்திய வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐஓஏ தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான அபய் சிங் சௌதாலாவும், பொதுச் செயலரான லலித் பனோட்டும் தியாகிகளாகப் பேசிக் கொண்டார்கள். ஐஓசியின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வழியின்றிதான் இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்களே தவிர, விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

குளிர்கால ஒலிம்பிக் 

இதனிடையே ஐஓஏவின் சட்டத்திருத்தத்தால் மகிழ்ச்சியடைந்த ஐஓசி தலைவர் தாமஸ் பேச், “ரஷியாவின் சோச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ்தான் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அதற்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெற்றுவிட்டால், அதன் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படுவதோடு, இந்தியர்கள் அவர்களின் தாய் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.

பிப்ரவரி 9-க்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெறும் பட்சத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டுவிடும் என எதிர்பா்க்கப்பட்ட நிலையில் அடுத்த பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி சட்டத்திருத்தம் செய்யப்பட்டதில் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது ஐஓசி. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக ஐஓஏவின் நீதி நெறிக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதுதான் அந்த ஓட்டை. இந்த ஓட்டை தெரியாமல் விழுந்ததல்ல, ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் நுழைவதற்காக திட்டமிட்டு போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

தடை நீக்கப்படாது 

இதனால் கோபமடைந்துள்ள ஐஓசி, உங்களின் சட்டத்திருத்தம் முழு மகிழ்ச்சியளிக்கவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் முழுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியொரு திருத்தம் கொண்டு வராத வரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படாது என எச்சரித்திருக்கிறது.

சட்டத்திருத்தத்தில் தேவையில்லாத ஊகங்களையும், சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள ஐஓசி, “ஐஓஏ நிர்வாகியாக இருக்கும் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அவர் தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளிக்கும் வரையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐஓஏவுக்குள் நுழைய முடியாது. ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவோ ஐஓஏ நீதி நெறிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது” என தெளிவாகக் கூறியிருக்கிறது.

சிலர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டபோதும் கூட அங்கிருந்து வெளி யேற அவர்களுக்கு மனமில்லை. தங்களின் பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதோடு, பல்வேறு வெளிநாடுகளையும் இலவசமாக சுற்றிப்பார்த்து விட்டனர். ஒருவேளை அவர்கள் பதவியில் இருந்து விலகினாலும், தங்களின் பிள்ளைகளையோ, பினாமிகளையோதான் அந்தப் பதவியில் அமர்த்த வழி பார்ப்பார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுத் துறைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு, இந்தத் திட்டத்துக்கு இத்தனைக் கோடி ஒதுக்கியிருக்கிறோம் என்று விளம்பரப் படுத்துவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. கடந்த காலங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்தவும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள்கூட ஊழல்பேர் வழிகளின் நெருக்கடியால் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

தாய் நாட்டுக் கொடி 

இந்திய அரசு செய்யாத நல்ல காரியத்தை இப்போது ஐஓசி செய்திருக்கிருக்கிறது. ஐஓசியின் பிடி இறுகியதால் ஐஓஏவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது. ஊழல்பேர்வழிகளை வெளியேற்றி நேர்மையானவர்களையும், முன்னாள் விளையாட்டு வீரர்களையும் ஐஓஏவுக்கு நிர்வாகிகளாக் கொண்டு வரவேண்டும். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் தேசியக் கொடியுடன் சர்வதேசப் போட்டிகளில் தலைநிமிர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது.

விளையாட்டுத் துறையில் ஊழல்பேர்வழிகள் இல்லாத நிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்திருந்தால் காமன்வெல்த் ஊழல் என்ற கறை இந்தியாவின் மீது படிந்திருக்காது. இந்தியாவுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது!

டிசம்பர் 17 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!




தேதி : 17 DEC 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : Inertia


நீங்கள் உங்கள் காதலியை, துணையை எவ்வளவு நேசிப்பீர்கள்? கடலளவு? கடவுள் அளவு?. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும்.. லூசியா அளவு முடியாது. இத்தனைக்கும் பிலிப் அவளை ஏமாற்றி கைவிட்டு ஓடிச் சென்றவன். அந்த பிலிப் இப்போது கிட்னி செயலிழந்து சாகக் கிடக்கிறான். ஒழிந்தான் துரோகி என லூசியா போய்விடவில்லை. நேசிப்பின் இலக்கணம் லூசியா. இசபெல் முனோஸ் என்கிற ஸ்பானிய பெண் இயக்குனரின் படம்.

