.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 December 2013

ரஜினி 63 - மறுபார்வை: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?




மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.


‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’


ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.


எம்.ஜி.ஆர். - ரஜினி 


சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.


ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’


உதை விழும் 


ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.


திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.


அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’’


மலராத முட்கள் 


நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.


‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.


மாபெரும் சுதந்திரம் 


ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’


மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’


உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!

சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது - மகாத்மா காந்தியடிகள்!



யக்ஞம் என்பது அழகும் சக்தியும் நிறைந்த ஒரு சொல்லாகும். யக்ஞம் என்பதற்கு நேர் பொருள் வழிபாடு என்பதே. அதாவது தியாகம் என்பதுதான். எவ்விதத் தியாகமும், எவ்விதத் தொண்டும் யக்ஞம்தான். யக்ஞத்தினால் அதாவது யாகத்தினால் மனித வர்க்கமே வாழ்கின்றது.


ஹோமத் தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்போதுதான் நம் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.


சாஸ்திரங்களில் விவரங்களாக்கிய எல்லா யக்ஞங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. உயிர்ப்பிக்க வேண்டாம். அப்பெயரில் நடக்கும் சில சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது. இன்று அச்சடங்குகளில் சிலவற்றிற்குக் கூறப்படும் பொருள் வேதகாலத்தில் எப்போதாவது கூறப்பட்டதா என்பது எனக்குச் சந்தேகமாகவே உள்ளது. அவற்றில் சில பகுத்தறிவு அல்லது தர்மம் எனும் சோதனைக்கு முன் நிற்க முடியாது. இடம், காலம் எவையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் சமயத்தின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்ட வழக்கங்கள், இடம், காலம் இவற்றிற்குகந்தவாறு மாறுகின்றன.

                                                                                                  
                                                                           -மகாத்மா காந்தியடிகள்

காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட....



காலையில் விழித்தெழும் போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்" தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...


முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


அடுத்த நாள் எழும் போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல்துலக்குவது, பால், காபி, டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.


சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்" செய்து கொள்ள சில யோசனைகள்...


* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.


நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.



* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம். துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும் போது, உங்களிடையே உள்ள கலைத்தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்தும் போது வேலையில் கவனம் குறையும்.


அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும் போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

பெண்களைக் கவரவா உடற்பயிற்சி?



தான் செய்யும் அல்லது செய்ய நேரும் ஒவ்வொரு காரியத்தையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவே ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். நாடு, மொழி, இன வேறுபாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் மனிதர்கள் இப்படி நினைப்பவர்களாகத் தான் உள்ளார்கள். இப்ப‌டியான‌ செய்கைகளுக்கு டிஃப‌ன்சிவ் (defensive attitude) அட்டிடுட் என‌க் கொள்ள‌லாம்.


உதாரணமாக, நேற்று ஜிம்மிலிருந்து திரும்பி வீட்டிற்குள் நுழைந்தேன். நண்பர் ஒருவர் வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகளுக்குப் பிறகு உடற்பயிற்சி பற்றிய பேச்சு வந்தது. நானும் நண்பரும் உடற்பயிற்சி தேக ஆரோக்யம் என்றும் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்க அந்த இன்னொரு நபர், ஜிம் என்பது பயனற்ற நேர விரயம் என்றும், தேகப்பயிற்சி செய்யாதவர்கள் ஆரோக்கியமற்றவர்களா? எனக் கேள்வி எழுப்பியும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் மட்டுமே செய்ய விரும்பும் ஒன்று என்பன உட்பட பல எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருந்தார்.


தேக‌ ஆரோக்ய‌ம் பேணுத‌ல் என்ப‌து ஒரு ந‌ல்ல‌ பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌ செய்கை. யாரோ ஒரு சில‌ர் செய்யும் த‌வ‌றுக‌ளுக்காக‌, ஜிம் செல்லும் அனைவ‌ருமே இப்ப‌டித்தான் என்று கொள்வ‌து த‌வ‌றான‌து. ஆனால், இந்த‌ போக்கு ஆண்/பெண் வித்தியாச‌மின்றி அனைவ‌ரிட‌மும் உள்ள‌து. மேலும், பெரும்பாலும் தேகப்பயிற்சி செய்யும் ஆண்மகனைப் பற்றி இவ்வாறு தவ‌றாக எண்ணுவது எளிதாக மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்ந்து யோசித்ததில் விஷயம் இவ்வளவுதான்.


