.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 December 2013

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

 

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.


அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.


"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.


ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.


ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்...

தமிழன் என்று சொல்வோம்....

தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

தவறு செய்தாள் மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!



‘சாரி… நான் உங்களை, ‘டீஸ்’ செய்திருக்கக் கூடாது…’ என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; ‘பரவாயில்லை… ஐ டோன்ட் மைண்ட்’ என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல் அடித்த ஆணிடம் கூறிப் பாருங்கள்… ‘மவனே… இன்னொரு தடவை கிண்டல் பண்ணினே…’ என, மூக்கு விரிய, உங்களை அடிக்க வருவார்.


அரை மணி நேரத்திற்குப் பிறகு தான், ஆசுவாசப்படுவார்.ஒரு பெண்ணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ நடந்து கொண்டால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அப்பெண் எதிர்பார்ப்பார் எனவும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய பாதிப்பே கூட ஏற்படும் என்றும், பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


எனினும், மன்னிப்பு கேட்ட அடுத்த நொடியே, அந்தப் பெண், சாதாரண மனநிலைக்கு வந்து விடுவார்; அவருடைய ரத்த அழுத்தமும் சாதா நிலைக்கு வந்து விடும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதே போல் ஒரு ஆணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ பேசி விட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் லேசில் பணிய மாட்டார்.


 மேலும், அவருடைய ரத்த அழுத்தம் சீரடையவும், கோபம் தணியவும் வெகு நேரம் ஆகும் என்றும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.மன்னிப்பு கேட்பது, மாத்திரைகள் விழுங்குவதைத் தவிர்க்க சிறந்த மருந்து என்று, அந்த ஆய்வை நடத்திய பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டியவை!



 நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. ஃபேஸ்புக்கானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேருக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்வது மிகவும் எளிய விஷயமாக இருப்பதே இதன் காரணமாகும்.


இது நம்மை அனைவருடனும் தொடர்பில் இருக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் உதவிகரமாக இருந்தாலும், தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க அவற்றை கவனத்துடன் கையாள வேண்டும்.


இன்றைய ஃபேஸ்புக் மனிதர்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உங்களுடைய விபரங்களை வைத்தே உங்களைப் பற்றி கணிக்கவும் வகை செய்து விடும். நீங்கள் ஒரு உறவில் உறுதியாக இருக்கும் வேளைகளில் ஃபேஸ்புக்கில் சில அடிப்படையான தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.


உங்கள் பெண் நண்பரின் விபரங்களை வேவு பார்த்தல், அனுமதியின்றி ஊடுருவுதல், அவருக்குத் தெரியாமலேயே அவருடைய நண்பர்களுடன் நட்பு பாராட்டுவது போன்ற செயல்களை இந்த தவறுகளில் சிலவாக குறிப்பிட முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் துணைவருக்கு எதிராக திரும்பாத வகையில் செயல்பட வேண்டும்.


சில நேரங்களில், அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை முகநூலில் அவருக்குத் தெரியாமல் வெளியிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டு, மீண்டும் இணைய வழியில்லாமல் போய் விடும். உங்கள் துணையின் விபரங்களை எப்பொழுதும் வேவு பார்க்க வேண்டாம். இது அவளுடைய கற்பனை உலக தனிமையை பாதித்து விடுகிறது.


தங்களுடைய திறமையை நிரூபிக்கவோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடனோ சில பேர் விளையாட்டுத் தனமாக செய்யும் அடிப்படையான தவறுகளில் ஒன்றாக இது உள்ளது.

உங்கள் துணைவர் எவ்வளவு தான் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவருடைய சுய விபரங்களை அவருக்குத் தெரியாமல் ஊடுருவிப் பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் அவளுக்கும் தெரிந்த நண்பர்களுக்கு 'நட்பு கோரிக்கைகள்' அனுப்புவது நல்லது தான்.