2:00 pm : What They Don't Talk About Men When They Talk About Love

பேரைச் சொல்லவே அரை நிமிடம் ஆகும் இந்த இந்தோனேசியப் படத்துக்கு உலக அளவில் ஏகப்பட்ட விருதுகள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண் இல்லாதவர்களுக்கு காதல் இருந்தால். டயானா, மாயா - கண் பார்வையற்றவர்கள். டயானா.. அவளைப் போலவே பார்வையற்றவனைக் காதலிக்கிறாள். மாயாவுக்கோ ஒரு டாக்டர் மீது காதல். அந்த டாக்டர் நான்தான் என்று ஒருவன் அவளை ஏமாற்றுகிறான். அவனுக்கு காது கேட்காது. மாற்றுத்திறனாளிகளின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் காதல்.

4:30 pm : Parviz

மஜீத் பர்ஸேகர் இயக்கிய ஈரானியப் படம். நான்கு சுவருக்குள் பாதுகாப்பான வாழ்க்கை, வெளியே சவாலானது. நானூறு வகை மனிதர்களை வெற்றி கொள்ள வேண்டும். சரியான அப்பாக்கோண்டு ( தன் அப்பாவையே சார்ந்திருக்கும் ) அப்பாவி பர்விஸ். இத்தனை நாள் அப்பாவின் கைப்பிடித்து, தோள் அமர்ந்து உலகம் பார்த்தவன், அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள.. தெருவில் வீசப்படுகிறான். இத்தனை நாள் அப்பாவின் விழிவழியே பார்த்த உலகம் அல்ல இது. இது வேறு உலகம். பர்விஸ் இதை ஜெயிக்க வேண்டாம். இதில் ஜீவித்தாலே போதும். இங்கே கவனிக்க வேண்டியது. பர்விசுக்கு 5 வயதோ 10 வயதோ அல்ல.. 50 வயது. 50 வயதுக் குழந்தையின் கதை.

7:00 pm : Wałęsa, Man of Hope


1970களில் போலந்தில் ஒரு அமைதி புரட்சியை நிகழ்த்தியவர் தலைவர் வாலேசா. அவரின் வாழ்க்கைச் சரித்திரம். இயக்கியிருப்பவர் ரஷ்யாவின் ஆந்த்ரே வாஜ்டா. உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவரின் வயது இப்போது 87. வந்த வேகத்தில் களைத்து காணாமல் போகும் கலைஞர்கள் பூமியில் இன்றும் உழைக்கும் ஓர் இளைஞன்.

*****************************

திரையரங்கம் : WOODLANDS SYMPHONY

10:45 am : Beau Travail 


நம்மைவிட திறமையானவர்கள் மீது நமக்கு முதலில் வருவது பொறாமை. கணக்கை போட்டுக் காட்டும் முன் மாணவன் விடை சொன்னால்?. கணக்கு வாத்தியார் அல்ல கலோப்.. ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரும் அதிகாரி. செண்டைன் அவரிடம் பயிற்சிக்கு வந்த வீரன். பல விதத்தில் அவன் அவரைவிட மேல். குருவை மிஞ்சிய சிஷ்யன். குருவுக்கு பொறாமை. உருப்படுவானா செண்டைன்?. பிரெஞ்சு படம். இயக்கம்: கிளேர் டென்னிஸ்.

1:45 pm : HONEYMOONS 


நம்மூர் போலவே அல்பேனியாவிலும், செர்பியாவிலும் காதலுக்கு தடையாக ஜாதி, மதம், அந்தஸ்து போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளன. அத்தனை தடைகளையும் உடைத்து அல்பேனியாவிலிருந்து ஒரு ஜோடி, செர்பியாவிலிருந்து ஒரு ஜோடி மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடிப் போகின்றன. போகிற இடத்தின் புதுச் சூழல், கலாச்சார சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று விளக்குகிற படம். அல்பேனியா, செர்பியா இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு.

2:00 pm : The Future

ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.

6:45 pm : Rock Bottom

வில்லி ஒரு பத்திரிகையாளன். தொழில் பக்தி. கூடவே பயம். ஏனென்றால் அவனுடைய மேலதிகாரி ஹிட்லரும் இடிஅமீனும் கலந்த கலவை. வில்லி பத்திரிகையோடு நின்றிருக்கலாம்.. ஆனால் வயசுக் கோளாறு. அதனால் காதல் வேறு. 'நீ என்ன காதலன்.. எப்பப் பாத்தாலும் வேலை.. வேலை.. ச்சே!' என காதலி எகிற.. 'வரும் வீக்எண்ட் இருநாட்களும் கண்ணே உன்னோடுதான்' என்கிறான் வில்லி. ஹிடலர் சதி செய்கிறான். அந்த இரண்டு நாளுக்கு அவனுக்கு ஒரு அசைன்மென்ட். வேலையா?.. காதலா?.. வில்லிக்கு இரண்டும் வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்படி அடிப்பது?. இயக்கம்: போர்கர் கன்னர்சென்.

