.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 5 December 2013

கணவன், மனைவி நகைச்சுவை?

கணவன், மனைவி நகைச்சுவை ,


"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."



"யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"



"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

சிந்தனைக்கு!

நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது!



நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்!



பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது!



சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!

குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.

அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள்.

ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.

எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.

இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.

ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

· குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.

எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

· பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.

அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும்.

இது ஒரு மாயத் தோற்றமே.

· தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது”

என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும்

 என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை

 சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே

 பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.

· குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.

உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள்.

உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும்.

அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும்.

எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது.

ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

· தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால்

“உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும்

 போது அதுவே அவர்களுக்கு பெரிய

 பிரச்சனையாக மாறிவிடும்.

எனவே உணவுப் பண்டங்களை திணித்து

 உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

கட்டை விரலின் மகத்துவம் - கட்டுரை!


 புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்    அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான்.

கட்டைவிரலில் சாதாரண கொப்பளம் வந்தாலும் கூட,நாம்   சேமித்து வைத்த  நம்    பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. கட்டைவிரல் சரியில்  லை என்றால் கையெழுத்தும் சரியாக இருக்காது. அந்தக் கட்டை விரல் வெட்டுப்பட்டால்தான் பிற விரல்களின் ரேகைகள் தேவைப்படும் நம் . கட்டை விரலை இழப்பது நம்   அடையாளத்தை இழப்பதாகும்.

ஏல்லோர்க்கும் தங்களை நேசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்கும். ‘ நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை, நேசிக்கிறேன், என்னைப் பற்றி அக்கறையே இல்லை ‘ என்று சொல்பவர்களும் அப்படி உண்மையாகவே நினைப்பவர்களும் உண்டு. நிஜத்தில், தன்னை நேசிக்காதவன் பிறரை நேசிக்க முடியாது. தியாகி கூட அந்தச் செயலில் ‘தனக்கு’ மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதால்தான தியாகம் செய்வான். ‘மற்றவர் மகிழ்ச்சிக்காக’ ஒரு காரியம் செய்தாகச் சொல்லிக் கொள்பவன் கூட உண்மையில் அதைத் ‘தன்’ சௌகரியத்திற்காக, ‘தான் தனத்னைப் பற்றி’ வகுத்துக் கொண்ட பிம்பத்திற்காகவே செய்வான். அப்படித் தன்னையே முக்கியமாக நேசிக்கும் மனிதன் – தன் உறுப்புகளிலேயே முதலில் சுவைப்பதும், சுவைப்பதால் ரசிப்பதும் தன் கட்டை விரலைத்தான். குழந்தைகள் கட்டை விரல் சூப்புவதும் இப்படித்தான். தாயின் மார்பு இதமான உணவு தரும் பாதுகாப்பு என்பதை அனிச்சையாக அறியும் குழந்தைகள், தாங்களாகவே வாயில் வைத்துக் கொள்வது கட்டை விரலைத்தான். இந்தக் கட்டை விரலுக்குத்தான் எவ்வளவு முக்கியம்?

அவ்வளவு முக்கியமான கட்டை விரலை இழக்கலாமா? ஏகலைவனுக்கு அதுதான் ‘கதை’யில் நடந்தது. நாம் இப்பொது ஏகலைவன்களாக ஏமாறாமல் இருப்பதற்கே இது எழுதப்படுகிறது. ‘அது கதைதானே’ என்று ஒதுக்கி விட முடியாது – ராமன் பாலம் கட்டியதும் கதைதான். கதை சொல்வதும், அதைக் கேட்பதும் காலங்காலமாய் இருந்து வரும் உலகளாவிய கலாச்சார வழக்கம். கதைகளைச் சொல்பவர்கள் யாருமே தங்கள் கற்பனைத் திறனையும் மொழித் திறனையும் பறைசாற்ற மட்டுமே கூறுவதில்லை. உள்ளே ஒரு செய்தி பொதிந்ததுதான் கதை. ‘இதனால் அறியப்படுவது என்னவென்றால்….’ என்று அறம் போதிக்கும் முடிவுரை இல்லாவிட்டாலும் எல்லாக் கதைகளுமே ஒவ்வொரு செய்தியைக் கூறுகின்றன. செய்தியைச் சுவையாக ஆக்குவதே கதைதான். சில கதைகள், அவற்றை எழுதும் மனிதனின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தாலும் அவையும் செய்திகள்தான். இப்படியெல்லாம ஒருவன் சிந்திக்க முடியும் என்ற செய்தியையே அவை சொல்கின்றன.

