.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 8 November 2013

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு  (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளரா? உங்கள் செல்பேசிக்கு வரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான்.


எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.


வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன?

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.


நிறுத்துவதற்கான வழிமுறைகள்:

உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.


2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.


START 1 &  வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 &   ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 &   கல்வி தொடர்பானவை

START 4 &   உடல்நலம் தொடர்பானவை

START  5 &  நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 &  தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 &   சுற்றுலா தொடர்பானவை


எப்படி பதிவு செய்வது?

1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சில வகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக் குறிப்பிட்டு உதாரணமாக START  2,3 (ரியல் எஸ்டேட், கல்வி) டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.


இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.


எத்தனை நாட்களில் நிறுத்தப்படும்?

தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (‡National Customer Preference Register) பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாத விளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.


ஏற்கெனவே (‡National Do Not Call Registry) NDN ‡இல் பதிவு செய்திருந்தால் மீண்டும் நீங்கள் குறுஞ்செய்தியோ, அழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (‡NDNC  தான் தற்போது ‡NCPR  ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).


தொந்தரவுகள் தொடர்ந்தால்...

‡NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பர அழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவு செய்யலாம். மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். வணிக நோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த தேதி, நேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிட வேண்டும். மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்) மற்றும் பேசிய விஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது சம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.


மீண்டும் விருப்பத் தேர்வுகளை மாற்ற இயலுமா?

நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவது இரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப் பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. முன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும் உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள். அதை மீண்டும் உறுதி செய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.


உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ‡NCPR லிருந்து வரும். அதாவது உங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று வரும். அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர் வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லது STOP  என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசை எண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.


கட்டணம்:

இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.


மற்ற சேவைகள் பாதிக்கப்படுமா?

உதாரணமாக ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாது. அதேபோல ஆன்லைனில் பொருள் வாங்கும்போதோ, ஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல் சரிபார்த்தலுக்கோ, பேருந்து, ரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.


எப்படி இது சாத்தியம்?

எல்லா விளம்பரத் தொடர்புகளும் டிராயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டிராயிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் அழைப்பாகவோ, குறுஞ்செய்தியாகவோ வராது. இப்படி விளம்பரதாரர்கள் பதிவு செய்யும்போது டிராய்க்கு பணம் செலுத்தவேண்டும். அதனால் நீங்கள் வேண்டாம் என்றால் அதை நிறுத்தவும், வேண்டும் என்றால் தொடரவும் டிராய்க்கு சாத்தியமாகிறது.


எந்தெந்த விளம்பர நிறுவனங்கள் டிராயிடம் பதிவு செய்திருக்கின்றன என்பதை

http://www.nccptrai.gov.in/nccpregistrylistoftmstateanddistrict.misc?method=loadStates  என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் தகவலுக்கு:

பதிவு செய்வதற்கு, அழைப்புகளைத் தடுப்பதற்கு, விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு, புகாரைப் பதிவு செய்வதற்கு அனைத்துக்கும் 1909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படியோ  Interactive Voice Response System  (IVRS) அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பலாம்.


எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

http://www.nccptrai.gov.in/nccpregistry/How%20to%Register%20complaint.pdf?reqtrack=UcGCjkQNUmAwhxyUdaWZlieLC

மேலும் தகவலுக்கு http://www.nccptrai.gov.in/nccpregistry/  என்ற தளத்தைப் பார்க்கவும் அல்லது helplene@nccptrai.gov.in  என்ற மின்னஞ்சலிலோ 011-24305726, 011-23212032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு  கொள்ளவும்.

காமன்வெல்த் மாநாடு மறுபடியும் அவமானம்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா  பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.  ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்.


 இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. முன்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்கள்.  ஆனால், இத்தனைக்கும் பிறகும் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் பிரதிநிதியாக அதில் கலந்து கொள்வார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அவமதிப்பதாகவும் ஆகும்.


அது என்ன காமன்வெல்த்?