ஆங்கில‌த்தில், கணிதத்தில் ப்ராப‌பிலிட்டி (probability) என்று சொல்வார்க‌ள். அதன்படி யோசித்தால், நூறு பேரில் ஒரு பகுதியினருக்கு தேக ஆரோக்யம் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. மீதம் உள்ளவர்களில் பலரை சோம்பேறித்தனம் தடுக்கிறது. அவர்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால், இன்னும் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களால் தேகப்பயிற்சி செய்ய லாயக்கற்றவர்களாகி விடுகிறார்கள். மீதமுள்ளவர்களில் ஒரு சிலருக்கே தேகப்பயிற்சி செய்ய காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆரோக்ய‌மும் அழ‌கான‌ உட‌லையும் வெறுப்ப‌வ‌ரும் உண்டோ?


ஆனால், இவ்வாறு இல்லாத‌ ம‌னிதர்கள்தாம், தேகப்பயிற்சி செய்ய முடியாத த‌ன் நிலையை நியாய‌ப்ப‌டுத்தவும், தேகப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்யம் மற்றும் அழகான உடலால் கவனிக்கப்படுவதை ஜீரணிக்க முடியாமலும் ஜிம் நேர விரயம் என்றும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் செய்ய விரும்பும் ஒன்று என‌வும் ப‌ல‌வாறாக‌ கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்கள்.


வில‌ங்கியல் மற்றும் தாவரவியலில் ஜென‌டிக்ஸ் (genetics) என்று ஒன்று வ‌ருகிற‌து. டி.என்.ஏ (DNA) என்று சொல்வார்க‌ள். டெக்னிக‌லாக‌ பார்த்தால் இது ஒரு இர‌ட்டைவ‌ட‌ச் ச‌ங்கிலித் தொட‌ர் ஆகும். இதில், அடினைன், குயின‌ன், ச‌யிட்டோசைன், தைம‌ன் என்கிற‌ நான்கு வேதிப்பொருள்க‌ள் தங்களுக்குள்ளேயே இரண்டிரண்டாக ப‌ல்வேறு துணைக‌ளாக‌ அடுக்க‌டுக்காக‌ உள்ள‌ன. எவ்வாறெல்லாம் துணைகள் இருக்கலாம் என்பதை காம்பினேஷன் (combination) என்கிற கணித முறைப்படி அறியலாம். இவைக‌ள் தான் பிற‌க்கும் குழந்தையின் உருவ‌ம், எடை, வ‌ள‌ர்ந்த‌பின் அத‌ன் குண‌ம் முத‌லான‌ அனைத்தையும் முடிவு செய்கின்ற‌ன‌.


ந‌ன்றாக‌க் கூர்ந்து க‌வ‌னித்தால், ஒரு உண்மை புரிகிற‌து. அது, தேக‌ப்ப‌யிற்சி தொடர்ச்சியாக‌ செய்யும் போது அந்த‌ செய‌லுக்கான‌ சார‌ம், அதாவ‌து, நிறைய‌ ஆக்சிஜன் உட்கொள்ளும் தன்மை, சீரான‌ ர‌த்த‌ ஓட்ட‌ம், க‌டின‌மான‌ வேலையை தொட‌ர்ச்சியாக‌ செய்யும் திற‌ன், அவ்வாறு செய்யும் போது பல்வேறு ஹார்மோன்கள் சீராக சுரக்கும் தன்மை, ர‌த்த‌ நாள‌ங்க‌ளில் அடைப்பு ஏற்ப‌டாத‌வாறு ர‌த்த‌ம் ஒடும் த‌ன்மை முத‌லான‌ சார‌ங்க‌ள் இந்த‌ டி.என்.ஏ ச‌ங்கிலித்தொட‌ரில் கால‌ப்போக்கில் ப‌திந்து விடுகிற‌து. இவ்வாறு ப‌திந்த‌ சார‌ங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறைக‌ளுக்குக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.