*******************************************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI 

11:00 am : EL MUDO 


டேனியல் மற்றும் டியாகோ விகா எனும் சகோதரர்கள் இயக்கியது. நேர்மை நற்பண்பு. ஆனால் நேர்மையாளர்கள்?. நிர்வாண ஊரில் கோவணம் கட்டினால்?. செரேகா கோவணம் கட்டியே தீர்வேன் என்கிறான். இதில் அவன் லாயர் வேறு. விடுவார்களா? அவன் லாயர் லைசன்ஸ் ரத்தாகிறது. கார் கண்ணாடி உடைகிறது. தோட்டா தோள்பட்டையை உரசிச் செல்கிறது. இப்பொழுதும் செரேகா திருந்த மறுக்கிறான். அந்த லாயர்.. லையர் ஆகவே கூடாது. ஆவானா? மாட்டானா?

2:00 pm : The Last Floor

ராபர்ட் வைகிவிஸ்- இளம் போலந்து இயக்குனர். இவருடைய முதல் படம் ஒரு திரில்லர். இந்த இரண்டாவது படமும் ஒரு திரில்லர். திரில்லர் படத்தில் இது வேறு வகை. யுத்தப் பின்னணியில் நிகழும் திரில்லர் இது. கேப்டன் தேர்சின்ஸ்கிக்கு தேசமும் குடும்பமும் இரு கண்கள். போரில் ஜெயிக்க வேண்டும். கூடவே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கடைசித் தளத்தில் அவன் குடும்பத்தைக் கொண்டு போய் மறைத்து வைக்கிறான். அவனால் தேசத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்ததா?

4:30 pm : THE SHOOTER

கோபன்கேஹனில் ஒரு டிவி நியூஸ் சேனலில் மியாவுக்கு ரிப்போர்ட்டர் வேலை. அரசாங்கம் ஆர்டிக் கடல் பகுதியில் ஓட்டை மேல் ஓட்டைப் போட, அதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது என்று கவரேஜ் பண்ணி திரும்புவபளுக்கு.. ஒரு போன் வருகிறது. 'அரசாங்கம் ஆர்ட்டிக் கடலில் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் தினமும் ஒருவனைக் கொல்வேன்'. மியாவுக்கு இது ஸ்கூப் நியுஸ். மிரட்டலை அரசுக்கும் சொல்கிறாள். மிரட்டியவன் சொன்னதைச் செய்கிறான். தினம் ஒரு கொலை. அரசாங்கம் மியாவை சந்தேகப்படுகிறது. ஆனால் அத்தனை கொலைகளையும் செய்பவன் ஒரு முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கி வீரன். சுற்று சூழல் நலன் பேசும் ஒரு திரில்லர்.

7:00 pm : A Touch of Sin

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.

*******************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 am : Club Sandwich 


பணமும் சரி, பாசமும் சரி.. பங்குக்கு யாரும் வந்துவிடக்கூடாது. முழுமையாக நமக்கே வேண்டும். அதுதான் மனித மனம். 35 வயது பலோமாவுக்கு தன் 15 வயது மகன் ஹெக்டர் மீது அளவில்லாப் பாசம். அம்மாவுக்கு மகன்.. மகனுக்கு அம்மா. இடையில் முளைக்கிறாள் ஜாஸ்மின். ஹெக்டர் வயதுப் பெண். ஹெக்டர் இப்போது அம்மாவை விட்டுவிட்டு அம்மணி பின்னால் ஓடுகிறான். பாவம் அம்மா.. உலகெங்கும் இந்த அம்மாக்களே இப்படித்தான். ஃபெர்னாண்டோ எம்பெகே இயக்கிய மெக்சிகோ நாட்டுத் திரைப்படம்.

6:45 pm : The Tree and The Swing
லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.

