.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும், வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

31 - cine tax

கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது.


 இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் 1950-ம் ஆண்டு எடுக்கப்பட்ட “ரத்தக்கண்ணீர்”, “மனோகரா” உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் “மன்மதன்”, “போக்கிரி” ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.


அரசு உத்தரவு எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ., எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக “சில்லுன்னு ஒரு காதல்”, “கற்றது தமிழ்”, “எம்மகன்” என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கை பெற்று விட்டனர். இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.


இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004-ல் மட்டும் ரூ.75 கோடியே 7 ஆயிரம் கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006-ம் ஆண்டு இது 16 கோடியே 35 ஆயிரமாக குறைந்து விட்டது. தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். “எந்த படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் இது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்றும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.


இந்நிலையில் மற்றொரு வழக்கறிஞர் மோட்சம் இப்போது தாக்கல் செய்துள்ள இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை.


31 - criket

இந்திய அணி வீரர்கள் வருமாறு :


 தோனி,

புஜாரா,

சச்சின்,

தவான்,

 கோஹ்லி,

அஷ்வின்,

ரகானே,

ரோகித் சர்மா,

இஷாந்த் சர்மா,

முரளி விஜய்,

ஓஜா,

உமேஷ் யாதவ்,

 முகமது சமி,

புவனேஷ்வர் குமார்,

அமித் மிஸ்ரா.

தனது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நட்சத்திர ஆட்டகாரர் சச்சினுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Ishant Sharma, Shikhar Dhawan return for Sachin Tendulkar’s farewell Test series against West Indies

சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா?

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார்.


31 - edit srilanka


இந்தியாவின் தலைநகரிலேயே இந்த மிரட்டலை விடும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாட்டின் தூதர் இது போன்று வரம்பு மீறினால் அவரை வெளியுறவுத் துறைச் செயலாளர் அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவரின் மிரட்டலுக்கு இந்திய அரசின் சார்பில் யாருமே எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


சின்னஞ்சிறு நாடான இலங்கையின் தூதர், உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவை பகிரங்கமாக மிரட்டுகிறார். யார் யாரோ கொஞ்சமும் மதியாமல் எடுத்தெறிந்துப் பேசுகிற நிலை இந்தியாவிற்கு வந்திருப்பது குறித்து அனைவருமே வெட்கப்பட வேண்டும். அதிலும் உலக நாடுகளுக்கு முன்பாக இனப்படுகொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இராஜபட்சயின் தூதுவர் துணிந்து அச்சுறுத்துகிறார் என்றால், இந்தத் துணிவு அவருக்கு எப்படி வந்தது?


இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் கடந்த நான்காண்டுகளைக் கடந்து இன்னமும் தொடர்கின்றன. டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும், ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அறிவித்த பிறகு, உலக அரங்கில் தலை குனிந்து நிற்க வேண்டிய குற்றவாளி தலை நிமிர்ந்து நின்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்குத் துணிவு பெற்றிருப்பது எதனால்? யாரால்? இலங்கையின் தமிழ்ப் பகுதியில் சொல்லொணா கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன.


பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை, போரில் கணவரை இழந்த பெண்களை இராணுவத்தினரின் இச்சையைத் தீர்க்கும் பாலியல் தொழிலாளிகளாக ஆக்குவது, சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்ப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது போன்ற இனத்தின் அடையாளத்தையே அழிக்கும் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில், வெற்றி விழா கூட்டத்தில் முழங்கிய இராஜபட்ச, “எதிர்காலத்தில் இலங்கையில் இரு இனங்கள்தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம்; மற்றொன்று சிங்களக் கலப்பினம்’ என்று மார்தட்டிக் கூறியதை நடைமுறையில் செயல்படுத்தும் வேலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது.


படிப்படியாக நடத்தப்பட்டு வருகிற இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எதுவும் செய்யவில்லை. மாறாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் பிற சர்வதேச அரங்குகளிலும் உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


தன்னை ஆதரித்துத் தீர வேண்டிய நிலையிலிருந்து இந்தியா ஒரு போதும் மாற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இராஜபட்ச தனது தூதுவரை வைத்து இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறார். கரியவாசம் மட்டும் இவ்வாறு பேசியிருக்க முடியாது. அவருக்குப் பின்னணியில் இருந்து இராஜபட்சதான் இவ்வாறு பேச வைத்திருக்க வேண்டும்.