செய்திகள் அவசியம்தான். நிலைமைகளையும் நிஜங்களையும் அவை நமக்குச் சுட்டிக் காட்டுவதால் அவசியம். ஆனால் நாம் உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை. சமுதாய மனநிலைக்கு ஒப்பனைகள் அலங்காரங்களாகவே தெரிகின்றன. தெருவில், வண்டியில் விற்கப்படும் மாம்பழத்தை விடவும், அழகான உறையில் அடைத்து பிரம்மாண்டமான கடையிலிருக்கும் மாம்பழத்தையே மக்கள் வாங்குகிறார்கள். இரண்டுமே நிஜ மாம்பழங்கள்தான். ஒன்று அப்பட்டம், இன்னொன்று ஆடம்பரம். கதைகளும் அப்படித்தான். அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் செய்திகள் கூட அலங்கரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுவதால் அவைகள் கதைகளாகின்றன. மேலிருக்கும் உறையை எடுத்துவிட்டால் மாம்பழம் தோன்றும். அதுவரை அதைப் போர்த்தியிருந்த உறை அதன அடிப்படை எளிமையை மெருகேற்றியே காட்டும். அந்தப் பழத்தையும் தோலுரித்துத் தின்றுவிட்டு கொட்டையை வீசினால் – என்றாவது இன்னொரு மாமரம் முளைக்கும், பழம் தரும். கதைகளையும் இப்படி அணுகினால்தான அவை உதவும். ஒவ்வொரு கதையும் பழம்தான். ரசித்து சுவைத்து மறதிச் சகதிக்குள் வீசினாலும் உள்ளிருக்கும் அந்த ஆதாரச் செய்தி வருங்காலத்திற்கு மீண்டும் போய்ச் சேரும்.

மீண்டும் ஏகலைவன் கதையைப் பார்ப்போம். வெறும் கதையாக மட்டுமல்லாமல் அதில் புதைந்திருக்கும் செய்தியை, உணைமையை, விளக்கத்தை, எச்சரிக்கையை பார்ப்போம். ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.

மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். ஆனால் இது இவ்வளவுதானா? இதனுள் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எவ்வளவு விசயங்கள்!

ஏழை – பணக்காரன், உயர்ந்த – தாழ்ந்த சாதி – இவை இந்தக் கதையில் எளிமையாகத் தெரியும் உண்மைகள். இந்தக் கதையில் சொல்லப்பட்ட இன்னொரு விவரம், இப்படியொரு சிறந்த வில் வித்தைக் கலைஞன் இருக்கிறான் என்பதைப் பொறாமையோடு ‘குரு’விடம் முறையிட்டவன் துரோணரின் பணக்கார உயர்சாதி மாணவன்! தம்மை விடத் தாழ்ந்த நிலையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டுமென்று தீவிரமாக நம்பும் மேலாதிக்க மனப்பான்மை இதில் தெரிகிறது. இது இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் இருந்து வந்த பேத வெறி. வளர்ந்து பெரியவர்களான பின்தான் இது வரவேண்டும் என்பதில்லை, வளரும், மாணவப் பருவத்திலேயே இது உள்ளூர பதிந்து விடுகிறது. இந்த சமூக அவலத்தையும் தவிர இந்தக் கதையில் இன்னொரு விசயமும் முக்கியமானது.

‘கட்டைவிரலை வெட்டித் தா’ என்று துரோணன் கேட்டான். ஏகலைவன் மனமுவந்து வெட்டிக் கொடுத்தான். அவன் கட்டை விரலில்லாமல் அம்பை எய்வது முடியாது. தெரிந்தே அந்த ‘குரு’ கேட்டான். எந்த வற்புறுத்தலுமில்லாமல் வலியவே சீடன் கொடுத்தான். கேட்டதும் கொடுத்ததும் கட்டை விரல் மட்டுமல்ல, ஒரு வருங்காலம், ஒரு வாழ்க்கை. இதிகாச காலத்தில் நடந்த இந்த அற்பத்தனத்திலும் ஒரு சின்ன நேர்மை இருந்தது, இருக்கிறது. அவன் நேரடியாகவே கேட்டான், இவன் தெரிந்தே கொடுத்தான். இன்று?

