நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில பகுதிகள் கமல் பிறந்தநாளை ஒட்டி இங்கே வெளியிடப்படுகின்றன.பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் கமல்!
எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்? இன்னும் நீங்கள் ஆசைப்படும் விருது ஏதேனும் உள்ளதா?
இந்த விருதுகளும்கூட நடிகர்கள்மாதிரிதான். புது நடிகர்கள் வேண்டாமா என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதைத்தான் நானும் சொல்வேன். புது இயக்குநர்கள் வேண்டாமா? பார்வையாளர்களுக்கு எப்படி புதிது புதிதாக வேண்டுமோ அப்படித்தான்.
உங்களுக்கு கிடைக்காத விருதுகள் பற்றி.. ஏதாவது குறிப்பிட்டுப் பெயர் சொல்லமுடியுமா?
விருதுகள் எனக்கு கிடைக்காததில் வருத்தமே இல்லை. எனக்கு கிடைக்காததிலும் ரஹ்மானுக்குக் கிடைத்ததிலும் எந்தவிதமான வருத்தமும் இல்லை. என்ஜினியரிங்பட்டம் எனக்குக் கிடைக்கலை என்று கோபித்துக்கொண்டது மாதிரி. நான் அதற்கு படித்திருந்தால்தானே. ஆக, அங்கே போய் அவர்களின் படத்துக்கு வேலை செய்து அதுக்கு வாங்குகிற விருதுதான். சத்யஜித்ரேவுக்கு கொடுத்தது மாதிரி,சாவதற்கு முன்போ அல்லது சாவதற்குப் பிறகோ கொடுத்தால் சந்தோஷமாக என்
பிள்ளைகள் வாங்கிக்கொள்வார்கள். என்ன நடக்குது என்று எனக்குத் தெரியாது.
சில நடிகர்கள் மற்றவர்களை விட சிறப்பாக நடிக்கிறார்கள். ஏன் எப்படி?
அது அவர்களின் விருப்பம். அவ்வளவுதான். மற்றவர்களால் முடியாததை செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் அந்த வழி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதானே தவிர. நஸ்ருதின்ஷா பரதநாட்டியம் கற்றுக்கொண்டால் வராது என்பதெல்லாம் இல்லை. வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.
உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது யார்?
என்னுடைய அடிவானத்தில் எனக்குத் தெரிந்த சூரியன் சிவாஜிகணேசன். நான் பார்த்தது அவரைத்தான். எனக்குத் தெரிந்த சத்யம். அதிலிருந்துதான் கிரகனாதி கிரகணங்கள் என்னவென்று புரிந்துகொண்டேன். சோலார் சிஸ்டத்தை புரிந்துகொள்வதற்கு காரணமே அந்த சூரியன்தான். அதைப் புரிந்ததற்குப் பிறகு வேறொரு சூரியனும் இருப்பது தெரிந்தது. அதுவரையில் எனக்கு ஒரு சூரியன்.
ஒரு வழிபாடுதான் இருந்தது. சோலாரை புரிந்தபிறகு ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன் என்பது புரிய ஆரம்பித்தது. இந்த பரிமாண வளர்ச்சிக்கு முதல் படி சிவாஜிதான்.
இயக்கம், நடிப்பு இந்த இரண்டில் எது கடினம்?
கண்டிப்பாக, இயக்கம் என்பது பல்முனை பரிமாணம். வெவ்வேறு பரிமாணம்.நடிகர்களையும் கவனிக்கவேண்டும். ஒரு நடிகன் தன்னை மட்டும் கவனித்துக்கொண்டால் போதுமானது. தன் பாத்திரம், தன் வேலை. இயக்குநருக்கு ஒரு குடும்பத் தலைவருக்கான பொறுப்பு. மொத்தத்தில் குடும்பம் நல்லா இருக்கணும்.