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் பிரிட்டிஷ் அரசு பல நாடுகளில் இருந்து வெளியேறத் தீர்மானித்தது. ஆனால் அதன் கீழ் இருந்த எல்லா நாடுகளுக்கும் அது சுதந்திரம் அளித்துவிடவில்லை. சில நாடுகளை அரசுக்குக் கீழ்படிந்த தன்னாட்சி நாடுகளாக (டொமீனியன்) வைத்திருந்தது. சில சிறிய தீவுகளை தன்னுடைய அயலகப் பகுதிகளாக (British overseas Terrirories) வைத்திருந்தது (இன்று இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் என்றிருப்பவை இந்தக் கருத்தாக்கத்திலிருந்து உதித்தவைதான்) சில இந்தியா போல முற்றிலும் தன்னாட்சி கொண்ட குடியரசுகள். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து, ஐ.நா. சபை போல ஒரு பன்னாட்டு அமைப்பை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நா.வின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பை உருவாக்கிய லார்ட் டேவிஸ், சர்ச்சிலின் ஆலோசனைப்படி ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதுதான் காமன்வெல்த். இன்று அதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன, அவற்றில் முப்பது நாடுகள் சிறியவை (பெரும்பாலும் தீவுகள்).


பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த எல்லா நாடுகளும் அதில் உறுப்பினர்களாகி விட்டனவா?

இல்லை. எகிப்து, ஈராக், இஸ்ரேல் (அதற்கு முன்பு பிரிட்டிஷ் பாலஸ்தீனம் என்று பெயர்), சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், அமீரகம், மியான்மர், ஏடன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளவில்லை. புரட்சிக்குப் பின் ஃபிஜி நீக்கப்பட்டுவிட்டது. ஜிம்பாப்வே விலகிக் கொண்டுவிட்டது. ஹாங்காங் சீனாவோடு சேர்ந்த பின் உறுப்பினராக இல்லை. இங்கிலாந்திற்கு மிக அருகில் இருக்கும் அயர்லாந்து ஆரம்பத்திலிருந்தே உறுப்பினராக இல்லை.


இந்தியா?

இந்தியா 1950-இல் குடியரசாக மலர்ந்தபோது காமன்வெல்த்தில் இணைந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், காமன்வெல்த் நாடுகள் இங்கிலாந்து அரசர் அல்லது அரசியின் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். கட்டுப்பாடற்ற உறவைக் கொண்ட சுதந்திர நாடு (free association pf its independent member) என்ற அடிப்படையில் சுதந்திரமான, சமமான உரிமைகள் கொண்ட உறுப்பினராக ஏற்பதானால் இணைகிறோம் என கிருஷ்ண மேனன் ஒரு கடிதம் எழுதினார். 1949-இல் லண்டனில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்கள் மாநாட்டில் இந்தியாவின் நிபந்தனை ஏற்கப்பட்டது (கிருஷ்ண மேனனின் இந்த வாக்கியம் இப்போதும் அந்த லண்டன் பிரகடனத்தில் இருக்கிறது). இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவிற்கு அளித்ததைப் போன்ற உறுப்பினர் அந்தஸ்தை தனக்கு அளிக்க வேண்டும் எனக் குரலெழுப்பியது. அதைத் தொடர்ந்து அதற்கும் அது அளிக்கப்பட்டது. இன்று அமைப்பில் உள்ள 53 நாடுகளும் சுதந்திரமும் சமநிலையும் கொண்ட உறுப்பினர்கள். அன்று ஏழையாக இருந்தபோதும் இந்தியா தன் நிலையை உறுதிபடக் கூறித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. ஹூம்ம்ம் இன்று?


பிரிட்டிஷ் காலனியாக இல்லாத நாடு காமன்வெல்த்தில் உறுப்பினராக முடியாதா?

பிரான்ஸை சேர்க்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால், 1957-இல் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், முன்னர் ஜெர்மானியர் ஆதிக்கத்திலிருந்த ஆப்ரிக்க நாடான ருவாண்டா காமன்வெல்த்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.


