.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 2 November 2013

கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!


அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!

nov 2 - AIADMK website hacked













அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுள்ளது.



தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இணைதள ஹோக்கர்கள் அத்துமீறி நுழைந்து தங்களது ஹேக் தகவலை பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ இணையதளமான www.aiadmkallindia.org – க்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில், இஸ்லாம் ஜிந்தாபாத், இஸ்லாமியர்கள் வாழ்க, பாகிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களைப் பதிந்துவிட்டு ஹேக் செய்தது “HACKED BY H4$N4!N H4XOR” என்று குறிப்பிட்டுள்ளனர்.


 தங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டும் என்று அ.தி.மு.க. இணையத்தளத்தில் குறிப்பிட்டு Hasnain1337@gmail.com என்ற இ-மெயில் ஐடியை பதிவு செய்துள்ளனர். வலைத்தளத்தில் மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு, அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.



இந்த தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கட்சியின் தொலைக்காட்சி சேனலான www.jayatv.tv என்ற வலைத்தளத்தையும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் அத்துமீறி தாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது..ஆனால், அது தமது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலுக்கான வலைத்தளம் அல்ல; jayanewslive.in, jayanetwork.com ஆகியவை அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் என்று ஜெயா டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு!

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


nov 2 - vazhikatti HDFC_Bank_


பணி:

01. Sales Manager

02. Credit Manager

03. Location manager

04. Retail Assets

05. Asset Desk Manager

06. Collection Manager

07. Relationship Manager

08. Cross Sell Manager

09. Sales Quality Manager

10. Risk Analyst

கல்வித்தகுதி:

பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.hdfcbank.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!




ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித்  சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது. இதை அடுத்து இந்திய அணியில் துவக்க வீரராகக் களம் இறங்கினர் ரோஹித்  சர்மா, ஷிகர் தவான் ஆகியோர். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஷிகர் தவான் 57 பந்துகளில் 60 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.


பின்னர் வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன் எடுத்தார். யுவராஜ் சிங் 14 பந்துகளில் 12 ரன் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் அடங்கும். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களாக இருந்தது.
பின்னர் வந்த கேப்டன் தோனியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு அதிரடி காட்டினர். ரோஹித் சர்மா தனது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். சிக்ஸர்களாக அடித்து, ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டி, கிரிக்கெட் தீபாவளியை பெங்களூர் ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்கினார் ரோஹித் சர்மா. 158 பந்துகளில் 16 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடித்து, 209 ரன் எடுத்து அசத்தினார் ரோஹித் சர்மா.


தோனி 38 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடித்து 62 ரன் எடுத்தார்.
இருவரும் இணைந்து, 5 வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 383 ரன் எடுத்து அசத்தியது.


ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், மூன்றாம் இடம் பிடித்தார். முன்னதாக சேவாக், சச்சின் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.


இதன் மூலம் 384 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”

அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது.

 









அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Boson என்று அழைக்கிறார்கள்.


இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தைகளில் சொல்லொணாத பேரின்பம் இதயத்தில் எழுந்தது. அந்தச் செய்தியைப் படிக்கும் போதே என் மனம் திருமூலர் எழுதிய திருமந்திரத்திற்குத் தாவி விட்டது.
ஏன் ? அதற்கு ஒரு பெரிய கதை இருக்கிறது.


இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அல்லது எல்லாத் தனிமங்களிலும் (Elements) இருக்கும் அடிப்படைப் பொருள் அணு. இந்த அணுக்கள் ப்ரோடான், நியுட்ரான், எலேக்ட்ரோன் ஆகியவற்றால் ஆனவை. அவை எதனால் ஆனவை என்று பார்த்தால் க்வார்க்குகள் மற்றும் லெப்டான்கள் போன்ற பல உப அணுக்களால் உருவானவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த அணுவை நாம் கண்களால் காண முடியாது. கைகளால் தொட முடியாது . இந்த அணுவே நம் உடல், உணவு, உடை, , மரம் , செடி, கொடி, ஜடப்பொருள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மொத்தத்தில் எல்லா உயர்திணையும், அஃறிணையும் அணுக்களால் ஆனவை தான். தூணிலும் , துரும்பிலும் கூட இருப்பதால் இவற்றைக் கடவுள் மாதிரி என்று கூட சொல்லலாம்.


ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அணுவுக்கு ஆதாரமாக இன்னொரு அணு இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதி ஒரு சோதனையில் இறங்கினார்கள். இதன் விளைவாக அந்த உப அணுவைக்( அணுவை இயக்கும் அணு) கண்டிபிடிப்பதில் நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் . அந்த முயற்சியின் பயனாக “கடவுள் துகள் “(The God’s Particle) என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அது என்ன கடவுள் துகள் ?


அந்தத் துகளுக்குள் போவதற்கு முன் நாம் பெரு வெடிப்புக் கொள்கையைப் (BIG BANG THEORY) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகம் பெரு வெடிப்புக் கொள்கையின் படி தோன்றியது என்று ஒரு பரவலான நம்பிக்கை உண்டு. இதன் படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய தீப்பிழம்பாக இருந்தன . இன்று அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கக் கூடும் என்று நம்பப்டுகிறது. இத்தீப்பிழம்பானது அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கியது . இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) என்று கூறப்படுகின்றது . ஒவ்வொரு விநாடியும் பல மடங்குகளாக இந்த விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர் . பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகவும், இந்தப் பேரண்டத்தில் உள்ள எல்லாமே அணுக்களால், அணுக்கூட்டங்களால் ஆனது என்ற உண்மையையும் மனிதன் கண்டுபிடித்தான்.


இருந்தும் ,விஞ்ஞானம் இதோடு நிற்கவில்லை.இந்த அணுக்களை இயக்குவதற்கு மூல காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று அது நம்பியது. காரணம், இந்த அணுக்களுக்கு நிறை(நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போக வரும் எடை.) எங்கிருந்து கிடைக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராய் இருந்தது . அதாவது , இந்த அணுக்களை ஒன்று சேர்த்து ஒட்டும் பொருள் என்ன என்பது தான் அவர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. ஏனென்றால் நிறையில்லாமல் அவை ஒன்றையொன்று பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. அப்படி பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அங்கு பொருளோ அதாவது மூலக்கூறுகளோ, அணுவோ, மற்ற எதுவுமே இருக்காது. இந்த நிலையில் தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1960 இல் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தார்.


இந்த அணுவுக்கு ஏதோ ஒரு உப அணு இருக்க வேண்டும். அது தான் மற்ற எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கில் இயக்குகிறது என்பது அவருடைய தத்துவம்.எனினும், அதற்கும் முன்னதாக 1924 ஆம் ஆண்டே இதைப் பற்றிப் பேசியவர், நம் இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர போஸ் ஆவார். அப்போது அவர் இதைப்பற்றி, அணுவையும், அணுசக்தியையும் கண்டறிந்த சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு ஆய்வறிக்கையை அனுப்பினார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த `ஐன்ஸ்டீன்-போஸ் கண்டென்ஸேட்’ என்ற கண்டுபிடிப்புதான், இப்போது கடவுள் அணுவைக் கண்டுபிடிக்க முனைந்த விஞ்ஞானிகளுக்கு அடிப்படை. ஆதலால் , அதற்கு ஹிக்ஸ் என்ற பெயரையும், போஸ் என்ற பெயரையும் இணைத்து இந்தக் கண்டுபிடிப்புக்கு ஹிக்ஸ் போஸான்(HIGGS BOSON) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .



இந்த நுண்ணிய உப அணுவை கண்டுபிடித்தாலே பிரபஞ்ச இரகசியத்தை முழுமையாக அறிய அது வழி வகுக்கும் என்று விஞ்ஞானிகள் நினைத்தாலும் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று விஞ்ஞானிகள் சிந்தித்து ஒரு சோதனை செய்ய முடிவெடுத்தார்கள்.


பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஜோ இன்கண்டேலா என்ற புகழ்பெற்ற அணு வல்லுநர் தலைமையில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பை மறுபடி நடத்திப் பார்ப்பதன் மூலம் இந்த ஒட்டுப்பொருளை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். LHC யில் அதி வேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். ஒரு வினாடியில் லட்சக்கணக்கான மோதல்கள் நிகழ்ந்தபோது இதுவரை பார்த்திராத துகளின் தடயங்கள் காணப்பட்டன . இதனுடைய நிறை (mass) முன்பு விஞ்ஞானிகள் கணித்துச் சொன்ன அதே வரையறைக்குள் இருந்தது. அதனால் இதுதான் ஹிக்ஸ் பாசன் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருக்கிறது.இதை அடுத்து அணுவின் உப அணுவை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டோம் என்று ஜூலை 4ந் தேதி விஞ்ஞானிகள்அறிவித்தார்கள்.