******************************

திரையரங்கம் : INOX 2

10:45 am : Arrows of the Thunder Dragon


குஹென்பென் அண்ணன். ஜம்யங் தங்கை. இருவருக்கும் தாத்தாவிடம் வில் வித்தைப் பயிற்சி. இருவரும் தேர்ச்சி. உடனே குஹென்பென் உலகம் சுற்றக் கிளம்புகிறான். ஜம்யங்கோ சமையல் அறைக்குப் போகிறாள். கல்யாணம் வரை வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணத்துக்குப் பின் கணவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளோ நான் வில்லையும் அம்பையும்தான் பார்ப்பேன் என்கிறாள். அண்ணனுக்கு ஒரு சட்டம்.. எனக்கு ஒரு சட்டமா?. அம்பறாத்தூணி.. அம்புகள் சகிதமாக அவளும் ஒரு குதிரை ஏறி கிளம்பி விட்டாள். படம் முழுக்க இமயமலையின் வனப்பும் வசீகரமும். இயக்கம்: கிரெக் ஸ்னேடான்.

1:45 pm : Coming Forth By Day


ஹலா லாஃப்டி எனும் ஈரானியப் பெண் இயக்குனரின் முதல் படம். சோட் எனும் பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையே கதை. சோட்டின் பெற்றோர் வயதானவர்கள். அம்மாவுக்கு ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை. அம்மா இரவுப் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். நோயாளியான அப்பாவை இரவு முழுக்கப் பார்த்துக் கொள்வது சோட்டின் வேலை. சோட்டின் தனிமையைப் பேசுகிற படம்.

4:15 pm : Sunlight, Moonlight, Earth

ஈரான் மொழிப் படம். அந்த விவசாய கிராமத்துக்கு புது வரவு ஷேக் எனும் ஒரு நாடோடி. ரத்தினக் கம்பளம் விரித்து, அவனை வரவேற்பார் அந்த ஊரில் யாரும் இல்லை. இவனொருத்தன்.. ஏன் வந்தான்? என்கிற எரிச்சல்தான். அந்த ஊர்ப் பெண்ணொருத்தி ஷேக்கை காதலிக்கிறாள். ஆனால் அவளைக் காதலிப்பவனோ வேறு ஒருத்தன். சொந்த ஊர்க்காரனை விட்டுவிட்டு, எங்கிருந்தோ வந்தவனை காதலிப்பதா? ஷேக்குக்கு எதிராக ஒட்டு மொத்த கிராமத்தையே திருப்புகிறான். இதில் ஒரு விசித்திரம்.. ஷேக் ஒருத்தன்தான் அந்த ஊர்க்காரன்.. மற்றவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள். இயக்கம்: அலி கவிட்டான்.

6:45 pm : The Illusion
ஆசைப்படாதே- இது புத்தன். அத்தனைக்கும் ஆசைப்படு- சத்குரு. எப்படியோ.. ஆசைகளால் ஆனது உலகம். கலர்கலரான ஆசைகள். வீடுகட்ட ஆசை, எதிரியை வீடுகட்டி அடிக்க ஆசை. 24 மணிநேர மின்சாரம் பேராசை. பிடித்த மீனை மறுபடியும் ஆற்றுக்குள் விடும் பைத்தியக்கார ஆசை. ஆசைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம். ஓர் இரவு 6pm டூ 6am நீங்கள் நினைத்தது நடக்கும். ஆசைப்பட்டது கிடைக்கும். அதற்கு நீங்கள் ஜெர்மனியில் இருக்கும் அந்த குறிப்பிட்ட பாருக்கு செல்ல வேண்டும். அங்கே உங்கள் கனவை நனவாக்கும் ஒரு மந்திவாதி இருக்கிறான், இதோ இப்போது அந்த பாருக்குள் இருக்கும் அந்த 8 பேரின் ஆசைகளை நிறைவேற்ற அவன் ரெடி. ரோலான்ட் ரீபர் இயக்கிய ஃபாண்டசி ஜெர்மன் படம்.

கோதுமை தோசை - சமையல்!




தேவையானவை:

கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.

செய்முறை:

 ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும். சூடாக இருக்கும் தோசைக்கல்லில், ஒரு கிண்ணத்தால் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையை ஊற்றி அதன் மேல் துருவிய கேரட்டை தூவவும். கரண்டியால் அதை அழுத்திவிட்டு சுற்றி வர எண்ணெய் விட்டு மூடி, வெந்ததும் தோசையை திருப்பி மறுபுறம் எண்ணெய் விட்டு மொறுமொறுவென வெந்ததும் எடுத்து விடவும். இதற்கு வரமிளகாய், பூண்டு சட்னி மேலும் சுவையைக் கொடுக்கும்.

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?



சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?

அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் - ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்" - பழமொழி விளக்கம்



"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"


நேர் விளக்கம்

காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

அறிந்த விளக்கம்
:
சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

அறியாத விளக்கம் :

1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top