ஆனால், அதே விஷயத்தை அவளுக்கு மட்டுமே தெரிந்து, உங்களுக்குத் தெரியாத அழகிய பெண்ணொருத்திக்கு அனுப்பினால், அது கொண்டு வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.


நீங்கள் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்து, அவளுடைய 'அப்டேட்ஸ்'களை கவனிக்காமலும், 'லைக்' போடாமலும் இருந்தால் கூட பிரச்சனைகளாக உருவெடுக்கும். நீங்கள் தொடர்பில் இருக்கும் போது, அதுவும் ஃபேஸ்புக் வழியாகவும் தொடர்பில் இருக்கும் போது, நீங்கள் பதிவிடும் எதிர்வாதம் மிக்க மற்றும் கண்ணியமில்லாத பதிவுகளை சற்றே கவனத்துடன் பரிசீலனை செய்யுங்கள்.


பலருக்கும் தெரியக் கூடிய இது போன்ற பதிவுகளால், அவளுடைய நண்பர்களும் கூட கேலி செய்து மோசமான நிலைக்கு அவளை தள்ளி விடுவார்கள். உங்கள் காதலியுடன் நீங்கள் தனிமையில் செய்பவை அனைத்தும் தனிமையாகவே இருக்க வேண்டும்.


உங்கள் நண்பர்களிடம் ‘பாப்புலாரிட்டி' பெற வேண்டும் என்ற நோக்கில், இது போன்று நெருக்கமான படங்களை பதிவேற்றம் செய்வதை அறவே நினைத்தும் கூட பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் காதலியின் தனிமை மற்றும் உணர்வுகளை பாதிக்கும்.


நீங்கள் அவளுடைய பதிவுகளுக்கு அவ்வப்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அவளை கவனிக்கிறீர்கள் என்பது தெரியும். எனினும், எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் அவரை வெளிப்படையாக விமர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது.

உடல் வலிமை தரும் சைக்கிள் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி!



 உடற்பயிற்சிக்கு மிகவும் சிறந்ததாக சைக்கிளிங் (சைக்கிள் ஓட்டுதல்) மற்றும் ரன்னிங் (காலில் ஓடுதல்) ஆகிய இரண்டும் உள்ளன. இவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், இரண்டு உடற்பயிற்சிகளுமே உடலுக்கும், நல்வாழ்விற்கும் தனித்தனியான பலன்களை தருகின்றன.


ஓடுவதன் மூலம் சைக்கிள் ஓட்டுவதை விட அதிகப்படியான கலோரிகளை எரித்திட முடியும். ஆனால், ஓடுவதன் மூலமாக உங்கள் உடல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக ஏகப்பட்ட வலியும், தசைபிடிப்பும் வர வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.


அடிப்படையில் திறன்களை மதிப்பிடும் போது, சைக்கிள் ஓட்டுவதற்கே அதன் ஆரோக்கிய விளைவுகள் மற்றும் பலன்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் சைக்கிளில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, உடலிலுள்ள கலோரிகள் அதிகளவில் எரிக்கப்படுவதுடன், உங்களுக்கு குறைந்த அளவே சோர்வை ஏற்படுத்தும் ஒரு போக்குவரத்து சாதனமும் கிடைத்து விடும்.


நீங்கள் ஓட முடிவெடுத்தால் அதற்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். செலவினங்களை கணக்கில் கொள்ளும் போது, செலவே இல்லாததாகவும், பராமரிப்பு தேவையற்றதாகவும் இருக்கும் ஓட்டம் முதலிடத்தை எளிதில் பிடிக்கிறது.


ஓடுவதை விட சைக்கிள் ஓட்டுவது அதிக மகிழ்ச்சியைத் தரும் உடற்பயிற்சியாக உள்ளது. தொலைவாக செல்லும் வேளைகளில் ஓடுவதை விட, சைக்கிள் ஓட்டுவது குறைந்த வலி தரும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிப்பதில் திறன் மிக்க உடற்பயிற்சியாக இருப்பது ஓடுவது தான்.


