.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 26 October 2013

அரிசி வகைகளும், அதன் பயன்களும்!

தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே. அரிசி உணவில் தான் எத்தனை எத்தனை வகைகள். அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உள்ளன.


பொதுவாக தமிழர்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை மட்டுமே உணவுக்கு பயன்படுத்துவார்கள். அதையும் தாண்டி, பிரியாணிக்கு என பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



இப்போது, ஒவ்வொரு அரிசிக்கும் உள்ள குண நலன்களைப் பற்றி பார்க்கலாம்.



 புழுங்கல் அரிசி

தற்போது நாம் சாப்பிடும் புழுங்கல் அரிசி பாலிஷ் செய்வதாகக் கூறி அதில் உள்ள ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகிறது. அதையும் நாம் சில முறை தண்ணீரில் கழுவி, நன்கு வேக வைத்து கஞ்சியை வடித்துவிட்டு வெறும் சக்கையாக சாப்பிட்டு வருகிறோம். எனவே, பாலிஷ் செய்யப்படாத அரிசியே உடலுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.


 புழுங்கல் அரிசியில் உள்ள நன்மைகள்


புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் கூட போதுமானது. பைபர் குறைவாக உள்ள உணவாகவும் புழுங்கல் அரிசி உள்ளது. எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டிய குழந்தைகள், வயதானவர்களுக்கு புழுங்கல் அரிசி சாதம் ஏற்ற உணவாக இருக்கும்.


 பச்சரிசி

நெல்லை அவிக்காமல் அதில் இருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும். இது அவிக்கப்படாத அரிசி என்பதால், ஜீரணம் ஆக கடினமாகவும், அதிக நேரம் எடுக்கும் உணவாகவும் கருதப்படுகிறது. பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

 
பச்சரிசியின் நன்மைகள்

பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலும் பருமனாகும். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
 
சிகப்பரிசி


சிகப்பரிசி உடல் நலனுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு தயாரிப்பது மிகவும் அரிது. புழுங்கல் அரிசியை விட இது விலை அதிகம் என்பதாலும், இதன் சுவை மற்ற சுவையோடு நன்றாக சேர்வதில்லை என்பதாலும், இதனை உணவில் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. ஒரு சில மாநிலங்களில் மட்டும் சிகப்பரிசியை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

 சிகப்பரிசியின் நன்மைகள்


சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து போதிய அளவுக்குக் கிடைக்கிறது. மேலும், சிகப்பரிசி சாதத்தை சாப்பிட்டால், உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும்.  சிகப்பரிசியில் மேலும் ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் உள்ளன. இது இயற்கையிலேயே உடலுக்கு ஏற்ற உணவாகும்.
 
 
 பாஸ்மதி அரிசி


இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசியில் பாஸ்மதி அரிசியும் ஒன்று. எவ்வாறு புழுங்கல் அரிசியில் பல்வேறு ரகங்களும், பல்வேறு விலைகளிலும் விற்கப்படுகிறதோ அதுபோலவே, பாஸ்மதி அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன.  பாஸ்மதி அரிசி வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் உள்ளன.


மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருப்பதால், மற்ற ஏனைய அரிசிகளை விட, பாஸ்மதி அரிசி உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.
 

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!




Cloud-Convert


மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம்.


இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம்.




இது போன்ற நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட வடிவிலான அந்த கோப்பை பொருத்தமான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்னும் எளிமையான இணைய நடைமுறையை நீங்களும் கற்று கொண்டிருக்கலாம்.


இதற்கு தேவையான மென்பொருள்களும் இணையத்தில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.



மென்பொருள் கூட தேவையில்லை, கோப்புகளை மாற்றித்தரும் இணையதளங்களும் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம்.




கிளவுகன்வர்ட்.ஆர்ஜி தளமும் இதே வகையான சேவையை வழங்குகிறது.பெரும்பாலான கோப்பு மாற்று சேவை போல இந்த தளத்திலும் எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை. மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் போதுமானது.கிளவுட் முறையில் செயல்படும் சேவை இது.


இப்படி 148 வகையான கோப்புகளை இந்த சேவை விரும்பிய கோப்பு வடிவில் மாற்றித்தருகிறது. எந்த வகையான கோப்புகளை எல்லாம் மாற்ற முடியும் என்பதற்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுவாக இல்லாமல் , எந்த எந்த பிரிவில் என்ன வகையான கோப்புகளை மாற்றலாம் என அழகாக துணைத்ததலைப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒலி கோப்பு என்றால் எம்பி3 , எம்4ஏ, எ.எ.சி என வரிசையாக ஒரு சின்ன பட்டியல் வருகிறது.



கோப்புகளை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது கூகுல் டிரைவி இருந்தோ பதிவேற்றலாம். மாற்ற வேண்டிய கோப்பு எந்த வடிவில் ,எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் வசதி இருக்கிறது. மாறிய் கோப்பை இமெயில் பெறலாம். அல்லது கூகுல் டிரைவில் வந்து உட்கார செய்யலாம்.டிராப் பாக்சிலும் தான்.



ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் .எனவே மெயிலில் பார்க்க முடியாத கோப்பு வந்தால் இந்த சேவை மூலம் மாற்றி கம்ப்யூட்டரில் பார்த்து கொள்ளலாம்.



சாதாரண பயனாளிகள் நாள் ஒன்றுக்கு 5 கோப்பு வரை மாற்றிகொள்ளலாம். பதிவு செய்து உறுப்பினரானால் கூடுதல் வசதி உண்டு.


பதிவேற்றப்படும் எந்த கோப்பையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதிமொழி தருகிறது.இணைய கண்காணிப்பு யுகத்தில் இது மிகவும் முக்கியம்.


