.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 30 November 2013

விடியும் முன் - பகுப்பாய்வு விமர்சனம்!

 

ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.

பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார்.

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம்.

பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன.

பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.

குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி.

மதிப்பீடு:
 
விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்!



 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


 மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


 விதியை நம்பி மதியை இழக்காதே.


மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.


மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

வாழ்க்கையையின் நிதர்சனம் இதுதான்!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

 "என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

 "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

 "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

 "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம். நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம  தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

 "வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..


என்ன அருமை நண்பர்களே, உண்மைதானே...???

Friday, 29 November 2013

சிறப்பான சிந்தனைகள் பத்து!



 படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:

மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:


வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:

வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top