ர
சிகர்களை வைத்து நீங்கள் ஏன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றநினைக்கவில்லை. அப்படி கைப்பற்றுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதுவொரு வழி. ஹிட்லர் செய்த மாதிரி. இல்லை கோயபல்ஸ் செய்த மாதிரி இருக்கலாம். இத்தாலியில் மாஜினி முயற்சி செய்து வந்ததும் ஒரு வழிதான்.அரசியலில் வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதி¢ல் பெஸ்ட்பேட்டர்ன் சக்சஸ் என்று பார்த்தது கோயபல்ஸ் பிரசாரம். கோயபல்ஸின்திறமையான பிரசாரத்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா ரஷ்யாவுடனான போட்டியில் வென்றது. ஜெர்மன் டெக்னாலஜி எப்போதுமே கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாகவே இருக்கும். அதை வாங்கி அமெரிக்கர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே, அதுமாதிரி சினிமா ஒரு கருவி. ஒரு மேடை.இப்போது டிவி. அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் ஒரு டிவியைக் கைப்பற்றி இருக்கின்றன. மக்களைப் போய்ச் சேர்கிற எந்த ஊடகமாக இருந்தாலும், அது
அரசியலுக்கு உபயோகமாக இருக்கிறது. அதுவே கேடயமாகவும் சில சமயம் ஆயுதமாகவும் பயன்படுகிறது. விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை.நாடாளுமன்றம் என்கிற பச்சைக் கிணற்றில் இருந்தால்தான் சமூக சேவையோ அல்லது அரசியலோ பழகமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது வெளியில் இருக்கிற தவளையாகக்கூட இருக்கலாம்.
அரசியல் சூழல் அமைப்பில்
கிணற்றுக்குள் இருக்கிற தவளை மட்டும்தான் பயன்படும் என்று நம்ப வேண்டியதில்லை. ஏரிக்கரையில் இருக்கலாம். காட்டுக்குள் இருக்கலாம்.தவளையின் வடிவம் என்பது ஒப்பீடு செய்து பார்க்கும்போதுதான் தெரியும். தன் கூட்டத்தில் அது பெரிய தவளை மாதிரி இருக்கலாம். இன்னும் பெரிய இடத்தில் பெரிய தவளைகள் இருக்கும். பெரிய தவளை தன்னையொரு சிறு தவளை என்று நினைத்துக் கொண்டிருக்கும். பெரியாரெல்லாம் அந்தமாதிரி தவளைதான். தன்னை சின்ன தவளை என்று நினைத்துக்கொண்டிருந்தார். சத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார். மற்றவர்களுடன் வைத்துப்பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய தவளை என்று புரிந்தது. அதை விழுங்குவதற்கு பாம்பே கிடைக்கவில்லை.
நீங்கள் பார்த்தவரையில் எந்தக் காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று
சொல்வீர்கள்?
பொன் முக்கியமான உலோகமா என்பதை முதலில் நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.பிளாட்டினம் காலத்தை நோக்கிய போய்க்கொண்டிருக்கிற ஆளாக இருந்தால் அல்லது வைரத்தை மதிக்கும் வர்த்தக மிருகமாக இருந்தால். வெறும் பேப்பர்லதான மதிப்பு. கரன்சி காலம். தங்கத்தைவிட இப்போது பிளாஸ்டிக்குக்கு மதிப்பு அதிகம். பழைய ஞாபகமாகத்தான் தங்கமும் பிளாட்டினமும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
பிளாஸ்டிக் கார்டுதான். அதற்குப் பெயர் பிளாட்டினம், கோல்டு கார்டு என்று சொல்கிறோம். இது பிற்காலத்தில் பிளாஸ்டிக் யுகம் என்று பேசப்படும். என்னுடைய பொற்காலம் என¢பது எனக்கு பயன்பாடாக இருந்திருக்கும். மறுமலர்ச்சிக்காலம்தான் பொற்காலமா?ஏறிவரும்போது அந்த மேடை நன்றாக இருந்தது. அச்சு இயந்திரம், லுத்தரன் சர்ச்சில் நடந்த மாற்றம், கல்வி, மதம் மற்றும் அறிவியல் என எல்லாம் ஒன்றாக கலந்து தீவிரமாக இயங்கத்தொடங்கின. அதுவொரு நல்ல காலம். அதுமாதிரி நல்ல காலம் நடந்து கொண்டிருக்கிறதோ என்னவோ. நாம் உணராமல் இருக்கலாம்.