இணைய முகவரி:     https://cloudconvert.org/

"உண்மையான சம்பளம் என்ன?’’ சினிமா படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு!
















ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார்.


சினிமா படவிழா


தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில்  இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார்.


விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:–


அன்புக்காக...


‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடம் பிடித்து எடுத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கும்.


இந்த காலதாமதம் கூட வெற்றிக்கு வழி வகுக்கும். இதுதான் வேண்டும் என்று நம்புவதே அபூர்வம். என் சொற்ப அனுபவத்தில் கூறுகிறேன். நான் நம்பி எடுத்த படங்கள் 90 சதவீதம் தோற்றதே இல்லை.




வெற்றி


நாம் சிரித்து நாம் அழுது எடுத்த படங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையும் இப்படி தான். நம்பிக்கை இருந்தால் ஜெயித்து விடலாம்.


அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கும் போது, ‘நீங்களே அதிக உயரம் இல்லை குள்ளமாக நடிப்பதில் என்ன இருக்கிறது. அமிதாபச்சன் குள்ள மனிதராக நடிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்’.


மெல்லிய கோடு


பருவத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் நடுவில் மெல்லிய கோடு இருக்கிறது. அதை நம்பி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.


நடிகர் வினய் முதன் முதலாக என்னை பார்த்த போது தடுமாற்றத்தால் எனக்கு வாழ்த்து சொன்னதாக தெரிவித்தார். உங்கள் வாழ்த்து நிச்சயமாக எனக்கு வேண்டும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.


தன்னம்பிக்கை 

வெற்றி வரும் போது தன்னம்பிக்கையும் வரும். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். கைத்தட்டலுக்கு எப்போதுமே பலம் உண்டு. ரசிகர்களின் கைத்தட்டல்தான் நடிகர்களுக்கு உண்மையான சம்பளம். மற்றதெல்லாம் வரியாக போய்விடும்’’. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.















விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா நடிகர்கள் பார்த்திபன், உதயநிதி, ஜீவா, வினய் நடிகைகள் திரிஷா, ஆன்ட்ரியா இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டைரக்டர்கள் பாலா, சுசீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.


பட அதிபர்கள் தமிழ் குமரன், வி.ராமதாஸ் ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள். டைரக்டர் அகமது நன்றி கூறினார்.

ஜமைக்காவும், கீரிப்பிள்ளையும்...














நாம் கீரிப்பிள்ளை என்று சொல்லும் உயிரினம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் இல்லை. கீரிக்கும் பாம்புக்கும் ஒத்துவராது என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு சமயம் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் ‘‘பெரிதிலேன்ஸ்’’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்புகள் அதிகம் இருந்தன. அவற்றால் கடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பெருகி வந்த அந்த பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று அங்கு வசித்தவர்கள் தவித்தனர்.



அப்போதுதான் இந்தியாவில் கீரிப்பிள்ளை என்ற உரியினம் இருப்பதும், அதற்கு பாம்புகள்தான் பிடித்தமான உணவு என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இந்தியாவை தொடர்பு கொண்டார்கள். இங்கிருந்து நூற்றுக்கணக்கான கீரிப்பிள்ளைகள் கப்பலில் அனுப்பப்பட்டன. அங்கு இறங்கிய கீரிப்பிள்ளைகளுக்கு அந்த நாடு மிகவும் பிடித்துப்போனது. காரணம் எங்கு பார்த்தாலும் அவற்றுக்கு பிடித்த உணவான பாம்புகள் சுற்றிவந்ததுதான்.



வயிறு நிறைய பாம்புகளை பிடித்துச்சாப்பிட்ட அவை காடு நிறைய குட்டிகளையும் போட்டது. இதனால் ஒரு சில ஆண்டுகளில் ஜமைக்கா முழுவதும் கீரிப்பிள்ளைகள் அதிகரித்து பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட அங்குள்ள மக்கள் கீரிகளை தங்கள் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கத் தொடங்கினர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது.



காரணம் பாம்புகளை ஒட்டுமொத்தமாக அழித்த கீரிப்பிள்ளைகள் உணவின்றி தவித்தன. இதனால் வீடுகளில் மக்கள் வளர்த்த கோழி, வாத்துகளை பிடித்து சாப்பிடத்தொடங்கின. இதுதொடர்ந்த நிலையில் அவற்றிடம் இருந்த தங்கள் வளர்ப்பு பறவைகளை காப்பாற்றுவது அங்கிருந்தவர்களுக்குபெரிய வேலையாகிப்போனது.



பாம்பை எப்படி ஒழிப்பது என்று யோசித்து கீரிப்பிள்ளைகளை நாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள், பின்னர் கீரியை எப்படி ஒழிப்பது என்று யோசிக்கும் நிலை உருவானது. இதன் மூலம் ஒன்று மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக புரிந்தது. பாம்புகளை ஒழிப்பது சுலபம்...ஆனால் கீரிகளை அதுபோல ஒழிக்க முடியாது என்பதுதான் அது.

அவ்வையின் நையாண்டி !


நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.


எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!


இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.


அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ


அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?


அடுத்த வரி, எமனேறும் பரியே - எருமை மாடே



3-வது வரி 'மட்டில் பெரியம்மை வாகனமே'  மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே



'முட்டமேல் கூரையில்லா வீடே'  மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே




'குலராமன் தூதுவனே' - ராமன் தூதுவனே - அதாவது  குரங்கே



கடைசி சொல்லான ‘ஆரையடா சொன்னாயடா ‘ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.




“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.



இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்



‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும்


அல்லது




யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.




எப்படி இருக்கிறது பாருங்கள், நம் புலவர்களின் நையாண்டி!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top