.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 6 December 2013

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

மண்டேலா என்ற மாணிக்கம் - சிறப்புக்கட்டுரை!



நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

கார் டிரைவர்கள் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!



ஜனவரி 15ஆம் தேதிக்குள் சென்னையில் இயங்கும் வாடகை கார் டிரைவர்கள், புகைப்படம் மற்றும் விவரங்களை போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


வாடகை கார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அதற்காக வாடகை கார் மற்றும் கால் டாக்சி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனர் ஜார்ஜ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதன்பேரில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், ''வாடகைகார் மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை தாக்கல் செய்து போலீஸ் நன்னடத்தை சான்றிதழை பெற வேண்டும். புதிதாக வேலைக்கு சேரும் டிரைவர்கள் போலீஸ் சான்றிதழ் கொடுத்தால்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும். வெளி மாநில டிரைவர்களாக இருந்தாலும் அவர்களது மாநில போலீசில் பெற்ற உரிய சான்றிதழுடன் வந்தால்தான், வேலை கொடுக்க வேண்டும்'' என போலீஸ் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இதுகுறித்து வாடகை கார் உரிமையாளர்கள் தரப்பில், ''இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், சான்றிதழ்களை போலீஸ் நிலையங்களில் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். வாடகை கார் டிரைவர் மட்டும் அல்லாது, சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம்  டிரைவர்களாக இருப்பவர்களும், போலீஸ் சான்றிதழ் பெறும் திட்டத்தையும் கொண்டு வரவேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டது.

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் நடிகை கத்ரினா கைஃப்: 4–வது முறையாக தேர்வு!



பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப். இவரை உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.


நடிகை பிரியங்கா சோப்ரா, டி.வி. நடிகை திரஷ்டிதாமி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் மாடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் கத்ரினா கைஃப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். கத்ரினா கைஃப் கடந்த ஒரு ஆண்டாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.


சமீப காலமாக பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


கவர்ச்சியான ஆசிய பெண்கள் வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா 2–வது இடத்தையும், டி.வி. நடிகை தாமி 3–வது இடத்தையும் பிடித்தனர். நடிகை தீபிகா படுகோனேக்கு 4–வது இடம்தான் கிடைத்தது.


மற்ற வரிசையில் உள்ள நடிகைகள் விவரம்:– சோனம்கபூர் (5), பரிநீதி சோப்ரா (14), ஷோபிசவுத்ரி (21), மெக்ரன் சயத் (22), சுனிதி சவுகான் (28), அங்கிதா லோகன்டே (29), ஹீனாகான்(31), ஸ்ரேயா கோசல் (43).

மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது!




தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.


சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.2 கோடியே 60 லட்சம் (4 லட்சத்து 23 ஆயிரம் டாலர்) வசூல் ஈட்டியுள்ளது. இந்த படம் பல நாடுகளில் தலைவர்களுக்கு விசேஷமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவுக்கு வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது. லண்டனில் நடந்த சிறப்பு காட்சியில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்மிடில்டன், மண்டேலாவின் மகள், ஷிண்ட்ஷி மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். மண்டேலா மரணம் குறித்து அவரது வாழ்க் கையை சினிமா படமாக எடுத்த ஆனந்த்சிங் கூறும்போது ‘‘நாங்கள் எங்களது தந்தையை இழந்து விட்டோம்’ அவர் உலகின் ‘ஹீரோ’ ஆக திகழ்ந்தார்’’ என தெரிவித்துள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top