இந்திய சினிமாவில் மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிற படங்களில் நீங்கள்தான் அதிகம் நடித்திருக்கிறீர்கள். ஏன் மற்றவர்கள் அதைச் செய்வதில்லை. அதனால் சிரமங்கள் இருக்கிறதா?
சிரமம் இருக்கிறது. ஆனால் மேக்கப் என்பது ஒரு கருவிதானே. ஏன் மற்றவர்கள்கலர் சினிமா எடுக்கவில்லை என்று சொல்கிற மாதிரிதான். கலர்சினிமாகூடநியாயமானது கிடையாது. சில தொழில்நுட்பம். கிரேன் வைத்து எடுப்பதே இல்லை.ஒருவேளை அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு நம்பிக்கை இ¢ல்லாமல் இருக்கலாம். அந்தமாதிரி கிரேனெல்லாம் எனக்கு வேண்டாம். தரையோட வைத்து எடுக்கிற மாதிரிபுவிஈர்ப்பு சம்பந்தமான படம்தான். றெக்கைக் கட்டி பறக்கமாட்டேன் என்று சொல்லலாம்.
ஹெலிகாப்டர் ஷாட் வேண்டாம் என்று சொல்லலாம். அது அவரவர் விருப்பம். ஹெலிகாப்டர் ஷாட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் ஸ்பீல்பெர்க். டர்காவ்ஸ்கி ஹெலிகாப்டரை சும்மா காற்றடிப்பதற்காக பயன்படுத்தினார். மேக்கப் ஒரு கருவி. மேஜிக்கை
செய்வதற்கு தொப்பிக்குள்ளிருந்து புறா எடுக்கணும் என்பார்கள். சிலர் பெட்டிக்குள்ளிருந்து எடுப்பார்கள். தொப்பி இல்லாத ஊரில் கூடைக்குள்ளிருந்து எடுப்பார்கள்.
நீங்கள் நடிக்க விரும்புகிற ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்கள் யாராவது இருக்கிறார்களா?
சிலது கேட்டால் நடக்காது. இருக்கும்போது அனுபவித்துவிட்டேன். சிவாஜியுடன் இன்னொரு படம் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நடக்காமலேயே போய்விட்டது. நாகேஷுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கலாம்.திலிப்குமாருடன் நடிக்கவேண்டும் என்பது ரொம்ப ஆசை. அது நடக்கவேயில்லை.கிட்டத்தட்ட நான் கேட்டதெல்லாம் நடந்துவிட்டது. நஸ்ரூதின் ஷாவுடன் நடிக்க ஆசைப்பட்டேன்.
என் படத்திலேயே காந்தியாக நடித்தார், இன்னும் பேர் சொல்லாத நிறைய பேர் இருக்கிறார்கள்.ஹாலிவுட்டில் எல்லோருமே தனிப்பட்ட திறமையாளர்கள். ஆஸ்கரும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்ற உட்பி ஆலன். நடிகர் என்று மட்டும் அவரை சொல்லமுடியாது. பஸ்டர் கிட்டன், பிராண்டோ. என்னுடைய காலகட்டத்தைச்சேர்ந்த அதிகம் பெயர் பெறாமேலே போய்விட் வில்லியம் ஹெர்ட், டீ நீரோ. ஏதோ இடையில் வந்து சிக்ஸராக அடித்துக்கொண்டிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.இந்தக் கலைஞர்களை வெறும் நடிகர் என்று மட்டும் சொல்லமுடியாது.
ஏனென்றால் நான¢ நடிகர் மட்டுமல்ல. எனக்கு எல்லோரையும் பிடிக்கிறது. மியுசிக் டைரக்டரைப் பார்த்தால் பிடிக்கிறது. எனியோ மார்கனியைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. ஹாலிவுட்டுக்கு வெள்¤யே இருந்துகொண்டே ஹாலிவுட்டை தாக்கக்கூடிய ஓர் ஆள் அவர். தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்.