கட்டை விரல் என்பது அடையாளம், சிந்தனை, செயல், இயக்கம், பண்பு எனும் கோணத்தில் பார்த்தால், இன்றும் கட்டை விரல்கள் கேட்கப்படுகின்றன, கொடுக்கப்படுகின்றன.

இன்றைய ‘குரு’மார்கள் நேர்மையுடன் நேரடியாக “உன்னை முழுமையாய் எனக்கு கொடுத்துவிடு, கொடுத்ததன் மூலம் உன் சுய சிந்தனையை நெறியை, உழைப்பை, மனதை எனக்குக் கொடுத்து விடு”, எனும் அவர்களது விளம்பரங்களில் மோகித்து மக்கள் தாமாகவே தங்களைத் தந்து விடுகிறார்கள். வற்புறுத்தல் இல்லாமல் வலியவே தங்களை இழந்து விடுகிறார்கள். ஒன்றை இழந்தால்தான இன்னொன்றைப் பெற முடியும் எனும் போலி வியாபார வித்தை என்று வைத்துக் கொண்டாலும் தங்களையே இழப்பவர்கள் எதைப் பெறுகிறார்கள்? தன் அடையாளத்தையும் அறிவையும் இழந்தபின் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

காதலிப்பதும் இப்படித்தான். ஒருவன் தன்னையே இழந்து காதலியிடமும், காதலிடமும் கலந்து விடுவான். அங்கேயும் சிந்தனை அலசப்படுவதை விட உணர்ச்சியே மேலோங்கி நிற்கும். காதலின் சரணடைதல் ஒரு வளர்ச்சியாக மாறலாம். சாமியார்களிடம் சரணடைவது எப்படி வளர்ச்சியாகும்? பக்தியும் காதலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இயங்குபவை. இரண்டுமே பகுத்துப் பார்க்கும் அறிவுத் திறனை மறுப்பவை. சரியான நபருடன் ஏற்படும் காதலே வாழ்வில் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தரும். சரியான சாமியாரிடமும் அப்படி சாத்தியம் என்று வைத்துக் கொண்டால் அந்தச் ‘சரி’யான சாமியாரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

ஆசையோடு காதலித்து அன்போடு திருமணம் செய்து கொண்ட பிறகும் சில தம்பதியார் வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்காவிட்டாலும் அனுசரித்துப் போகிறது. அப்படியிருந்தும் இனி இந்தத் திருமணம் தொடர்வதால் பயனோ பொருளோ இல்லை என்று தீர்மானித்த பலரும் அந்த பந்தத்தில் தொடர்கிறார்கள். முடிந்த வரை முயற்சித்துப் பார்க்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு உறவைத் தொடர்கிறார்கள். முயற்சி எப்போதுமே முழுதாய் முடிந்த வரைதான். ஒப்புக்குச் செய்வது முயற்சியே அல்ல. சுகமோ அமைதியோ இல்லாமல், அன்பும் அக்கறையும் கூட இல்லாமல் இப்படிப் பலர் போலியாகத் திருமண உறவில் தொடர்வது ஏன்? திருமணம் புனிதமானது என்று கூட இவர்கள் நினைப்பதில்லை. ஆனால் விவாகரத்து வெட்கப்பட வேண்டியதாக இவர்களுக்குத் தோன்றுகிறது. ‘நாளைக்கு எப்படி நாலுபேர் முன்னால் நிற்பது?’ என்றே பொய்யான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சாமியாரைப் பின்பற்றுவதிலதும் இதே நிலைக்கு உள்ளாகிறார்கள்.