ஆனால், இந்தத் துகளைக் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த ஒரு கருவியும் இல்லாமலேயே நம் மூதாதையர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். கேட்பதற்கு பிரமிப்பாக இருக்கிறதல்லவா !! எப்படி ?



நம் சித்தர் பிரான் திருமூலர் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்,



“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”


கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.


விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.




இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?


“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”


இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே , பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே , அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே” என்கிறார் திருமூலர்.
இதில் சில வரிகளை ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவனே என்று கூறியிருக்கிறார்.


 இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்துக் கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா அதே போன்று சற்று பெரிய அளவில் . பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..! இப்பொழுது தெரிகிறதா அந்த ஹிக்க்ஸ் போசோன் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே !!!.


“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”


சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.


இப்பொழுது நாம் விஞ்ஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு
0 .000000212 mm. இப்பொழுது நாம் திருமூலர் பாடலின் படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனித முடியின் சுற்றளவு 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, அதன் சுற்றளவு 100 மைக்ரோன் என்று வைத்துக்கொள்வோம்.


மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)
இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்,
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்,
0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்.
0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM),
ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).


சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணுசக்தி . ஒரணுவை ஆயிரம் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றல் கொண்ட சக்தியையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்றால் பிரிக்க முடியாத அணு என்று பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்ததென்பது நமக்குத் தெரியும். அந்த அணுவினை ஆயிரங் கூறிட்டால்தான் பரமாணு என்கிற ஆதிபிரானைக் காணலாம் என்கிறார்கள் சித்தர்கள் . அந்த அற்புதசக்தியின் ஒளி ஆயரங்கோடிச் சூரியர்களுக்கு நேர் என்றும் கூறுகிறார்கள்.


“இருக்கில் இருக்கம் எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரடில் வீச
உருக்கிய ரோமம் ஒளி விடுந்தானே”


இந்தக் கடவுள் துகளானது நம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி , அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா. அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . இப்பொழுது ஹிக்க்ஸ் போஸானில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.


இது மட்டுமல்ல. கம்பரும் ,


“சாணிலும் உளன்;ஓர் தன்மை, அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”
என்று பாடுகிறார்.


கடவுள் சாணிலும் இருக்கிறார்.அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதே இதற்குப் பொருள்.அப்படி நூறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அணுவுக்கு கோண் என்று பெயர் சூட்டுகிறார் .அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில் தான் எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட்(Earnest Rutherford) கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி விட்டாரே !!



இது வெறும் கற்பனை தான் என்றாலும் ரதர்ஃபோர்டின் கண்டுபிடிப்புக்கு முன்னோடி அல்லவா நம் கவிச்சக்கரவர்த்தி !!! மேலும் , திருவள்ளுவமாலை என்னும் நூலில் ஒளவையார் திருக்குறளைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்.



“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்”.
அதாவது, ஒரு அணுவைத் துளைத்து, அதற்குள் ஏழு கடல்களை நிரப்பினால் அது எப்படி சக்தி வாய்ந்ததாக இருக்குமோ அப்படி இருக்கிறதாம் திருக்குறள்.
அணுவைத் துளைத்தால்(Nuclear Fission) அளவிட முடியாத சக்தி பிறக்கும் என்பது ஒளவையாருக்கு எப்படித் தெரிந்தது ?


அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழியை இதுகாறும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பொருள் தெரிந்த பின்பு சின்னதாக இருந்தாலும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது இந்தப் பழமொழி.


இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது நம் முன்னோர்கள் தான் உலகின் முதல் அணுசக்தி விஞ்ஞானிகளோ என்று எண்ணி அவர் தாம் காலடியில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கத் தோன்றுகிறது.



வாழ்க தமிழ்மொழி !! வாழ்க தமிழினம் !! வாழிய வாழியவே !!!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top