உலகம் முழுவதும் நம்மையும் சேர்த்து அமெரிக்க சினிமாவை பின்பற்றக்கூடிய போக்கு இருக்கிறது. பிரெஞ்சு சினிமா, ஈரானிய சினிமாவை பின்பற்றுவதில்லை.பிரெஞ்சு சினிமா நண்பர்கள் இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் யுகே டிவி தொடர்களை எழுபதுகள் எண்பதுகளில் பார்த்தீர்களானால்,இன¢றைய அமெரிக்க டிவி தொடர்களின் உத்வேகம் முழுவதும் அங்கிருந்து வந்ததுதான் என்று தெரியும்.
பிரெஞ்சு சினிமாவிலிருந்து அவர்கள் அடிக்கிற காப்பிக்கு பஞ்சமே கிடையாது. எப்படி நாம் பெங்கால் இலக்கியத்திலிருந்து எப்படி மலையாள படங்களில் ரீமேக் செய்துகொண்டிருந்தோமோ அப்படி. ட்ரூ லைஸ் படத்தை ஒரிஜினல் அமெரிக்க படம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது லா டோ தால் என்கிற பிரெஞ்சு படம். நாங்கள் வெட்னஸ்டேதான் உன்னைப்போல ஒருவன் என்று சொல்லி எடு¢க்கிறோம். அப்படியெல்லாம் சொல்லாமல் இவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி எடுத்திருக்கிறார்கள். யுரேகா என்று வேறுகத்துகிறார்கள். புரியவில்லை. அமெரிக்காவே அப்படித்தானே.
ஆக்கிரமிப்பை தன்னுடைய பூமியாக மாற்றிக்கொண்டவர்கள்தான் அவர்கள். அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. எல்லாவற்றையும் தனது என்று நினைக்கிறவர்கள். அது ஒரு வகையான மெக்காவாக ஆகிவிட்டது. நான¢ வருத்தப்படவில்லை. நாம் ஒரு நாடு,நாம் ஒரு கலாச்சாரம் என்று சொல்லும்போது எது நம் கலாச்சாரம் என்று சொல்லும்போது கோபித்துக்கொள்ளமுடியாது அல்லவா? இந்து என்று சொல்வதற்கு அர்த்தமே எனக்குப் புரியவில்லை.
கண்ணதாசன் எனக்குப் பிடித்த மனிதர்.அர்த்தமுள்ள இந்துமதம் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். இந்து மதம் என்று ஒன்று கிடையாது என்று நினைக்கிறவன் நான். அது என¢னுடைய தனிப்பட்ட கருத்து. சிலர் கோபி¢த்துக்கொள்வார்கள். அதை வைத்து பெரிய கூட்டமாக அரசியலில் ஒட்டுக்களைப் வாங்கிக்கொண்டிருக்கிறவர்கள் இந்த வாதத்தை ம்ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து. எப்படி எனக்கு
கடவுள் தேவையில்லை என்று சொல்கிறேனோ அப்படி. இல்லை என்று சொல்வதுகூட முக்கியமாகத் தெரியவில்லை. எனக்குத் தேவையில்லை என்பதே போதுமானது.
அக்ரஹாரத்திலிருந்து பெரியார் திடலுக்கு வந்த குழந்தை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் குழந்தை வளர்ந்துவிட்டதா?
சாகறதுக்கு முன்புதான் தெரியும் வளர்ந்து செத்தோமா வளராமல் செத்தோமா என்பது. டைம் முடிந்துவிட்டது என்று கேள்வித்தாளைக் கேட்கும்போதுதான் தெரியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தோமா என்று. வளர்ச்சி என்பது எய்தி முடிக்கவேண்டிய நிலையாக எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். வயோதிகத்தையே நான¢ வளர்ச்சியாகத்தான் நினைக்கிறேன்.குன்றலாகவோ அழிதலாகவோ நினைக்கவில்லை.