இவ்வாறு க‌ட‌த்த‌ப்ப‌டும் சார‌ங்க‌ள் தான் விளையாட்டுத் துறை மற்றும் ஃபாஷன் உலகில் ப‌ல்வேறு சாத‌னையாள‌ர்க‌ள் உருவாக‌க் கார‌ண‌ங்க‌ள் ஆகின்ற‌ன‌. இத்துறைக‌ளில் ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ள் பிற‌ப்பிலேயே அத்துறையில் சிற‌ந்து வ‌ருவ‌த‌ற்க்கான‌ உட‌ல்வாகைப் பெற்றவ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தைக் காண‌லாம். முன்னாள் டென்னிஸ் வீர‌ரின் ம‌க‌ள் ஃபாஷ‌ன் ம‌ற்றும் சினிமா உல‌கில் சிற‌ப்பாக‌ இருப்ப‌தை நாம் க‌ண்கூடாக‌க் காண்கிறோம். ஆத‌லால், தேக‌ப்ப‌யிற்சி செய்வ‌தில் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நாம் ஆழ‌மாக‌ப் புரிந்து கொள்ள‌வேண்டும்.


உண்மையில், தேக‌ ப‌யிற்சி என்ப‌து க‌ட்டாய‌ம் இல்லை. செய்வ‌து ந‌ல்ல‌து. கட்டாய‌ம் செய்ய‌ வேண்டும் என்றில்லை. தேக‌ ப‌யிற்சி செய்வோரை, ஒரு ந‌ல்ல‌ செய‌லை நேர‌ம் ஒதுக்கி, சிரமேற்கொண்டு முய‌ற்சிப்போர் என்று கொள்வ‌தே உசித‌ம். மணமானவுடன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென்று கஷ்டப்பட்டு ஓடியோடிப் பணம் சேமிக்கும் மனிதர்கள், இது போன்று தேகப்பயிற்சி மேற்கொண்டால், தனக்கும், தன் சந்ததியருக்கும் பொக்கிஷமாய் ஆரோக்யத்தின் சாரத்தை சேகரித்து வழங்குவது, கோடானு கோடி பணம் சேமித்துத் தருவதற்க்குச் சமம். மேலும், அடுத்த‌ த‌லைமுறையின் ச‌ர்வைவ‌லுக்குத் தேவையான‌ அத்தியாவ‌சிய‌மான‌ ஆரோக்ய‌த்தின் சார‌ங்க‌ளை இது எளிதாக‌த் த‌ருமானால் இதை சிரமேற்கொண்டு செய்வ‌து முக‌வும் வ‌ர‌வேற்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று என்ப‌தில் எள்ளள‌வும் ச‌ந்தேக‌மில்லை.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்கள்!



மந்திரங்களைக் கேட்பதால் அல்லது உச்சரிப்பதால் எழும்பும் த்வனி மனிதனுடைய உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தீய சக்திகளை அகற்றி விடுகிறது. மந்திரம் என்ற அரிய கருவி, உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் ஒரு மனிதனை மாற்றுகிறது. சில நேரங்களில் மனிதன் ஆற்றிய செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்துகின்றான். மனிதனுடைய வயது ஏற்றமடையும் போது, அவனது ஞாபக சக்தி பலவீனமடைகிறது. இந்த மந்திரங்கள் மனிதனுடைய ஞாபக சக்தியைப் பலப்படுத்தி, செயலற்ற நிலையிலுள்ள எண்ணங்களுக்கு புத்துணர்வு கொடுத்து, அவனை நல்லதொரு வழியில் வழி நடத்திச் செல்லுகின்றது.


மந்திரங்களின் கருத்துக்கள் தெரியாமலிருந்தாலும் நம்மில் பலர் பல முறைகள் கேட்கின்றோம் அல்லது உச்சரிக்கின்றோம். அவற்றிலிருந்து எழும்பும் த்வனியானது மனிதனுக்கு புதிய பலத்தைக் கொடுத்து, அவனுடைய எண்ணங்களுக்கு ஒரு வடிகால் கொடுக்கத் தவறுவதில்லை. இவை ஒரு மனிதனுக்கு கர்ம வழியையும், பக்தி வழியையும் தெரியப்படுத்துகிறது. கர்ம வழி மனிதனுக்கு இந்தப் பிறப்பின் கடமையை உணர்த்துகிறது.