ஒத்துவரவில்லை விட்டு விடுகிறேன் என்று முடிவெடுக்க தைரியம் வேண்டும். அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதால் தைரியம் – அது நிதானமாக நிலைமையைத் தெளிவாக உணர்ந்து செயல்படத் தயாராகும் மனநிலை. சமூக அங்கீகாரம் என்பது மனிதர்களில் பலருக்கு மிகவும் அவசியமானது. அந்த அங்கீகாரத்திற்காக உண்மைகளை மறுக்கவும் ஒதுக்கவும் கூட மனது தயாராகும். நம்பி வழிபட்ட சாமியார் சிறைக்குச் செல்லுமளவு குற்றம் புரிந்தவன் என்று தெரிந்தவுடன் உணர்ச்சி மிகுந்து அவனைப் பழிப்பவர்கள் உண்டு. அந்தக் கட்டம் வருவதற்கு முன்னமேயே அந்தக் கயவனின் நடவடிக்கைகள் அவர்கள் மனதை நெருடியிருக்கும். அப்போதெல்லாம் ‘கண்டு கொள்ளாமலிருப்பதும்’, அதையெல்லாம் ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதும்’ பக்தியினால் அல்ல, மிகுந்த சுயநலத்தினால்தான். பலர் தங்கள் ‘கௌரவ’த்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போலிகளை உணர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.

விவாகரத்து என்பது திருமணம் போன்றே மனம் தீர்மானிக்கும் முடிவு. இதைச் செயல்படுத்தப் பலர் தயங்குவது வெட்கத்தினால்தான். மணமுறிவை பகிரங்கமாக்கினால் தாங்கள் தோற்றுவிட்டதாகவே பலர் கருதுகிறார்கள். இதனால்தான் கசப்பையும் சகித்துக் கொள்கிறார்கள். தோற்றுவிட்டேன் என்பதன் உள்ளே தப்பாகக் கணக்கு போட்டுவிட்டேன் என்பதும் உள்ளது. போட்ட கணக்கு தப்பு என்பதை மனம் ஒப்புக்கொண்டால்தான் சரியான விடையைத் தேடும். சாமியார்கள் விசயத்திலும் இப்படித்தான். ‘போலியிடம் ஏமாந்தேன், அந்த நேரம் நான் முட்டாள்; போலி என்னை ஏமாற்றினான், அந்த நேரம் அவன் புத்திசாலி’ என்று தீர்மானிப்பதே தைரியம். நம்மில் பலருக்கு இந்த நேர்மையின் தைரியம் இல்லாததால்தான் திருட்டு சாமியார்களுக்கு இன்னும் ஏமாற்றலாம் என்ற தைரியம் வருகிறது.

இது தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எந்த மனிதனும் அவ்வளவு தனியுமல்ல. அவனது குடும்பமும் சுற்றமும் – நெருக்கமாக இல்லாவிட்டாலும் – அவனையும், அவனாலும் பாதிப்பை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

ஒரு சாமியாரை நான் நம்புவதால் ‘அவரு’டைய புகழ் பற்றி நிறைய பேசுவேன். என் நண்பர்களும் குடும்பமும் நான் பேசுவதாலேயே அதைக் கேட்பார்கள். நம்பிக்கையில்லாவிட்டாலும் அவர்கள் மனம் இந்த விசயத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் சற்றேயாவது பரிசீலிக்கும். ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களும் இந்த நம்பிக்கை உதவுமோ என்று ஏங்குவார்கள். யதேச்சையாக அப்போது எது நடந்தாலும் அது அவர்களது நம்பிக்கையையும் ஆசையையும் வலுப்படுத்தும். நான் தனியாக இல்லாமல் ஒரு சிறு கூட்டமாக மாறுவேன். சிறு கூட்டம் சமுதாயமாக மாறும். பெரும்பான்மை போகும் திக்கில் சமூகம் போகும். கேள்விகள் அப்போது எழுந்தாலும் உதாசீனப்படுத்தப்படும். பொய் உண்மை போலாகி விடும்.