ஒரே கால அளவில் சைக்கிள் ஓட்டுவதை விட, ஓடுவதன் மூலம் 15-20% அதிக கலோரிகளை எரித்திட முடியும். இந்த ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டுவதை மிகவும் நிலைநிறுத்தும் காரணமாக உள்ளது.


இரண்டுமே உடற்பயிற்சி செயல்கள் என்றாலும் கூட, நீங்கள் சைக்கிளை பயன்படுத்துவதால் ஓடும் நேரத்தை விட குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், இரண்டு மடங்கு வேகத்திலும் தொடர்ந்து செல்ல முடியும். உங்கள் உடல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் போது ஓடுவது சற்றே உங்களை பின்னோக்கி இழுக்கிறது.


குறிப்பாக உங்களுடைய மூட்டுகள் அதிகளவு வலியையும், ஓடுவதால் ஏற்படும் உராய்வையும் எதிர்கொள்கின்றன. சைக்கிள் ஓட்டும் போது அது உங்கள் மூட்டுகள் மற்றும் உடல் பகுதிகளை இதமாகவே வைத்திருக்கும் வகையில் பயன்படுவதால், காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைகிறது.

எளிய முறையில் சரும பராமரிப்பு வழிகள்!



 வெயில் காலங்களில் நமது சருமம் சீக்கிரமாக வாடிவிடும் அதேபோல் மழைக்காலங்களில் வறண்டு காணப்படும். இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை பராமரிக்கலாம். உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு முகம் முழுவதும் பருக்கள் வர பல காரணங்கள் இருக்கின்றன.


இந்த சரும பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மனஅழுத்தம். சர்க்கரை மற்றும் சீஸ் வகைகளான சாக்லெட்களும் அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் அழகான முகத்தில் பருக்களும் அதனால் ஏற்படும் தழும்புகள் கொடுமையானவைகளாக இருக்கும்.


உங்கள் சருமத்தை சிறந்த வழியில் கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிதைவு ஏற்பட்டாலோ வீட்டிலேயே சிகிச்சை செய்து இந்த சரும பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணலாம். பருக்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சிகிச்சை செய்வதற்கான வழிகளை பார்க்கலாம்.


• தேன் மற்றும் பட்டையை சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த தேன் மற்றும் லவங்கப்பட்டையின் கலவை சரும பாதிப்புகளுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கும். லவங்கத்தில் உள்ள ஆண்டிபாக்டீரியல் தன்மை பாக்டீரியாக்களை அழிக்கும் மேலும் தேன் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு பொருளாகும். இந்த கலவையை சரும பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?


• முட்டையின் வெள்ளைக்கரு நமது டயட்டில் கால்சியத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாது சரும பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டை வெள்ளைக்கரு சரும பாதிப்புகளுக்கு ஒரு எளிமையான தீர்வாக இருக்கும்.


அதில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் கனிமங்கள் சரும பாதிப்பை எதிர்த்து செயல்பட்டு உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும். மலிவான விலையில் இந்த முறை உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகத்தில் சிறிது நேரம் தடவி காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.


• இன்று கடைகளில் கிடைக்கும் சரும கிரீம்களில் இருக்கும் முக்கியமான தாதுப்பொருள் பப்பாளிதான். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறிது பப்பாளியை மசித்து உங்கள் சருமத்தில் தடவவும். 15 -20 நிமிடங்கள் காயவிடவும். வெந்நீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவவும். இது உங்கள் சரும பாதிப்புகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும்.


• எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கான முக்கிய தீர்வாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சரும பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். எலுமிச்சை சாற்றை உங்கள் சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.


மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை பக்குவப்படுத்தி செத்த அணுக்களை நீக்கும். சருமத்தை வெளுப்பாக்க இது உதவுவதால் உங்கள் சருமத்தை சிறந்த முறையில் பராமரிக்க உதவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top