கர்ம வழியானது, அவனுடைய இந்தப் பிறவியின் நோக்கத்தையும், அற்புதமான செயல்களை நிகழ்த்தக்கூடிய வல்லமையும் கொண்டது என்று மனிதனுக்கு ஞாபகப்படுத்துகிறது. கடமையை மூச்சாகக் கொண்ட மனிதன் சில சமயம் குழப்பமடைகின்றான். இந்நிலையில் இந்த மந்திரங்கள் அவனைக் குழுப்பத்திலிருந்து விடுவித்து, அவனுடைய நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. மனிதனுடைய நிலையற்ற செயல்களுக்கு ஒரு வடிவம் கொடுப்பதற்கு இந்த மந்திரங்கள் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது. இந்தப் பிறவியில் ஆற்றிய செயல்களில்தான் மனிதனுடைய கர்ம வழி அடங்கியுள்ளது என்ற உண்மையை அவனுக்கு உணர்த்துகிறது.


மந்திரங்கள் ஒரு மனிதனுக்கு பக்தி வழிமுறையின் சிறப்பை எடுத்துரைக்கத் தவறுவதில்லை. பக்தி வழியின் மூலம் இறைவன் நம்மோடு இருப்பதாக உணர்கின்றோம். இந்த வழிமுறை தியானத்தின் உயர்வினை விளக்குகின்றது. தியானத்தின் மூலம் மனிதனின் உள்ளம் தூய்மை பெறுகின்றது. பால் போன்ற வெள்ளை மனம் கொண்ட மனிதனின் எண்ணங்களும் தூய்மையாகவே இருக்கின்றன. மனிதனின் களங்கமில்லாத உள்ளத்திலிருந்து எழும்பிய எண்ணங்களால் ஆற்றிய செயல்கள் நல்லவைகளைச் செய்தது மட்டுமில்லாமல், அவற்றால் அவனுக்குள்ளே உறைந்து கிடக்கும் அந்தராத்மாவைப் பற்றி அறிந்து கொள்கின்றான்.


போராட்டம் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் மனம் குழப்பமடைந்து கலங்கிய நிலமையில் இருக்கின்றான். போராட்டமே அவனுடைய வாழ்க்கை என்று மாறியதால், அவன் சரியான திசையை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல், வழி தவறி செல்லுகின்றான். மாறுபட்ட சூழ்நிலைகள் அவனை தத்தளிக்க வைக்கின்றன. ஆனால் மந்திரத்தால் பெற்ற பக்தி வழியின் மூலம் எந்த மனிதனும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ முற்படுகின்றான். தன்னை மாற்றிக் கொண்டு வாழும் மனிதன் எத்தனை துன்பங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றவன். அந்தந்த கால கட்டத்தில் வெவ்வேறு உணர்வுகளோடு வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தயாராகிக் கொள்கின்றான்.


அவனுடைய மனம் அமைதி பெறுகிறது. அமைதியான மனம் தேவையில்லாத சிந்தனையை வளர்ப்பதில்லை. எந்த ஒரு மனிதனும் தனக்கு அப்பாற்பட்டு எதையும் யோசிப்பதில்லை. எந்தச் செயலை அவனால் செய்ய முடிந்ததோ அதனை ஆற்றுவிப்பதற்கு தேவையான கர்ம மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் பிரயோகித்து செயல் படுத்துகின்றான். மந்திரங்கள் மனிதனுடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அவனுக்கு இந்தப் பிறவியின் கர்ம வழியைத் தெரியப்படுத்தி, அதனுடன் பக்தி மார்க்கத்தின் சிறப்பான அம்சங்களை விளக்கி, அவனுக்கு நல்லதொரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கிறது. மந்திரங்கள் அறிந்த மானிடன் வாழ்க்கையின் சிறப்பான வழியினைத் தெரிந்து கொள்கின்றான், வாழ்வில் பேரானந்தத்தை பெறுகின்றான்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top