மகப்பேறு வேண்டி மரத்தைச் சுற்றி வரும் பெண்கள் இன்றும் உண்டு. கலாச்சாரம் சமூகத்தில் ஆழப் பதித்து விட்ட நம்பிக்கைகள் இன்றும் தொடர்வது உண்டு. மூட நம்பிக்கை என்பதை அறிவியல் நிரூபித்தாலும் தொடர்ந்து சில விசயங்களை நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ‘எதற்கு வம்பு’ என்று நினைப்பது அச்சம். ‘என்ன நஷ்டம்’ என்று கேட்பது தெளிவின்மை. மூட நம்பிக்கையோடு சில பழக்கங்கள் தொடரும் போது மனத்தினுள் சலனங்களும் சபலங்களும் வளரும். ஒருவேளை இப்படியே ஜெயித்து விடலாமே என்ற கோணல் எண்ணம் தோன்றும். ‘ஒரு நாள் பண்ணினா போதாது போலிருக்கு’ என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும். இதுதான் நஷ்டம். இதைவிடப் பெரிய நஷ்டம் எது?

ப்ராண சக்தி! கட்டுரை!

 உயிரின் மூலப்பொருள்.

பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.

ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.

இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும்.

ப்ராணனின் இந்த ஒருங்கிணைவை உணர்ந்தவர்கள் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். ப்ராணன் பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இணைகிறதோ அங்கு உயர் தோற்றம் நிகழும் என்பதை உணரவேண்டும். பூமியை போல பிற பகுதிகளிலும் உயிர்கள் இருக்கலாம். எனும் கேள்வியின் சாத்தியத்தை இது உறுதியாக்கும்.

நமது உடலில் ப்ராண சக்தி எப்பொழுது நிலை தவறுகிறதோ அப்பொழுது உடலில் நோய்களும், மனதில் அழுத்தமும் ஏற்படும். கர்ம வினையின் பதிவால் இயங்கும் நமது பிராண சக்திகள் உடல் செயலுக்கும் மனதின் செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் நமது வாழ்க்கை இயக்கங்கள் நடைபெறுகின்றன. நமது உடல் செயலுக்கு காரணமான ப்ராணசக்தி உடல் செயலால் நிலைத்தன்மை இழக்கும் என்பது உயிர் சக்தியின் ரகசியம். துப்பாகியிலிருந்து புறப்படும் குண்டு இலக்கை தாக்கும் முன்பு துப்பாக்கியில் ஓர் அதிர்வை ஏற்படுத்தும் அல்லவா? பூக்கூடையில் இருக்கும் பூவை எடுத்த பிறகும் அதில் பூவின் வாசம் இருக்கும் அல்லவா? அது போல ப்ராண சக்தியும் உடல் செயல் மூலம் கர்மாவை செயல்படுத்தும் முன்பு அந்த செயலின் அதிர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

பிறருக்கு நன்மை செய்யும் பொழுது அந்த செயல் நடைபெறும் முன்பு நன்மையான ஓர் அதிர்வு உங்களுக்குள் ஏற்படும். பிறருக்கு தீமை செய்யும்பொழுது முதலில் அதில் பாதிக்கப்படுவது நீங்கள் தான் என்பதை உணருங்கள். இதை ரிஷிகள் உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்தால் தான் பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதீர்கள் என்றனர்.

தீர்த்த யாத்திரை செல்வது பிறருக்கு தான தர்மம் செய்வது போன்றவை எவ்வாறு புண்ணியமாக நமக்கு கிடைக்கும் என கேட்பவர்கள் ப்ராண சக்தியின் அதிர்வை புரிந்துகொண்டால் போதுமானது. தீர்த்த யாத்திரை மற்றும் தான தர்மம் செய்யும் சமயம் ஏற்படும் ப்ராண அதிர்வு உடனடியாக உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். இந்த மேன்மையே புண்ணியம் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பிறருக்கு செய்யும் தீமையான செயல் ஏற்படுத்தும் ப்ராண அதிர்வுகள் பாவமான செயலாக கருதப்படுகிறது. இந்த ப்ராண சக்தியின் செயல்கள் அனைத்தும் பாவ - புண்ணிய, கர்ம வினை போன்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்த்தும்.

ப்ராண சக்தியின் அதிர்வுகள் பதிவுகளாக ஆன்மாவில் வடிவமைகிறது. ப்ராண சக்திகள் தனது இணைவுகளை விடுவிக்கும் பொழுது உடலை விட்டு ப்ராணன் வெளியேறுகிறது. ஆன்மா அதில் உண்டான அதிர்வுக்கு ஏற்ப மீண்டும் ஓர் வடிவை எடுக்கிறது. மீண்டும் ப்ராண சக்தியின் செயலும் உடல் செயல்களும் ஓர் தொடர் இயக்கமாக நிகழுகிறது.