இதிலிருந்து அதை நோக்கி வளர்தல்,தேய்தல். அப்படிப்பார்த்தால் வளர்ச்சி என்பதே தேய்தல்தான். பிறந்தவுடனே மரணத்தை நோக்கிய பயணம்தானே. விழுந்த பல் முளைப்பதும் முளைத்த பல் விழுவதும் எது வளர்ச்சி என்று எதைச் சொல்வது. பரிணாம வளர்ச்சியில் 23 வயதுக்குப் பிறகு பெரிதாக யாரும் சிந்தனை செய்வதில்லை என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு சிந்தித்து வந்த விஷயங்கள்தான். பெரியார் 23 வயதில் யோசித்ததைவிட நாற்பதுக்குப் பிறகு சொன்னது அதிகம். காந்தியார் அப்படித்தான். கார்ல்மார்க்ஸ அப்படித்தான். முப்பதுக்குப் பிறகு அவர்கள் யோசித்ததுதான் பிரமாதமாக இருக்கிறது. இருபது வரையில் வெறும் ஒத்திகைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நாத்திகம் என்கிற சுயமனிதத் தேடலுக்கு எப்போது வந்தீர்கள்?
ஞாபகமில்லை. மொழியை எப்போது கற்றுக்கொண்டேன் என்பதுமாதிரிதான் அது. தமிழை எப்போது பேச ஆரம்பித்தீர்கள் என்று குறிப்பிட்ட தேதியை நீங்களோ நானோ சொல்லமுடியாது. அம்மா என்பது தமிழா என்று மொழி ஆராய்ச்சிக்குப் போய்விடுமே தவிர, முழுமையாக ஒரு வார்த்தையை சொல்லவந்தோம் 3 வயதிலேயோ 4 வயதிலேயா என்று தெரியாது. ஒரு புத்தகத்தை எப்படி படிக்க ஆரம்பித்தோம். ஒண்ண£ம் கிளாஸ்ல அது தெரியாது. இரண்டாம் கிளாஸ்ல இது தெரியாது.
மூன்றாம் கிளாஸில் இரண்டாம் கிளாஸில் தெரியாததைத் தெரிந்துகொண்டோம். இப்படித்தான் தெரிந்துகொண்டோம். இன்றுமுதல் இப்படி ஆகக் கடவது என்று பெரியார் காளியாக வந்து என் நாக்கில் எழுதவில்லை. அது அவரால் முடியாது. பெரியார் என்பது…ஸ்பூன் என்பதை நாம் கரண்டி என்று சொல்கிறோம். சீனாவில் ஸ்பூனே கிடையாது.குச்சியால் சாப்பிடுகிறார்கள். ஆக அது ஒரு கருவி. அதற்கான பயன் ஒன்றுதான். அந்தக் கருவிதான் பெரியார். என் மொழியில் எனக்குச் சொல்லவேண்டிய விஷயம். அவர் சமுதாயத் தேவை. அது நிகழ்ந்தே தீரும். அவர் வராமல் அல்லது அவர் வழி தெரியாமல் காணாமல் போயிருந்தால் வேறொருவர் வந்து ஆகவேண்டும். அவர் கொஞ்சம் வேலைகளை சுருக்க முடித்தார். அந்த வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆரம்பித்துவைத்தார்.
உங்கள் வாழ்வில் மிக முக்கியமான பெண்மணி யார்?
அந்தமாதிரி சொல்லும்போது இயல்பாக அம்மாதான். நிபந்தனையற்ற அன்பு.ம¦தமுள்ளோர் எல்லோரும் நிபந்தனைகள் விதிப்பவர்கள். அதன்பிறகு நாம் பெற்ற பிள்ளைகளிடம் நிபந்தனைகளற்ற அன்பை வழங்குகிறோம். என்ன தப்பு செய்தாலும் இல்லை என்றாலும் நம்மிடம் மரியாதையாக இருந்தாலும் இல்லை என்றாலும் நிபந்தனையற்ற அன்பை கொடுக்கிறோம். இதை கற்றுக்கொண்டே அம்மா அப்பாக்களிடமிருந்துதான். ஆனால் அம்மா இன்னும் நெருக்கம். அவர்களது உடலின் உறுப்பில் ஒன்றாக இருந்து வெளியே வந்தவர்கள்.