இதற்கு பதில் கூறத் துணிவில்லாமல், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய பொருளாதார, வர்த்தக நலன்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்’ என கற்றுக் குட்டி மத்திய அமைச்சர் ஒருவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் கடந்த கால வரலாறு சிறிதளவு கூடத் தெரியவில்லை.
தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என்று காமன்வெல்த் மாநாட்டில் அன்றைய பிரதமர் நேரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவை காமன்வெல்த்திலிருந்து வெளியேறவும் வைத்தார்.


அவரைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா செயல்பட்டார். 1976-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பு மேற்கொள்ளவும் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவும் வேண்டுமென ஐ.நா. பேரவையில் இந்தியாவும் மேலும் பல நாடுகளும் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்களுக்கும், தமிழர்களுக்கும் விடிவு கிடைக்க இந்தியா வழி செய்தது. வெள்ளையர் ஆட்சி மறைந்து அந்நாட்டு மக்களின் உண்மையான ஆட்சி ஏற்பட்டது, வெஞ்சிறையில் 27 ஆண்டு காலம் வாடிய நெல்சன் மண்டேலா அந்நாட்டின் அதிபரானார்.


ஆனால் நிறவெறியை விட மோசமானதான இனவெறியைக் கடைப்பிடித்து தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இராஜபட்சக்கு துணை நின்று தோள் கொடுக்கும் கைங்கரியத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருகிறார்.
இத்தகையச் செயல்களின் மூலம் சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிற இராஜபட்சவை இந்தியாவின் பக்கம் ஈர்த்து விட முடியுமென நம்புவது, கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போன்றதாகும். இந்த உண்மையை இந்திய அரசு என்றைக்கு உணர்கிறதோ அன்றைக்குதான் கரியவாசம் போன்றவர்கள் இந்தியாவை அவமதிப்பது நிற்கும்.


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்பது நமது கோரிக்கையல்ல. இனவெறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அப்படி நடத்தப்பட்டால் அதன் மூலம் இரண்டாண்டு காலத்திற்கு காமன்வெல்த் அமைப்பிற்கு இராஜபட்ச தலைமை தாங்கும் நிலை ஏற்படும். சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ஒருவருக்கு அரசியல் ரீதியாக இது போன்ற உயர்ந்த தகுதி அளிக்கப்படுவது, அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கு உதவுவதாகும் என்பதுதான் நமது எதிர்ப்புக்குக் காரணம்.


இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா செயல்பட்டிருக்குமானால் காமன்வெல்த் அமைப்பில் உள்ள பல நாடுகளும் இந்த கோரிக்கையை ஆதரித்து அதன் விளைவாக மாநாடு வேறொரு நாட்டிற்கு மாற்றப்பட்டிருக்கும். இராஜபட்சயும் அடங்கி ஒடுங்கியிருப்பார். செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய இந்தியா முன் வராததால் யார் யாரோ மிரட்டுகிற நிலைக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது.


சின்னஞ்சிறிய சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மாறாத தலை குனிவை தேடித் தந்து விட்டது.கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளப் போகிறதா அல்லது புறக்கணிக்கப் போகிறதா என்பதோ, பிரதமர் கலந்து கொள்கிறாரா இல்லை வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்கிறாரா என்பதோகூட அல்ல பிரச்னை.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக இருக்கும் ஒருவர், 120 கோடி மக்கள்தொகை கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை மிரட்டுகிறார், ஆலோசனை கூறுகிறார் என்றால், அதற்காக தலைகுனிய வேண்டியவர் பிரதமர் மட்டுமல்ல; அவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருமேதான்!

பழ. நெடுமாறன்

இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்!


இன்போஸிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு ரூ.215 கோடி (35 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபாரதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதாக அமெரிக்க தரப்பில் இருந்து இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வல்லபாய் படேல் பிறந்த தினம்!

 

Sardar patel (cropped).jpg
31 October 1875 – 15 December 1950 (aged 75)

தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர்


இல்லையென்றால் இருந்திருக்காது.


சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ்
கொண்டு வந்தவர். அவர் தான் இந்தியாவின் “இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார்
வல்லபாய் படேல்.


இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top