பிரம்மாண்டமான படைப்பின் ரகசியத்தை எளிமையான வடிவிலும் உண்மை வடிவிலும் விளக்கியிருக்கிறேன். மேலும் பல ரகசியங்கள் இதில் இருக்கிறது. இயற்கையுடன் ஒன்றுபடும்பொழுது ப்ராண சக்தியின் விஸ்வரூபத்தை கண்டு பிரமிக்கலாம். வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.

ப்ராண சக்தி ஐந்து நிலையில் உடலில் இயங்குகிறது. தலை பகுதில் உதானன், மார்பு பகுதியில் ப்ராணன், வயிற்று பகுதியில் சமானன், மர்ம ஸ்தானம் மற்றும் இடுப்பு பகுதியில் அபானன் உடலின் அனைத்து பகுதியிலும் வியானன் எனவும் ப்ராண சக்தி இயங்குகிறது. ஒவ்வொரு ப்ராண பிரிவையும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.


ப்ராணா என்பது ஏதோ ஒரு வஸ்து என எண்ணிடலாகாது. அது நமது உயிர்சக்தி என புரிதல்வேண்டும். உலகில் அசையும் பொருளுக்கும் அசையா பொருளுக்கும் ப்ராணனின் இருப்பே வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. உயிரின் மூலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் ப்ராணனை தொடர்ந்தால் சில தகவல்கள் கிடைக்கலாம்.

ப்ராணா என்பது உயிர்சக்தி என்றேன். இந்த உயிர்சக்தியை ரிஷிகளும், வேத சாஸ்திரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். நிலைநிறுத்தும் செயலுக்கு ப்ரதிஷ்டா என பெயர். ப்ராணனை நிலைநிறுத்துதல் என்பதை ப்ராண பிரதிஷ்டா என்றனர்.

ப்ராண சக்தியின் வகைகளை தெரிந்து கொள்ளும் முன் ப்ராணாவின் உண்மை நிலையை கூறும் வேத மந்திரத்தை பற்றி காண்போம். ப்ராணனை ஒரு குறிப்பிட்ட 'இடத்தில்' நிலைநிறுத்த பயன்படும் மந்திரம் ப்ராணாவின் சிறப்பை கூறுகிறது.



ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம் விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: ருக் யஜூஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ||
ஸகல ஜதத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார காரிணி ப்ராண ஸக்தி:
பரா தேவதா


பொருள் :

பிரம்மா,விஷ்ணு சிவனாகவும், வேத மந்திரங்களாகவும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றத்திற்கும், செயலுக்கும், அழிவுக்கும் (ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸ்ம்ஹாரம்) காரணம் ப்ராண சக்தியே.. அதுவே தெய்வ நிலையில் உன்னதமானது.





இதற்கு மேல் ஏதாவது ப்ராண சக்தியை பற்றி சொல்லவேண்டுமா? ப்ராணனின் வகைகளை பார்ப்போம் வாருங்கள்.


உதானன் :

தலை உச்சியிலிருந்து கழுத்து பகுதியின் மையம் வரை உதாணனின் இருப்பிடம். நெருப்புக்கு இணையான சக்தி கொண்டது. நவ கிரகத்தில் சூரியன் இதை ஆட்சி செய்கிறார். அதிகமாக சிந்திக்கும் பொழுதும் கோப உணர்வு ஏற்படும்பொழுதும் தலை பகுதி சூடாவது உதானனின் எதிர்செயலாகும். ப்ராண சக்தியால் உதானனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் நெருப்பின் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தீபம் மற்றும் புனிதவேள்வி நெருப்பு இவர்களை கவரும் செயலில் தளர்வாகவும், பேச்சில் விரைவாகவும் இருப்பார்கள்.

