.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 22 November 2013

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!

 

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

 நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி!

 
காதலில் சொதப்புவது எப்படி' படத்தைப் போலவே 'பண்ணையாரும் பத்மினியும்' படமும் குறும்படமாக இருந்து சினிமாவாகி இருக்கிறது.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், நீலிமா ராணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பிரிமியர் பத்மினி காரை விலைக்கு வாங்கும் பண்ணையார் ஒருவர், அதை ஓட்டத்தெரியாமல் இளைஞன் ஒருவனை டிரைவராக வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.

அந்தப் பண்ணையாருக்கும், பத்மினி என்கிற காருக்கும் உள்ள காதல், டிரைவருக்கும் காருக்கும் உள்ள காதல் என்று பல தளங்களில் காதலை  முழுக்க முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார்களாம். படத்தில் டிரைவராக நடிப்பவர் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை மூன்றரை கோடிக்குப் போயிருக்கிறதாம்.

அதில் இரண்டு கோடியை மட்டும் பணமாக வாங்கிக் கொள்ள சம்மதித்த தயாரிப்பாளர், மிச்ச பணத்தை வைத்து உங்கள் சேனலிலேயே விளம்பரம் செய்து கொடுங்கள் என்று கூறிவிட்டாராம்.

படத்திற்காக போட்ட பணம் மொத்தமும் இந்த சேட்டிலைட் ரைட்சிலேயே வந்துவிட்டது.  விஜய் சேதுபதிக்கு தினந்தோறும் ஒரு முறை போன் போட்டு நன்றி சொல்லி வரும் இவர், அப்படியே இன்னொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

மற்ற எல்லாருக்கும் 2017 வரை என் கால்ஷீட் ஃபுல் என்று கூறிவந்த விஜய் சேதுபதி, இவரது அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்.

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்!

01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.
ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.


02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.

05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.

06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.

07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.

08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.

09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.

10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.

11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.

12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.

13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.

14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.

15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.

16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.

17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.

18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.

19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.

20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !

21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.

22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.

23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.

24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.

25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.

27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.

28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.

29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.

30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.

பரிசின் தன்மை!

மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.

அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.

இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.

நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.

நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.

உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.

மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.

அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.

அடுத்து இரண்டு நாட்களுக்கு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அவரிடம் சண்டை போடுகிறீர்கள்.

என்ன காரணம்?

 ஸ்கூட்டரை இரவல் கொடுப்பது உங்கள் சக்திக்கு மீறின பரிசு.


ஊனமுள்ள பெண்ணை ஒரு இலட்சியத்திற்காக திருமணம் செய்யலாம்.

அது ஒரு பெரிய பரிசு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த மாதிரி பெரிய பரிசைக் கொடுக்குமுன் அதைக் கொடுக்கிற சக்தி நமக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறதா என யோசித்துப் பார்க்க வேண்டும்.

அவ்வளவு அன்பு இருக்கிறதா என்று நமக்குள் நாமே தேடித் பார்க்க வேண்டும்.

அது சக்திக்கு மீறிய பரிசாக இருக்கும் நிலையில் அந்தப் பரிசை நம்மால் முழுமையாக மனப்பூர்வமாகக் கொடுக்க முடியாது.

எனவே அந்த அன்பு இல்லை என்றால் அந்தப் பரிசை வாங்குபவர்களுக்கும் அது நரகமாகிவிடும்.

அச்சம்!


வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

அது நடந்து முடிந்து விட்டது.அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?


''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை.

எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

 அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.

அதைப்போல இறக்கும் போதும்,அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''என்று எண்ணுங்கள்.


மென்சியஸ் என்னும்  சீடன் தன குருவான கன்பூசியசிடம்,'இறந்த பிறகு என்ன நடக்கும்?'என்று கேட்டான்.

அதற்கு அவர்,''இதற்குப்போய் உன் நேரத்தை வீணடிக்காதே.

நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.

இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?''என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top