காமன்வெல்த்தில் இருப்பதால் என்ன லாபம்?

நேரடிப் பொருளாதார லாபம் இருக்கிறது எனச் சொல்வதற்கில்லை. கல்வி, மக்கள் நலம், பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். விளையாட்டு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். காமன்வெல்த் நாடுகளில் உள்ள குடிமக்கள் இன்னொரு காமன்வெல்த் நாட்டிற்குச் செல்ல விரும்பினால் விசா இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று நீண்டநாள்களாகப் பேசப்பட்டுக் கொண்டேஏஏஏஏ இருக்கிறது. அது ஒருபோதும் சாத்தியமாகாது. ஐரோப்பிய யூனியனைப் போல காமன்வெல்த் யூனியன் என்ற ஒன்று உருவாக வேண்டும். அதில் பொதுக் கரன்சி, தடையற்ற வர்த்தகம் இதெல்லாம் இருக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள். இதுவும் நாளையே நடக்கக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்ட நாடுகள்தான் காமன்வெல்த்தில் இருக்க முடியும். எனவே காமன்வெல்த் நாடு என்றால் இவையெல்லாம் இருக்கிறது என உலகம் எண்ணும். ஆனால், இலங்கையைப் பார்த்தபின் இனியும் உலகம் நம்புமா?


இலங்கை மாநாட்டில் என்ன பிரச்சினை?

காமன்வெல்த்தின் அடிப்படைக் கொள்கைகள் 16. அவற்றில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமாதானம், பிற மத, இன, நிறத்தவர் குறித்த சகிப்புத்தன்மை, அவர்கள் பால் மரியாதை, அவர்களைப் பற்றிய புரிந்துணர்வு, கருத்து சுதந்திரம், அதிகாரப் பங்கீடு, சட்டத்தின் ஆட்சி, நல்ல ஆளுகை என்பன சில.


இலங்கையில் நடந்த போருக்கு முன்பும், போரின் போதும், பின்னரும் என்ன நடந்தன என்பதை விவரிக்கத் தேவையில்லை. மேலே குறிப்பிட்ட எதையும் இலங்கை கடைப்பிடிக்கவில்லை. இந்தக் காரணங்களுக்காகவே அதை காமன்வெல்த்திலிருந்தே விலக்கி வைக்கலாம். அப்படியிருக்க, அங்கு காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது என்பது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும்?


மாநாட்டை நடத்துவதால் இலங்கைக்கு ஏதும் ஆதாயம் உண்டா?

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் நாடுகளில் உள்ள அரசுகளின் தலைவர்கள், அதாவது ஜனாதிபதி அல்லது பிரதமர்கள் கூடி பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். எந்த நாட்டில் மாநாடு நடைபெறுகிறதோ, அந்த நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர், காமன்வெல்த்தின் நிர்வாகத்  தலைவராக (Chair person in office) இருப்பார் (நிரந்தரத் தலைவர் அரசி).  இந்த முறை இலங்கையில் மாநாடு நடைபெறுவதால் 2015 வரை ராஜபக்‌ஷே தலைவராவார்.


முதலில் இந்த மாநாடு 2011-இல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. அப்போதும் அதன் மீது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கனடாவும், இங்கிலாந்தும் அங்கு மாநாட்டை நடத்த ஆட்சேபம் தெரிவித்தன. அதனால் ஆஸ்திரேலியாவில் மாநாடு நடந்தது. இப்போது இலங்கையில் நடைபெறுவது அந்தக் குற்றச்சாட்டுகள் மன்னிக்கப்பட்டதாக கருத இடமளிக்கிறது.


24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நாடு ஒன்றில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்ற பெருமை இலங்கைக்குக் கிடைக்கும். நாங்கள் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கிறோம், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது, யுத்தத்திற்குப் பிறகு மீண்டுவருகிறோம் என உலகின் தலைவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பாக இலங்கை இதைப் பயன்படுத்தும்.