ப்ராணா:


கழுத்தின் மையத்திலிருந்து மார்பு பகுதிவரை ப்ராணனின் இருப்பிடம் . பலர் ப்ராணன் என்பது மூச்சு என தவறாக உருவகிக்கிறார்கள். பிராணன் பிரபஞ்சத்திலிருந்து உடலுக்குள் வருவதற்கும், உடலிலிருந்து வெளியேறுவதர்க்கும் சுவாசத்தை வாகனமாக பயன்படுத்துகிறது. சிலருக்கு இது வியப்பான மற்றும் புதிய தகவலாக இருக்கலாம். மயக்கமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் கொடுப்பதை பார்த்திருக்கலாம் மயக்கமுற்றவர் சுவாசம் எடுக்க முடியாவிட்டாலும் ப்ராணன் வெளியிலிருந்து செயற்கை சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. இதே செயற்கை சுவாசத்தை இறந்த உடலில் பொருத்தினால் ஏன் இறந்த உடல் சுவாசம் எடுப்பதில்லை. காரணம் இறந்த உடலில் பிராணன் இல்லை. இதன் மூலம் ப்ராணன் வேறு, மூச்சு வேறு என உணருங்கள்.

இதை உணர்பவர்கள் இனிமேலாவது ப்ராணாயாமம் என்பதை மூச்சுப்பயிற்சி என மொழிபெயர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பஞ்ச பூதத்தில் காற்றின் செயலை செய்கிறது ப்ராணன். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் புதன் இதை குறிக்கிறது. உடலுக்குள் செல்லும் ப்ராணன் சந்திரனின் ஆதிக்கமும், உடலுக்குள் இருந்து வெளியே செல்லும் ப்ராணன் புதனின் ஆதிக்கமும் கொண்டது. அதிக எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது சுவாசம் அதிகமாக வருவதும், எண்ணங்களற்ற நிலையில் குறைந்து இருப்பதும் ப்ராணனின் செயலை குறிக்கும். காற்றின் மேல் மோகம் கொண்டவர்களாக ப்ராணனின் ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள். நெருக்கமாக இருப்பதும், ஒரே இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எண்ணங்களில் வேகம் கொண்டவர்கள். அலைகடல் மற்றும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் இவர்களை கவரும்.

சமானா:

மார்பின் மையத்திலிருந்து நாபி பகுதிவரை சமானனின் இருப்பிடமாக விளங்குகிறது. நீர் என்னும் பஞ்ச பூதத் தன்மையை சார்ந்தது. நீர் எவ்வாறு சமதளத்தை நோக்கி சென்று சமநிலை அடையுமோ அது போன்ற செயலை உடலுக்கு வழங்குகிறது. உடலின் சுவாசம், ஜீரணம், இன பெருக்கம் போன்ற செயல்கள் சிறப்பாக இருக்க இதன் செயல் பேருதவியாக இருக்கும். அஜீரணம் ஏற்படும் பொழுது செரிக்கப்படாத உணவை உணவுக்குழாய் மூலம் மேல்நோக்கி அதிக விசையுடன் செலுத்தும் பணி சமானனுடையதே ஆகும். செரிக்கப்படாத உணவை உடலைவிட்டு வெளியேற்றி உடலை சமநிலைபடுத்துவது போல பல உடல் செயல்களில் சமானனின் பங்கு உண்டு. நவ கிரகத்தில் சனியின் தன்மையாக செயல்படுகிறது. ப்ராணனில் சமானனின் ஆதிக்கம் கொண்டவர்கள் நேர்மையானவர்களாகவும், யாருக்கும் பாரபட்சமின்றி முடிவெடுப்பவர்களாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அருவிகள் , ஆறுகள் இவர்களை கவரும் இயற்கையான விஷயங்களாகும்.

அபானா:

நாபிப்பகுதியிலிருந்து மர்மஸ்தானத்திற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதிவரை அபானாவின் இடமாகும். பஞ்ச பூதத்தில் மண் தன்மையையும், நவகிரகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் குறிக்கும். நுரையீரல் சுவாசித்தல், உடலில் கழிவுப்பொருட்கள் வெளியேறுதல் போன்றவற்றிற்க்கும் காரணமாக இருப்பது அபானன். இனப்பெருக்கத்திற்காக மனதிலும், உடலும் ஓர் மாற்றத்தை உண்டாக்குவதில் அபானனின் பங்குஅதிகம். மனிதன் பிறந்து வளர்ச்சி அடையும் பொழுது பிற ப்ராணன்களை காட்டிலும் அபானன் அதிக அளவில் செயல்படுகிறது. புதிய சிந்தனை - கவிதை - ஓவியம் நாட்டியம் - சமூக புரட்சி போன்றவை அபானனின் ஆதிக்கம் கொண்டவர்களின் செயல்களாகும். காடுகள் இவர்களை கவரும் இயற்கை தன்மைகள் ஆகும்.

