.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 19 November 2013

யாசர் அரபாத்- பலஸ்தீனத்தின் சிங்கம்!

 

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணத்திலிருந்து சில குறிப்புகள்.

யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். ஆகஸ்ட் . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.

இவர் மாணவராக இருந்தபோதே அரபாத், அரசியல் மற்றும்
 சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வீரராக தோற்றம் பெறுகிறார் .

உலக போரின் போது பாலை வனங்களில் கை விடப்பட்ட ஆயுதங்களை தேடி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பயிற்சியும் பெற்று வந்தார். பின்னர் எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றார்.

பின்னர் அரபு இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் களத்தில் செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.

1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு நடவடிக்கைககளில் ஈடுபட்டன.

1974, நவ. 13: ஐநா சபையில் உரையாற்றினார். அவர் தனது உரையில தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. எனினும் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

இதன் காரணமாக 1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசு பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல்ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்காலநிலை, பாலஸ்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் பெரும் இழுபறியாக அமைந்தது.இதனால் பலஸ்தீனர்களின்
 போராட்டம் தொடர்ந்தது. இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994 ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

 2004 ஆண்டு அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை
 அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!

 

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.


அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.

ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.

யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!



படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

முட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்!

 

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

 கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

செவ்வாய்க்கு "மாவென்' விண்கலம்: "நாஸா அனுப்பியது"

 

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை அமெரிக்கா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.

நாஸா அமைப்பினால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும். இது குறித்து நாஸா தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், "விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை ஆராயும். குறிப்பாக, அங்கு தண்ணீர் இல்லாததற்கான காரணம் போன்றவை குறித்து ஆராயப்படும்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய மங்கள்யானுக்கு முன்பாக, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அந்த கிரகத்தை அடைய உள்ளது. முன்னதாக, செவ்வாயின் தரைப்பகுதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்க அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை எட்டி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top