.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

                                            nov 16 - edit tolerance-day

இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வருங்காலச் சந்ததியினரை போர் என்ற சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியாவது…’ என்று ஆரம்பமாகும் ஓர் உறுதி மொழியை ஐ.நா. அமைப்பைச் சார்ந்த அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் 1995ம் ஆண்டு எடுத்தனர்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகள் இவ்வுலகில் நிலைத்து நிற்க, மனிதகுலம் அறிவுப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் ஒருங்கிணைய வேண்டும் என்று இவ்வுறுதிமொழி எடுத்துரைக்கிறது.

‘உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி, ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல் மாறாக, இது சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும்’ என்று இவ்வறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
 
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல்.

                                             nov 16 - vanigam mobile.mini

இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்.வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் அந்த நாட்டிலிருந்து ஒரு ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். அலுவலக விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது. முன் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், அயர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 13 நாடுகளில் இந்த சிம் கார்டு மூலம் தொடர்பு கொள்ளலாம். இங்கிலாந்தின் செல்பேசி எண்ணைக் கொண்டிருக்கும் இந்த சிம் கார்டு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

சிறு, குறு, நடு த்தரத் தொழில்முனைவோர், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள், உயர் கல்விபெறச் செல்லும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் வேகமான இணைப்புத் திறனுடன் கூடிய இந்த சிம்கார்ட் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ள லைகா டெலிகாம் நிறுவன தலைமை செயல் அதிகாரி மிலிந்த் காங்லே தெரிவித்தார்.

சர்வதேச ரோமிங் கார்ட் அனைத்து விசா பரிசீலனை மையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், சென்ட்ரம் போரக்ஸ் எக்ஸ்சேஞ்சின் 700 கிளைகள் மற்றும் ஆக்சிஸ், யெஸ் வங்கிகளில் கிடைக்கும். இது தவிர 1800 103 6699 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சிம் கார்ட் அளிக்கப்படும் என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரேமானந்தன் சிவசாமி தெரிவித்தார்.

Lyca Mobile offers international roaming SIM for corporate travellers

**************************************


Lyca Telecom, a subsidiary of UK- based Lyca Mobile, today introduced its post-paid international roaming SIM card priced at Rs 250 targeting the corporate customers.
The company, which was offering services to UK customers, expanded its horizon and currently offers the international roaming post-paid SIM cards to Indian customers. 

வாழை இலையின் பயன்கள்!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.


இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.

பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !

தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.

இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.

மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !

“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.

இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.

எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !

ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !

மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.

மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி!

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது.
இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதித்து பார்க்கும் விஷேச வசதி.

இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.

இப்போது விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கலாம் என விக்கிமீடியா அமைப்பு அறிவித்துள்ளது.

விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது. விக்கி தளத்தில் உள்ள முன்னுரிமை பகுதிக்கு சென்று இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

  https://www.mediawiki.org/wiki/About_Beta_Features

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top