.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 8 November 2013

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!


கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை 8 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டார்.

வழக்கமான உயரம் வளர்ந்த இந்த செடிகளில் எப்போதும் போல் கத்திரிக்காய் காய்த்தது. பின்னர், இந்த செடிகள் மரம் போல் வளர்ந்தன. தற்போது, இந்த செடிகள் 16 அடிக்குமேல் வளர்ந்து மரமாக காட்சி அளிக்கின்றன. செடியாக இருந்து காய்க்க வேண்டிய கத்திரி செடிகள், மரமாக மாறியிருப்பது முண்டகூடா கிராமத்தில் உள்ள மக்களை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.
பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.

செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.

செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முடி உதிர்தலை தடுத்தல்

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.

அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

தேநீர்

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது.

சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

காயங்களை குணப்படுத்துதல்

திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது.

புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

கொழுப்பை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீர் LDL கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.

இருமல் மற்றும் ஜலதோஷம்

செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும்.

செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

மாதவிடாயை முறைப்படுத்துதல்

குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலை தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல்

செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.

இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

காப்பி அருந்துவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நோய் நொடிகளற்ற மனித வாழ்வை நோக்கி செல்ல இன்று பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக உடலுக்கு உற்சாகத்தை வழங்கும் காப்பி குடிப்பதற்கு சிறந்த நேரம் காலை 9.30 இருந்து காலை 11.30 வரையான காலப்பகுதி என நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்திலேயே காப்பியில் காணப்படும் காபைன் (caffeine) எனும் பதார்த்தம் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் (cortisol) ஓமோனுடன் சிறந்த முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கோட்டிசோல் ஆனது தூக்கத்திலிருந்து எழும்பும்போது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது எனவும், 8 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் மேலும் மந்தமான நிலையை அடைகின்றது எனவும் ஸ்டீபன் மில்லர் எனும் நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.
அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.

அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாஸ்தா

இத்தாலியன் உணவுப் பொருட்களில் ஒன்றான பாஸ்தாவை பிரசவத்திற்கு பின் சாப்பிட பெண்கள் பயப்படுவார்கள்.

ஆனால் அப்படி பயப்படத் தேவையில்லை. இதில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அளவாக சாப்பிடுவதே நல்லது.

சீஸ்

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று தான் சீஸ்.

ஏனெனில் பிரசவத்தின் போது பெண்கள் அதிகப்படியான கால்சியம் சத்தை இழக்க நேரிடும். ஆகவே கால்சியம் அதிகம் நிறைந்த பால் பொருட்களில் ஒன்றான சீஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களைக் கூட பிரசவத்திற்கு பெண்கள் சாப்பிடலாம்.

இருப்பினும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை போன்றவற்றை அளவாக உட்கொள்வது நல்லது. ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த சத்து பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியது. எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன், ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இதனால் அது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும்.

காபி

கர்ப்பமாக இருக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் அது கருவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பிரசவத்திற்கு பின் காபி குடித்தால், அது உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சிக் கொடுக்கும்.

பால்

ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால்.

ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும்.

ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.

இத்தகைய வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டி நிறைந்துள்ளது. அதிலும் சால்மன், டூனா போன்ற மீன்களில் இச்சத்து மிகுந்த அளவில் உள்ளது.

ஆகவே இதனை பெண்கள் சாப்பிட்டால், குழந்தைகளின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதிலும் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் மீனை சாப்பிடக்கூடாது.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்

பிரசவத்தின் போது இழக்கப்பட்ட உடலின் எனர்ஜியை அதிகரிப்பதற்கு, கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களான கைக்குத்தல் அரிசி அல்லது பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்!

கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது.


இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை உடனுடக்குடன் இன்ஸ்டால் செய்வதுடன், தொடர்ந்து இன்னல்களை வரவழைக்கும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தாக்கும் வழிகளாக எவை இருந்தன என்பதனையும், எதிர்காலத்தில் எப்படி இவற்றை எதிர்கொள்ளலாம் என்பதனையும் இங்கு பார்க்கலாம்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு என்ன ஏற்பட்டது?


சென்ற செப்டம்பர் 17ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அனைத்து பதிப்புகளிலும் சரி செய்யப்படாத தவறு ஒன்று உள்ளது என்றும், அதனை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கெடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்தது. இதற்கான சரியான பாதுகாப்பினையும் தீர்வையும் தரும் பேட்ச் பைலை மைக்ரோசாப்ட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், தற்காலிகமாகவும் அதனைத் தீர்க்கும் வகையிலான டூல் ஒன்றை வெளியிட்டது. இதனைத் தாங்களாகவே பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இந்த அறிவிப்பு பரபரப்பின ஏற்படுத்தியது. அதே வேளையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்திய அனைவரையும் இது தாக்கியது.


மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இதற்கான தீர்வு தரும் புரோகிராமினைத் தயாரித்து வழங்க மூன்று வார காலம் ஆனது. அக்டோபர் 8ல், வழக்கமான Patch Tuesdayல் இந்த பாதுகாப்பு குறியீடு வழங்கப்பட்டது. இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டு சிஸ்டம் அப்டேட் ஆகி இருந்தால், நீங்கள் தற்போதைக்குத் தப்பித்துக் கொண்டீர்கள் என நிம்மதியாக இருக்கலாம். இதற்கிடையே நாம் வேறு என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.


1.தானாக விண்டோஸ் அப்டேட் அமைக்கவும்: கம்ப்யூட்டரில், விண்டோஸ் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்தில், தானாகவே அப்டேட் செய்வதற்குத் தேவையான பைல்களை வெளியிடுகிறது. தானாக அப்டேட் செய்திடும் வழி அமைக்கப்பட்டால், நாம் இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் தானாகவே, இந்த அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளும்.


2. அண்மைக் கால பதிப்பிற்கு மேம்படுத்துதல்: எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் புதிய பதிப்பு வெளியாகும் போது, அதற்கு நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அண்மையில் ஏற்பட்ட பாதிப்பு, அனைத்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்புகளையும் பாதித்தாலும், பழைய அப்டேட் செய்யப்படாத பதிப்புகள் அதிகம் தாக்குதலுக்குள்ளாயின. பொதுவாக, பழைய பதிப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் அக்கறை கொள்வதில்லை.

தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசராக உள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 11 ஐப் பயன்படுத்த வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பதிப்பு 10, பழைய பிரவுசர்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான வேகத்தில் இயங்கியது. அடுத்த பதிப்பு 11, புதிய, தொடு உணர் செயல்பாடு கொண்ட பிரவுசராக அமைந்துள்ளது. மேலும், இந்த பதிப்பு, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்துடன் எளிதில் இணைந்து செயல்படுகிறது.


3. பிரவுசரை பாதுகாப்பான நிலையில் இயக்கவும்: அண்மையில் ஏற்பட்ட பிரச்னைக்குத் தீர்வினை, மைக்ரோசாப்ட் வழங்க, வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிகமாக வழங்கிய டூலினை இயக்க பயனாளர் முயற்சி தேவைப்பட்டது. இது போன்ற பிரச்னை ஏற்படும் காலம் மட்டுமின்றி, எப்போதும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, Protected Mode என்னும் பாதுகாப்பான வழியில் இயக்கலாம். அதனுடைய security level நிலையையும் மிக அதிகமாக வைக்கலாம்.


இதற்கு, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, தேடல் கட்டத்தில் Internet Options என டைப் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், Settings charm திறந்து, Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், கண்ட்ரோல் பேனல் திறந்து, அதில் Internet Options என்பதனைத் தேடி அறியவும். அடுத்து Security tab இயக்கி, Enable Protected Mode என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப் பட்டுள்ளதனை உறுதி செய்து கொள்ளவும். அடுத்து, Internet and Local intranet ஆகியவற்றுக்கு பாதுகாப்பு நிலை மிக அதிகமாக (high) அமைக்கப்பட்டுள்ளதனையும் உறுதி செய்திடவும். நீங்கள் அடிக்கடி செல்லும் இணைய தளங்கள் நம்பிக்கையானவை என்றால், செக்யூரிட்டி நிலை குறைவாக இருப்பதனையே விரும்புவீர்கள். இவற்றின் இணைய முகவரிகளை Trusted sites என்பதில் இணைத்து, இவற்றுக்கு மட்டும் security levelஐ மத்திமமான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.


4. நம்பிக்கையான தளங்களுக்கு வேறு பிரவுசர்: உலக அளவில் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ளது. இதனால் தான், ஹேக்கர்கள், இதனையே குறி வைத்துத் தங்கள் தீய வேலையை மேற்கொள்கின்றனர். மேலும், பல நிறுவனங்கள் தங்கள் இணைய பயன்பாட்டிற்கு இதனையே தரப்படுத்தப்பட்ட பிரவுசராக அமைத்துக் கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கான இணைய தளங்களை அமைக்கின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தொடர்ந்து அப்டேட் செய்தாலும், பாதிக்கப்படும் அபாயம் இருந்து கொண்டே தான் உள்ளது. எனவே, நம்பிக்கையான இணைய தளங்களை அணுகுவதற்கு நாம் வேறு பிரவுசர்களைப் பயன் படுத்தலாம். இது அதிகம் பயன்படுத்தப்படாத பிரவுசராக இருந்தால், பாதுகாப்பு இன்னும் அதிகமாகும். அத்தகைய பிரவுசர்கள் இணையத்தில் இலவசமாக அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன.


5.ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துக: நம் கம்ப்யூட்டரை மொத்தமாகப் பாதுகாக்க, ஏதேனும் ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். இதனையும் அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றின் வழியாகத்தான், அனைத்து மால்வேர் புரோகிராம்களும் வரும் என்பதில்லை. வேறு எந்த புரோகிராம் வழியாகவும், துணை சாதனங்கள் வழியாகவும், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் பரவ அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துவது ஓர் அடிப்படைத் தேவையாக உள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top