.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 15 November 2013

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

 

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதால் கிருமிகள் பெருகி நோய்கள் ஏற்படவே வழிவகுக்கின்றன.

கழிவு என்று பார்க்கும்போது திடக்கழிவு, திரவக்கழிவு என்றும், அவற்றில் மக்கும் தன்மையுள்ளது, மக்காத தன்மையுள்ளது என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசு தற்போது விளம்பரங்களின் மூலமும் செயல் விளக்கப் படங்கள் மூலமும் கழிவு மேலாண்மை குறித்து மக்களுக்கு அவ்வப்போது விளக்குகிறது. ஆனாலும் சிலர் இதன் முக்கியத்துவத்தை உணராமல் செய்யும் செயல்கள், அவர்களை மட்டுமல்லாது மொத்த மனித சமுதாயத்தையும் பாதிக்கும் செயலாக மாறிவிடுகிறது.

கழிவு மேலாண்மை என்பது முதலில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அன்றாடம் வீடுகளில் உருவாகும் கழிவுகளில் மக்கும் கழிவை தனியாகவும், மக்காத கழிவை தனியாகவும் சேகரிக்கவேண்டும். கழிவுகளை அழிக்க நகராட்சி, மாநகராட்சிகளையே நம்பியிராமல் அவற்றை பயனுள்ளவாறு எப்படி மாற்றி உபயோகப்படுத்துவது என்று அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் பயிற்சிகளைப் பெற்று மனித குலம் வாழ வழிவகை செய்யவேண்டும்.

கழிவுகளை மக்கவைத்து அதை எடுத்து செடிகளுக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். தற்போது கழிவுகளிலிருந்து பயோ காஸ், மின்சாரம் தயாரித்தல் என பல்வகை நவீன பயன்பாட்டு முறைகள புழக்கத்தில் உள்ளன.

கழிவுகளை திறந்தவெளிகளில் சேகரிக்காமல் குழிகள் சேகரித்து அவற்றை மூடி மக்க வைத்து உரம் தயாரிக்கலாம்.மக்காத கழிவுகள் என்பது கட்டுமானக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள். கட்டுமானக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதால் நீர் ஆதாரம் பாழ்படுவதுடன் நீரின் தன்மையும் மாசுபடுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் எப்போதும் அழியாதவை. அவற்றின் உபயோகத்தை குறைக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். நிலத்தில் இடப்படும் பிளாஸ்டிக் கழிவு எத்தனை காலமானாலும் மக்காமல் அப்படியே மண்ணில் இருந்து கொண்டு நீரின் வழித்தடத்தை அடைத்தும், மரங்களின் வேரினை கீழிறங்க விடாமலும் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதை உணர்ந்த அரசு தற்போது சாலைகள் அமைக்க இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகப்படுத்தும் திட்டத்தை கணடறிந்து செயல்படுத்தி வருகிறது.

தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள் சில நச்சுத்தன்மையுடயதாக இருக்கின்றன. அங்கு உபயோகப்படுத்தப்படும் வேதிப்பொருள்களின் மீதி அப்படியே நிலத்தில் கொட்டப்படுவதால் நிலத்தின் தன்மையும், நீரின் தன்மையும் மாறிவிடுகிறது. அந்த மாசுபட்ட நீரினை உபயோகப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் நேரடியாக நோய்வாய்ப்படுவதுடன் பல பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகள் லாபநோக்கை மட்டுமே பிரதானமாக பார்க்காமல் கழிவு மேலாண்மை குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து வேண்டிய உபகரணங்களை கொண்டு கழிவுகளை அழித்து மனித குலத்தை காக்க வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நீரின் மகத்துவத்தை மக்கள் உணரவில்லை என்பதுதான் உண்மை. பொதுவாகவே எல்லா நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் சாக்கடை நீரினை கொண்டுபோய் குளங்களிலும் ஆறுகளிலும் விடுவதை பார்க்கிறோம். இது மிகத் தவறான செயலாகும். சாக்கடை நீரினை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். சமீப நாள்களில் தண்ணீர் நுகர்வு மிக அதிகமாகவே காணப்படுகிறது. மக்கள் தண்ணீரினை அளவாக உபயோகப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

நமக்கு உள்ளது ஒரே உலகம். நாம் வாழத் தகுந்ததாக இப் பூவுலகை மாற்றியமைக்க எல்லோருமே ஒன்றுசேர்ந்து அக்கறையுடன் பாடுபடவேண்டும்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

 

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

3டி தொழில்நுட்ப உதவியுடன் சர்ஜரி!- அசத்தும் லண்டன் மருத்துவர்கள்!

 

பொதுவாக மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக நேற்று வரை இருந்தது. நியூரான்களின் உதவியோடு நினைவு களை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.


அதற்கு விடை கிடைக்கும் வகையில், மூளையில் நினைவுகள் பதிவாவதை ஒளிரும் துணுக்குகளைக் கொண்டு அதை 3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்தனர்.கடந்த ஜூலையில்.அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு இதை சாதித்து காட்டிய நிலையில் விபத்தில் சீர்குலைந்த முகத்தை 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீர்படுத்தும் நவீன சிகிச்சை முறையை லண்டன் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.


ஸ்வன்சீஸ் மருத்துவமனையின் அட்ரியன் சுகர் தலைமையிலான மருத்துவர் குழு இந்த முயற்சியில் சாதித்துள்ளது. சமீபத்தில், பைக் விபத்தில் முகம் சிதைந்த நிலையி்ல் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அவருக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முகம் சீராக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் தலைப்பகுதி, ஒரு கருவி மூலம் 3டி முறையில் படம் பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், முகம் சீரமைக்கப்படுகிறது.


இது குறித்து மருத்துவ குழுவின் ஈவான்ஸ் கூறுகையில், :நாங்கள் வழக்கமான அறுவை சி்கிச்சை முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், புதிய தொழில்நுட்பம் மூலம் முக சீரமைப்பை துல்லியமாகவும், விரைவாகவும் செய்ய முடிகிறது,’ என்றார்.

கழுத்து வலியும் அதை களையும் வழியும்!

நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.

உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்


கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு


பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்


மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது. இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே!

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா?

''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.

இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.

பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.

சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top