இதில் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பது உண்மையா?

இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலைச் சுட்டிக் காட்டி கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இங்கிலாந்தின் அயலுறவுத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கமிட்டி, மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் காமரூனுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இங்கிலாந்தில் ஆட்சியில் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி நிழல் அரசாங்கம் என்ற ஒன்றை அமைக்கும். அதற்கு அதிகாரங்கள் கிடையாது என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் ஒருவரை அமைச்சராக நியமித்து முக்கிய விஷயங்களை ஆராய்ந்து கருத்துக்களை அரசின் முன்னும் மக்கள் முன்பும் வைக்கும். அப்படி நிழல் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரான டக்ளஸ் அலெக்சாண்டர், மாநாட்டைப் புறக்கணிப்பதோடு காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை விலக்கி வைக்க வேண்டும் என்று கூடக் கோரியிருந்தார். எனவே, இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என்ற வாதத்தில் சாரமில்லை. காமன்வெல்த் நாடுகளில் மொத்தம் 200 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் 117 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதாவது, காமன்வெல்த்தில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே இந்தியாதான் பெரிய நாடு. அதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.


காமன்வெல்த் அமைப்பிலிருந்து அதன் உறுப்பு நாடுகளை விலக்க முடியுமா?

நீக்க முடியாது. ஆனால் இடைநீக்கம் செய்யலாம். பாகிஸ்தான் இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1999-இல் பர்வேஸ் முஷாரப் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஐந்தாண்டுகளுக்கு அது விலக்கி வைக்கப்பட்டது. பின் 2007-இல் இரண்டாம் முறை இடை நீக்கம் செய்யப்பட்டது. நைஜீரியா, ஜிம்பாப்வே, ஃபிஜி ஆகிய நாடுகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன


இதில் கலந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியாமல் போய்விடும், அது தமிழர்கள் நலனுக்குக் கேடாக அமையும் என்கிறார்களே?

மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், நாம் இலங்கையுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதில்லை. தூதர்கள் இருக்கும்வரை பேச்சுவார்த்தைகள் சாத்தியமே. அதுவும் தவிர, போரில் சிதைந்த இலங்கையைச் சீரமைக்கும் பணிக்கு இந்தியா ஏராளமாக உதவி வருகிறது. எனவே, இந்தியாவை எளிதாக இலங்கையால் புறக்கணித்துவிட முடியாது. அங்குள்ள தமிழர் கட்சிகளும், அண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண அரசும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அப்படியானால், இலங்கை அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் போய்விடுமா?


இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?

இந்தியா, இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாகப் பயனப்டுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாநாட்டில் கலந்துகொள்ள சில நிபந்தனைகளை விதித்து அவற்றை வற்புறுத்தியிருக்க வேண்டும்.  உலக நாடுகளுடன் உள்ள உறவை-குறிப்பாக கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் உள்ள உறவைப் பயன்படுத்தி அந்த நிபந்தனைகளுக்கு இலங்கையை இணங்க வைத்திருக்க வேண்டும். வைத்திருக்க முடியும். தன்னை உலகில் ஒரு வலிமையான தேசம் என நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும்.


தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானம் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?

இலங்கை விவகாரத்தில் இதற்கு முன்பும் தமிழக சட்டமன்றம் தீர்மானங்கள் இயற்றி இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இது தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை எதிரொலிக்கிறது. இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது. இதற்கு முன்பும் பலமுறை இதைக் குறித்து முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரலெழுப்பி இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு மத்திய அரசு மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்தால் அது தமிழர்களின் உணர்வுகளை அது பொருட்படுத்தவில்லை, அலட்சியப்படுத்துகிறது என்றே பொருள். இங்கே ஓர் ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


காமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றாத இலங்கையில்  நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடா நாட்டுப் பிரதமர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மிகக்குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்துள்ள நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இது போன்ற முடிவு எதையும் அறிவிக்கவில்லை. ஏன்? தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.


தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினை பற்றி அக்கறை காட்டவில்லை என்கிறார்களே, அப்படியான நிலைமையில் இந்தத் தீர்மானத்தால் என்ன பயன்?

தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்பது உண்மைதான். ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் இருப்பதைப் போல காமன்வெல்த்தின் பொதுச் செயலாளராக ஒருவர் இருக்கிறார். அவர் ஓர் இந்தியர். அவர் பெயர் கமேலேஷ் சர்மா. இலங்கைப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் நிகழந்தபோது அவர் அதைக் கண்டித்து ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை. காமன்வெல்த் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அவர் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டபோது கூட அவரது வேலை அல்ல எனச் சொல்லிவிட்டார். தமிழர் அல்லாத இந்தியர்கள், ஏன் உலக நாடுகள் இதில் அக்கறை காட்டாததற்கு அங்கு நடந்த பயங்கரவாதச் செயல்களும், நம் அரசியல் தலைவர்களின் கிணற்றுத் தவளை மனோபாவமும் ஓரு காரணம்.


பிரதமர் கலந்து கொள்வாரா?

அது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் அரசியல் காரணங்களை முன்னிட்டு அவர் தவிர்க்கலாம். 2011-இல் நடந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பங்கேற்றார். அதைப் போல இம்முறையும் நடக்கலாம்.



இடையறாத எதிர்ப்பு

இலங்கைக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை

 அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.


இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி,  சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகைசெய்ய வேண்டும்.


அதுவரையில் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8.5.2011 தமிழக சட்டமன்றத் தீர்மானம்



2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.


இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.

25.3.2013 அன்று, பிரதமருக்கு முதல்வர்  எழுதிய கடிதம் 


இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


இலங்கை இனப்போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேசப் புலன் விசாரணை நடத்த வேண்டும்.


இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும்.


தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.


ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட, ஐக்கிய நாடுகள்  சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்


இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளவும் எதிர்ப்பு.


இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது.

ஜூன் 2013-இல் பிரதமருக்கு முதல்வரின் கடிதம்


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.


பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.


இது போன்ற நடவடிக்கை, இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும்.

17.10.2013 அன்று பிரதமருக்கு முதல்வர் கடிதம்


தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.


பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது.


இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும்.


இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

25 அக்டோபர் 2013 சட்டமன்றத் தீர்மானம்



குரல்கள்

மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்பதையும், பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பைச் செய்யும் படியும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- கருணாநிதி (திமுக)


கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடப்பது, ஜீவகாருண்ய சபைக்கு கசாப்புக் கடைக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது. இந்தத் தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு மரியாதை தரும் என்பது புரியவில்லை.

-பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக)


உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சமப்படுத்த வேண்டும். தமிழினம், தமிழ் வாழ வேண்டும். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டால்தான் இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்படும். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டும்.

-மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்


அந்த மாநாட்டில் பெயரளவில் கூட இந்தியா கலந்து கொள்ளக்கூடாது.

-ஆறுமுகம்  (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)


காலனி ஆதிக்கத்தின் நினைவுச்  சின்னமாகத் திகழும் காமன்வெல்த் என்ற அமைப்பே தேவையில்லை என்பது எங்களின் எண்ணம்

-சவுந்தரராஜன்  (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் கண்டுபிடிப்பு!

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


இது குறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானி, கோலின் இயாடி கூறியதாவது:


சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. எனவே, கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம்.


இந்த புது வெங்காயம், கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.


ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கியுள்ளோம்.


இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் என கோலின் மேலும் தெரிவித்தார்.


இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்பதை, அவர் குறிப்பிடவில்லை.