வியானா:

உடல் எங்கும் வியாபித்து இருப்பதால் இது வியானா என அழைகப்படுகிறது. தலை முதல் பாதம் வரை வியானா செயல்படுகிறது. ப்ராணனின் பிற பிரிவுகளுக்கு ஆற்றலை கடத்தும் பொருளாகவும், ப்ராண சக்தியை சமநிலையில் வைத்திருப்பதும் இதன் பணிகளாகும். தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது முதலில் தோன்றும் ப்ராணவகை வியானாவாகும். இதற்கு பிறகுதான் பிற நான்கு பிரிவுகளும் உருவாகிறது. இறக்கும் சமயத்தில் ப்ராணா வெளியேறிய உடன் உடல் செயல் முடிவடைகிறது. இறப்பிற்கு பின் குறைந்தது 48 மணி நேரத்திற்கு பிறகுதான் வியானா வெளியேறும். முதலில் உடலில் நுழைவதும் கடைசியில் உடலை விட்டு நீங்குவதும் வியானாவின் தன்மையாகும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தின் தன்மையும், நவகிரகத்தில் குருவும் வியானாவை பிரதிபலிக்கிறார்கள்.

அமைதியான மனநிலையும், எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றமற்ற மனநிலையும் வியானா ஆதிக்கம் கொண்டவர்களின்நிலையாகும். வியானா முழுமையான செயல் நிலையில் இருப்பவர்கள் உடல் ஒளிரும் தன்மையில் இருப்பதையும் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் ஆனந்தத்தையும் உணர முடியும். வெண்மேகங்கள் இல்லாத நீலவானம், மழைநின்றவுடன் இருக்கும் புதிய சூழ்நிலை போன்றவை வியானாவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த இயற்கை விஷயங்கள்.

பஞ்ச ப்ராணன்கள் பற்றிய விளக்கம் உங்களை பல சிந்தனைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். ப்ராணனின் ஆதிக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் குணமும் , செயலும் வேறுபடுவதை உணரலாம். ஆன்ம விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் பஞ்ச பிராணன்களை சமநிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கை சூழ்நிலையான கடல், மலை, வானம் மற்றும் ஆறுகளின் அருகில் வசிப்பதை விரும்புகின்றார்கள். இவர்களுக்கு வியானன் சிறப்பாக செயல்படுவதால் கண்களிலும், உடலிலும் ஒளிவீசும் தன்மை ஏற்படும். இதைக் கொண்டு அவர்களின் ப்ராண நிலை சமநிலையில் இருப்பதை உணரலாம்.

ஹட யோகத்தில் ப்ராணனை நல்வழிப்படுத்தும் பயிற்சியே ப்ராணாயாமம் எனப்படுகிறது. யாமம் என்பதற்கு செம்மையாக்குதல் - நிலைப்படுத்துதல் எனப்பொருள். நாடி, சுத்தி, ஷண்முகி முத்ரா ப்ராணாயாமம் மற்றும் பல உயர்நிலை ப்ராணயாம பயிற்சிகள் ப்ராணனை நெறிப்படுத்த உதவுகிறது. நவக்கிரக தியானம் ப்ராணனை, பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்து உயர்நிலைக்கு உயர்த்துகிறது. என்னிடம் யோக பயிற்சி கற்றவர்கள் ப்ராணனின் தன்மையை சிறிதேனும் உணர்ந்திருப்பார்கள்.

ஹடயோகம் மட்டுமல்ல கர்மயோகமும், பக்தியோகமும் ப்ராணனை நல்வழிப்படுத்தும் சிறந்த வழிகளாகும். ப்ராணனின் நாத வடிவமான ஒளி வடிவமே 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதிலிருந்துதான் பிரபஞ்சமும் நாமும் உருவானோம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top