அதுதான் பெஸ்ட்.அதையே உச்சகட்டமாக நினைக்கமுடியாது. எனக்கெல்லாம் அம்மா 24 வயதில் இறந்துவிட்டார்கள். அதை புரியும்போது ரசிக்க நேரமில்லை. அந்த அனுபவத்தை வேறு பெண்கள் மூலம் பெற விரும்புகிறேன். கூட கொஞ்சம் செக்ஸ் குழப்பமாக இருக்கிறது. எல்லா ஆண்களுக்குமே இருக்கு. பிள்ளையார் பற்றிக்கூட ஒரு கதை
சொல்வார்கள். கல்யாணமே ஆகவில்லையே என்னடா பண்றது என்று தலையில் கை வைத்தபோது அந்த மேடு மார்பகம் போல இருந்ததாம். அம்மா ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்வார்கள். நல்ல கவிஞனின் கற்பனை அது. அந்த மாதிரி தலைவீங்கிய பிள்ளையாக இருந்தால் முக்கால்வாசி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவார்கள்.அல்லது ஒதுக்கிவைத்துவிடுவார்கள். நம்மூர்லதான் சாமியாக கும்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
அடுத்த கமல்ஹாசன் என்று யாரையாவது நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறீர்களா?
பாவம். அந்த நிலைமைக்கு எந்த நடிகனும் ஆளாகக்கூடாது. அடுத்த சிவாஜிகணேசன் என்று என்னை சொல்வதை நானே விரும்பவில்லை. சிவாஜி சாரும் விரும்பவில்லை.அவர் பெயர் சிவாஜிகணேசன். அவருடைய பரம ரசிகன் நான். அவரும் என்னை ரசிக்க ஆரம்பித்ததுதான் என்னுடைய பெருமை. பிரபுவுக்கு அது சந்தோசமாக இல்லாதபோது,எனக்கு எப்படி சந்தோசமாக இருக்கமுடியும். சிவாஜி சாரை இன்னொரு பி.யூ.சின்னப்பா என்று சொன்னால் ஒப்புக்கொண்டிருப்பாரா? இங்கிருந்து
தள்ளியிருந்து பார்க்கவேண்டும்.
அந்தக் காலத்தில் அதையே பெரும் வாழ்த்தாகத்தான் நினைத்திருப்பார்கள். இன்னொரு பி.யூ.சின்னப்பாவாக வாழக்கடவது என்றுதான் பெரியவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அதை அவர் விரும்பியிருக்கவே மாட்டார். சுருதிகிட்ட இன்னொரு கமல்ஹாசனா வரணும்னு சொன்னால் என்ன சொல்றீங்க மீசை வைச்சுக்க சொல்றீங்களான்னுதான் கேட்பாங்க.எனக்கு வேண்டாம். இன்னொரு கமல்ஹாசனை தேடவே கூடாது. வரும் நடிகர்கள்
அவர்களுக்குள் கூட இன்னொரு கமல்ஹாசனை தேடிவிடக்கூடாது. அப்படி தேடினால் அவர்கள் தங்கிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.
என்னை விஞ்ச வேண்டியது அடுத்த தலைமுறையின் கடமை. அதை செய்ய அவர்கள் தவறக்கூடாது. அவர்கள் விஞ்சவிடாமல் தடுப்பது துரோகம். அப்படி விஞ்சுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும். என்னுடைய மரணத்திற்கு முன்போ, தொய்விற்கு முன்போ அதை செய்துபார்க்கவேண்டும்.
அப்போதுதான் என் கடமையை செய்தது ஆகும். பழைய ஸ்போர்ட்ஸ்மேன் கோச்சாக மாறுகிறார்கள். அதுதான் நியாயமாக இருக்கமுடியும்.அடுத்து விளையாடுகிறவர்களை தடுத்துக்கொண்டு வித்தைகளைக்
கற்றுக்கொடுக்காமல் துரோணாச்சாரி கட்டைவிரல் கேட்கும் விஷயமெல்லாம் அரசியல். நல்ல மாணவனாக இருந்தவனால்தான் நல்ல ஆசானாக இருக்கமுடியும்.மாணவனும் ஆசான¢தான். குருவும் சிஷ்யன்தான்.