.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 December 2013

தமிழின் தனிச்சிறப்பு!

 


பூப் பறித்தல், 


பூக் கிள்ளுதல்,


 பூக் கொய்தல்

என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,

ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.


ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்

பூப்பறித்தல் என்று கூறுவர்.


தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை

எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.



மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்

கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்

என்று கூறுவர்.

தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!

 

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.
அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான்.


ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது,


இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு
போகாதா என்று வியந்தான்.


அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு


போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போது
இந்த கயிற்றால்தான் கட்டினோம்.


அப்போது அது இழுக்கும்போது இந்த
கயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால்


கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி

செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.


அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த

கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்க்கான
முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.


இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகிறோம்.


தோல்வி என்பது நாம் ஜெயிக்கபோவதின் முதல் படியே தொடர்முயற்சியே
நம் வெற்றிக்கு வழி வகுக்கும்…!

குளிர்காலங்களில் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!



நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும்.

இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலமானது நோய்களை உருவாக்கும் இந்த கூறுகளை எதிர்த்து செயல்படுவதற்கு காரணமாக இருகின்றது.


குளிர்காலங்களில் வரும் ஜலதோஷம், குளிர்கால காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதற்கு நீங்கள் வெட்பமான நிலை, போதுமான நீர் சேர்க்கை மற்றும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும். போதுமான தூக்கத்தோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும். இது நமது உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் கூறுகளிடம் இருந்து நம்மை தற்காக்க தயாராகும். குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை எதிர்ப்பதற்கு உதவும் நோய்எதிர்ப்பு அதிகரிக்கும் உணவுகள் ஏராளமானவை. உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் ஜிங்க் போன்ற தாதுபொருட்கள் நிறைந்த உணவு வகைகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரியும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நூல்கோல், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், மணி மிளகு, வெண்ணெய் பழம், ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகிய காய்கறிகளும் பழங்களும் நோய்எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாகும். உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த காய்கறிகளும் பழங்களும் உங்கள் டயட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதோ குளிர்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சில.

ப்ராக்கோலி

 ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கேரட்

 கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நமது கல்லீரலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். இவற்றில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் தன்மை நிறைந்துள்ளது.

ஆப்பிள்

 குளிர்காலங்களில் ஆப்பிள்களிடம் இருந்து அதிக ஊட்டச்சத்து பலன்களை பெறலாம். இது அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இது தரும் அதிக நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் குளிர்காலங்களில் பரவிவரும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களை எதிர்த்து செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கிவி பழம்

 கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கிவி பழத்தில் உள்ள சத்து ஒரு நபருக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் வைட்டமின் சி சத்தை அளிக்கக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி சத்து குளிர்காலங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

கிரீன் டீ

 அதிக சுகாதார பலன்களை கொண்ட கிரீன் டீயை போன்ற அமுதம் வேறுஎதுவும் இல்லை. இது உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவடையசெய்யும். இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

ஜிங்க் உணவுகள்

 ஜிங்க் உட்கொள்ளுதலை அதிகப்படுத்த உங்கள் உணவில் மாமிச வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு அன்றாடம் 8 முதல் 12 மில்லிகிராம் ஜிங்க் தேவைப்படுகின்றது. இதில் பாதி அளவு சிறிதளவு பீப் அல்லது சிக்கன் போன்ற இறைச்சி வகைகளில் உள்ளது.

கடல் சிப்பிகள்

 கடல் சிப்பிகளில் அதிக அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. ஒரு சிப்பியில் நமக்கு அன்றாடம் தேவைப்படும் அளவிற்கு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. நோயை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது ஜிங்க்.

தேங்காய் எண்ணெய்


 தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள லாரிக் அமிலம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து செயல்பட உதவும். தனித்தன்மை நிறைந்துள்ள இந்த எண்ணெயை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதற்காக எல்லா உணவு வகைகளிலும் இதனை சேர்க்கலாம்.

பெர்ரி பழங்கள்

 ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, கோஜி பெர்ரி மற்றும் அகாய் பெர்ரி ஆகியவற்றில் நிறைந்துள்ள அதிக ORAC தன்மைகள் நமது உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் இயக்க உறுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும். பெர்ரிக்களில் உள்ள இன்றியமையாத வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை நமது உடலை சுத்தப்படுத்தி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

காளான்

 காளான்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி புரியும். காளான்களின் வகையான மைடேக், ரேஷி, கொரியோலஸ், அகரகஸ் மற்றும் ஷீடேக் போன்றவற்றில் மருத்துவ தன்மை நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த பீட்டா க்ளுகன்ஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.

நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .
.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

 அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

 கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

 நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்


 இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


 வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

5. நார்ச் சத்து தினமும் தேவை

 உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. குறைந்த அளவு அசைவ உணவு


'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

7. மீன் உணவு

 எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

8. முழு தானியங்கள்

 தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது

9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

 உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

10. தொடர் உடற்பயிற்சி

 தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்


 அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

12. மாத்திரை

 ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!


எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.

1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். ஆறு பிள்ளைகளில் அவரே மூத்தவர். ஃபோர்ட் குடும்பத்திற்கு பெரிய பண்ணை ஒன்று இருந்தது. மற்ற 19ஆம் நூற்றாண்டு சிறுவர்களைப்போல ஃபோர்டும் தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆனால் அவருக்கு பண்ணை வேலை சலிப்பைத் தந்தது. நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலேயே கடிகாரங்களை பழுது பார்க்க கற்றுக்கொண்டார். ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு ட்ராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்தக் கணம்தான் போக்குவரவு வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.

16 வயதானபோது ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரம் செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார். ஃபோர்ட்க்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதே ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம்பளத்திற்கு தலமைப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார் ஃபோர்ட். 1896 ஆம் ஆண்டு மே மாதம் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ஆனால் அந்த வாகனத்திற்குப் பிரேக் கிடையாது. அதனைப் பின்னோக்கியும் செலுத்த முடியாது. அதற்கு 'Quadricycle' என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள்போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஃபோர்ட் அப்போதுதான் உணர்ந்தார்.

தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து செங்கல் சுவற்றை இடித்துவிட்டு அந்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். அவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஃபோர்ட் அகமகிழ்ந்து போனார். தொழிலியல் உலகில் அது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford Motor Company’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க பரந்து விரிந்து கிடப்பதால் ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஃபோர்ட் கடுமையாக உழைத்து 1908 ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல. சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார். அப்போது அந்தக் காரின் விலை என்னத் தெரியுமா? வெறும் 500 டாலர்தான்.

தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான அந்த Model T வாகனம் ஆயிரக் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது ஃபோர்ட் நிறுவனம். ஃபோர்டின் தொலைநோக்கு மிக்க தலமையின் கீழ் அந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலபதிராக அவரை உயர்த்தியது. ஃபோர்ட் புரட்சிகரமான இன்னொரு காரியத்தையும் செய்தார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி வேலை நேரத்தைக் குறைத்தார். அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஃபோர்ட் என்ன செய்தார் தெரியுமா? இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.

பல பொருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபரித வளர்ச்சி கண்டது. வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருனையும் ஊற்றெடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும்பங்கை செலவழித்தார் அந்த தொழில் மேதை. போரை அறவே வெறுத்த அவர் முதலாம் உலக்போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பி ஐரோப்பாவுக்கு பயணமும் மேற்கொண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்ட். அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்ட் நிறுவனத்தின் தலமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹென்றி ஃபோர்ட். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஃபோர்ட் தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால் போக்குவரவு துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து செல்வந்தரான ஃபோர்ட் மிகப்பெரிய சமூக கடப்பாட்டைக் காட்டினார். சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top