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.


nov 8 edit isro


நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி ரூபாயில் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சி தேவைதானா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றன. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்குக் கூட அளிக்கப்படுவதில்லை. அந்த விளையாட்டுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளியுங்கள் என்றுதான் வலியுறுத்த வேண்டுமே தவிர, நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட கிரிக்கெட்டை நிராகரித்துவிட முடியாது. அதுபோல் வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி, பொது மருத்துவம் ஆகியவற்றுக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்திப் போராட வேண்டுமேயன்றி அறிவியல் ஆராய்ச்சி தேவையில்லை என்ற முடிவுக்குப் போய்விடக் கூடாது.

சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக மிகவும் குறைவாகச் செலவிடும் நாடு இந்தியா. ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) அமைப்பில் உள்ள நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடுவதில் கடைசி இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத நிதிதான் அறிவியலுக்காக ஒதுக்கப்படுகிறது. 2 சதவீதமாகவாவது அதை உயர்த்த வேண்டும் என்ற அறிவியலாளர்கள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான ஆலோசனை புறக்கணிக்கப்படுவது போலத்தான்.

இந்தியாவின் பல வல்லுநர்கள் அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற நிறுவனங்களுக்குச் சென்றிருப்பது வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் என்பதற்காக மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த அறிவியலை இங்கே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.

மக்களின் வறுமைக்குக் காரணம் அறிவியல் ஆராய்ச்சிக்காக இத்தனை கோடி ஒதுக்குவதல்ல. விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு வழிவகுக்காத அரசின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளே காரணம். அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்று அவற்றை வெற்றிபெறச் செய்வதே மாற்றுக் கொள்கைகள் காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.

‘மங்கள்யான்’ திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப்போகிறது என்றும் கேட்கிறார்கள். இவ்வளவு முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று பார்க்கிற வியாபார விசயம் அல்ல இது. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கட்டண அடிப்படையில் விண்ணில் செலுத்துகிற ஒரு வர்த்தகத் திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளால் நேரடி பலன் என்று உடனடியாகக் கிடைத்துவிடாதுதான். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு வருகிறபோது மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கின்றன.

செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற விவாதங்களையே கூட மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, அது விண்வெளி ஆராய்ச்சியால் கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா? செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர் இரண்டும் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா? இவை விண்வெளி ஆராய்ச்சி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களிலிருந்து கிடைத்தவைதான். எளிதில் கணக்குப் போடுவதற்கான கால்குலேட்டர், காலணிகளுக்குக் கூட பயன்படும் வெல்க்ரோ, வலியற்ற அறுவைக்குப் பயன்படும் லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்ட டிஜிட்டல் கடிகாரம், உடலின் உட்பகுதிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட் கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர் பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக் கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகள், நோய்க்கிருமிகளற்ற தண்ணீர் தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக் கருவிகள், கார்களை இயக்குவதற்கான நேவிகேசன் அமைப்பு, எங்கே இருக்கிறோம் என்று அறிய உதவும் செல்போன் வழிகாட்டி என்று பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. நாட்டிற்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுகிற மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பெறுவது குறித்து இன்று பெரிதும் பேசப்படுகிறது. அந்த சூரிய மின்சாரத் தொழில்நுட்பமும் செயற்கைக்கோள்களுக்கான மின்சார ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான். இத்தகைய எண்ணற்ற பலன்கள் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக மக்களுக்குக் கிடைத்துள்ளன.

செவ்வாய் ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில் வழங்கக்கூடும். புயல்கள் உருவாவதைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது மோசமான புயல்தாக்குதல்களிலிருந்து மக்களைப் பெருமளவுக்குக் காக்க முடியும். இதற்கான உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பாக அது அமையும். உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம். உலகத்திலிருந்து நாம் பெறுகிறோம், நாமும் உலகத்திற்கு வழங்குவோம்.

இன்னொரு முக்கியமான பயன் இருக்கிறது: செவ்வாய் என்பது பூமியைப் போல கல்லும் மண்ணும் உள்ள ஒரு செந்நிறக் கோள்தான், அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை எதுவும் கிடையாது என்ற உண்மை உறுதிப்படும் அல்லவா? செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த ஆராய்ச்சியும் தன் பங்கிற்கு உதவுமே! நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மை பரவுமானால் அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை!

அறிவியல் என்பது வெறும் பிப்பெட், பியூரட் மட்டுமல்ல. இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தில், மக்களிடையே அறிவியல் மனப்போக்கை வளர்த்தல் ஒரு லட்சியமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றுவது அரசின் கடமை. பள்ளிகள், கல்லூரிகளில் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் கல்வியை ஊக்குவிப்பது, அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் தங்களது சொந்த முயற்சியில் செய்கிற அறிவியல் விழிப்புணர்வுத் திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்வது, அறிவியல் திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்துவது, ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக உருவாக்குவது என்று பல முனை நடவடிக்கைகள் தேவை. அதேவேளையில் அருமையான அறிவியல் திட்டங்களைத் தொடங்குகிறபோது, ஏதோவொரு கோவிலுக்குச் சென்று கடவுள் சிலையின் பாதத்தில் திட்டத்தின் சிறு வடிவத்தை வைத்துப் பூசை செய்கிற அபத்தங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின் குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள தளமாக உருவாக முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கோள்களுக்கு செலுத்து வாகனத்தை ஏவுகிற எரிபொருள் செலவு அதனால் குறையும் என்கிறார்கள். தளத்திற்குத் தேவையான நிலம் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருந்தும் இந்த ஆலோசனையை ஏனோ மத்திய அரசு ஏற்காமலிருக்கிறது. இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புத் திறன் எப்போது வளரும்? தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கப்படும்போதுதான் வளரும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளிலெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் வழியாகப் படித்துவிட்டு மொழிபெயர்த்து மொழிபெயர்த்தே மூளையின் கண்டுபிடிப்பு ஆற்றல் பின்னுக்குத் தள்ளப்பட்டு காப்பியடிக்கிற வேலைதான் நடக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் புறப்படுகிறார்களே தவிர, கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மிகக்குறைவாகவே உருவாகிறார்கள். தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு தாய்மொழியே பயிற்றுமொழி என்பதை மத்திய – மாநில அரசுகள் எல்லா மாநிலங்களிலும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

அறிவியல் திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட மாற்று அணுகுமுறைகளுக்கான குரல்கள் வலுவாக ஒலிப்பதன் மூலமே மக்களுக்கான அறிவியல் ஓங்கிடும்.

சீன வானில்மூன்று ஆதவன்கள்!!

சீபெங் நகரில் நடந்த விண்வெளி அற்புதத்தில் காணப்பட்ட மூன்று சூரியன்கள் 
 
சீனாவின் வடக்குபகுதியில் உள்ள உள்மங்கோலியா சுயாட்சி பகுதி மக்கள் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வை காண்பதற்காக வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். வானில் ஒரே நேரத்தில் தெரிந்த மூன்று சூரியன்கள்தான் அவர்களது வியப்புக்கு காரணாமாகும். 


காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனும் அதன் இரட்டை உடன்பிறப்புகளான சிறிய சூரியன்களும் திடீரென்று முளைத்தன.


 இவை மூன்றும் வானவில் போன்ற ஒளிவட்டத்தால் சூழப்பட்டது போல் காணப்பட்டன. சீபெங் நகரில் தோன்றிய இந்த அற்புத நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது.


இந்த அற்புத விண்வெளி நிகழ்வை ஏராளமானவர்கள் தங்கள் புகைப்படக்கருவி அல்லது வீடியோ கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். நகரின் சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாக சிலர் கூறினர். 


இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீபெங் வானிலை ஆய்வு மையம் கூறியது. இதற்கு பேண்டம் சன் என்றும் ஐஸ்ஹேலோ என்றும் பெயர்கள் உண்டு என்று அது கூறியது.


 வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில்ஊருடுவும் ஒளிச்சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top