.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 26 October 2013

பாலைவனங்கள்!















செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் வருவது வெப்பப் பாலைவனங்கள். இவை வெப்ப மண்டலத்தில் காணப்படும். ஆப்பிரிக்காவில் அரேபியன், நமீப், காலஹாரி போன்ற பாலைவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.



இரண்டாவதாக குளிர் பாலைவனங்கள். இவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பவை. மலைத்தொடர்களின் அடிவாரங்களில் உருவாகும் இதுபோன்ற பாலைவனங்களில் பகலில் அதிக வெப்பம் காணப்பட்டாலும், இரவில் கடும் குளிர் வாட்டும். ஆண்டுக்கு 25 செ.மீ. மழை பெய்யும். இந்த காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் சோபி, தென்அமெரிக்காவில் பட்டகோனியன் போன்றவை சில குளிர் பாலைவனங்கள்.



துருவப் பாலைவனங்கள் மூன்றாவது வகை. அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வடபகுதி, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்களைப் போல அதிக அளவில் மணல் காணப்படாவிட்டாலும் பாறைகள் இருக்கும். மிகக் குறைந்த அளவில் உயிரினங்கள் காணப்படும்.



உலகிலேயே சகாரா பாலைவனத்தை விட வறண்ட பகுதி அண்டார்டிகா. பாலைவனங்களில் உயர்ந்த பட்ச வெப்பநிலை 58 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும். குளிர் மைனஸ் 88 டிகிரி. அதற்கு கீழேயும் சென்று விடும். பாலைவனங்களில் 259 மி.மீக்கு மேல் மழை பெய்வதில்லை.


பாலைவன மேகங்களை அவற்றின் தோற்ற வடிவிற்கு ஏற்ப பலவாறாகப் பிரிக்கலாம். சிரஸ் வகை மேகங்கள் வளையல் பூச்சிகள் வடிவில் சுருண்ட வடிவில் காணப்படும். இவை சுமார் 12 கி.மீ. உயரம் வரை பரவி நிற்கும்.
‘குமுலஸ்’ வகை மேகங்கள் வட்டவடிவக் குவியல்களாய் உருண்டு திரண்டு நிற்கும். ‘ஸ்ட்ராயஸ்’ வகை மேகங்கள் ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் பஞ்சுகள் போல் காணப்படும். ‘நிம்பஸ்’ வகை மேகங்கள் பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய கார்மேகங்களாகும்.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு!

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு 


ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.


அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.


இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்!

கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம் மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 



1. ஸ்லீப் மோட் (Sleep mode):


 இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி. டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச் செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன் போட்டு நிறுத்துவது போல இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில் வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில் இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ "Standby” என்பது போலத்தான். சிறிய காலப் பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர் அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில்லை.



2. ஹைபர்னேட் (Hibernate):


இந்த நிலையில், திறந்து வைத்து நாம் பயன்படுத்தும் டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட் டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன. மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிறது. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில், செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையிலும், அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம் இல்லை என்றாலும், இந்த நிலையையே பயன்படுத்த வேண்டும்.



3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):


மேலே 1 மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது, திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட் டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் மிகவும் குறைவான மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில் செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில், இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது. இதனை இயக்கியவுடன், இது உங்கள் கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப் நிலையில் வைக்கிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய் இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது, மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில், விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அவற்றை எடுத்து இயக்குகிறது.


4. எப்படி பெறுவது?:

Sleep மற்றும் Hibernate நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில் பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.


1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப் நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட் நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட் செய்திடும் ட்ரைவர் புரோகிராமை இறக்கி இயக்கவும்.



2. உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும், இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.


3. மின்சக்தி மிச்சப்படுத்தும் வழிகள் (powersaving modes), கம்ப்யூட்டரின் பயாஸ் சிஸ்டத்தால், இயக்கவும் மூடவும் செய்யப்படு கின்றன. இவற்றை இயக்கத்திற்குக் கொண்டு வர, உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். அடுத்து பயாஸ் செட் அப் புரோகிராம் செல்லுங்கள். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இதற்கான கீ வேறுபடும். எனவே, எந்தக் கீயை அழுத்தினால், பயாஸ் புரோகிராமிற்குச் செல்ல முடியும் என்பதனை அறிந்து செல்லவும். பொதுவாக, கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையிலேயே, பயாஸ் புரோகிராம் செல்ல என்ன செய்திட வேண்டும் என்பதற்கான வழிமுறை காட்டப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கம்ப்யூட்டருடன் வந்த குறிப்பு ஏட்டினைப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரைத் தயார் செய்த நிறுவனத்தின் இணைய தளம் செல்லவும்.


4. கம்ப்யூட்டரை எழுப்புதல்: இந்த செயல்படா நிலையிலிருந்து எந்த வழிகளில், கம்ப்யூட்டரைச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம்? பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், பவர் பட்டனை அழுத்துவதன் மூலம், செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம். சிலவற்றில், கீ போர்டில் ஏதேனும் ஒரு கீ அல்லது மவுஸ் பட்டன் அழுத்துவதன் மூலம் இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதன் மூடியைத் திறந்தாலே, செயல்நிலைக்குக் கம்ப்யூட்டர் மாறிவிடும். இந்த வழியையும், கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறியலாம்.


5. ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை அமைத்தலும் நீக்கலும்:


ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை கம்ப்யூட்டர் ஒன்றில் அமைத்திட, ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Power Options காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் மேலாக வலது பக்கம் உள்ள வியூ (View) என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் Large icons அல்லது Small icons என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கேடகிரி (Category) வியூவில், System and Security என்பதில் கிளிக் செய்து, இதில் Power Options என்ற தலைப்பில் கிளிக் செய்திடவும்.


இங்கு Select a power plan என்ற பகுதி காட்டப்படும். இதில் அப்போதைய மின்சக்தி கட்டுப்பாடு குறித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகே, Change plan settings என்பதற்கான லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு Change advanced power settings என்ற லிங்க்கும் கிடைக்கும். Sleep என்பதில் உள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்தால், அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
ஏற்கனவே, விரிக்கப்பட்டிருந்தால், அப்படியே அதில் உள்ள ஆப்ஷன்களைக் காணவும். Allow hybrid sleep என்பதன் அருகே உள்ள ப்ளஸ் அடையாளத்தினைக் கிளிக் செய்திடவும்.



பொதுவாக, பவர் சேவிங் திட்டத்தில், கம்ப்யூட்டர் தூங்கும் போது, அதனை இயக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கையில், விண்டோஸ் சிஸ்டம் பாஸ்வேர்ட் ஒன்றைக் கேட்கும். இது தேவை இல்லை என எண்ணினால், பவர் ஆப்ஷன் டயலாக் பாக்ஸில், இதனை நீக்குவதற்கான வழி கிடைக்கும். அதனைச் செயல்படுத்தவும்.



அனைத்தையும் அமைத்த பின்னர், சேவ் பட்டனில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து வெளியேறவும்.


6. கம்ப்யூட்டர் தானாக இந்த நிலைகளை எடுப்பதனை எப்படி தடுப்பது? 


முன்பு கூறியபடி, கம்ப்யூட்டர் இந்த நிலைகளில் இருந்து மீள்கையில், பாஸ்வேர்ட் கேட்பதனை நாம் தடுக்கும் வகையில் செட் செய்திட முடியும். ஆனால், பேட்டரியில் இயங்கக் கூடிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இதில் ஒரு பிரச்னை உள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலையை முடிக்கையில், கவனமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்றுகின்ற வேளையின் நடுவே, பேட்டரி முழுவதுமாகத் தன் சக்தியை இழப்பதாக இருந்தால், நாம் பயன்படுத்திய அல்லது உருவாக்கிய டேட்டாவினை இழந்துவிடுவோம்.



கம்ப்யூட்டர் ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலைக்குச் செல்லுவதற்கான நேரத்தினை மாற்றலாம். கீழ்க்குறித்தபடி செயல்பட்டு மாற்றலாம்.
கண்ட்ரோல் பேனலில், Power Options என்ற பிரிவிற்குச் செல்லவும். Select a power plan திரையில், தற்போதைய பவர் ஆப்ஷன்ஸ் நிலைக்கு அருகே உள்ள Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.


On the Change settings for the plan என்ற விண்டோவில், Change advanced power settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep என்ற தலைப்பில் டபுள் கிளிக் செய்திடவும். நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், On battery or Plugged in என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், எடிட் பாக்ஸ் இயக்கப்படும். இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை அழுத்தவும்.


குறிப்பு:

  நீங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், Setting கிளிக் செய்து, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை, இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அனைத்தையும் சேவ் செய்திடவும். பின்னர், முன்பு கூறியபடி கண்ட்ரோல் பேனல் விண்டோவையும் மூடவும்.
நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Hibernate நிலைதான் மிகச் சரியான தேர்வாக அமையும். ஏனென்றால், மற்ற இரு நிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே, அதிகமான மின் சக்தியை மிச்சம் செய்திடும்.

நோபல் பரிசு!

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு  தினமான டிசம்பர் 10-ஆம்  தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 7 கோடியே 75 லட்சம் வழங்கப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

 பிரிட்டனைச் சேர்ந்த பீ ட்டர் ஹிக்ஸ் (84 வயது), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்கா எங்க்லர்ட் (80 வயது) ஆகியோர் இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-ஆவதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கோட்பாட்டு ரீதியில் கண்டறிந்தனர். இது ‘ஹிக்ஸ் போஸான்’ அல்லது ‘கடவுள் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. இந்தத் துகள் இன்றி மனிதர்கள் உள்பட எவரும் வாழ முடியாது. இந்தத் துகளுடன் தொடர்பு இருப்பதால்தான், அ னைத்துப் பொருள்களுக்கும் எடை கிடைக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவரும் நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பீட்டர் ஹிக்ஸ், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியர்.    பெல்ஜியத்தில் உள்ள லைப்ரி டி பிரக்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் எங்க்லர்ட்.     

மருத்துவத்துக்கான முதல் நோபல் பரிசு

அமெரிக்கப் பேராசிரியர்கள் ஜேம்ஸ் இராத்மேன், ரேண்டி டபிள்யூ.சேக்மேன், ஜெர்மன் பேராசிரியர் தாமஸ் சி.சூடாஃப் ஆகியோர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டலின் செல்களுக்கு இடையே நடைபெறும் மூலக்கூறு பரிமாற்றத் தன்மையை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து நோய்த் தடுப்புக்கு உரிய மருத்துவ வழிமுறைகளை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சர்க்கரை நோய்,  நரம்பியல் தொடர்பான உடல் நலப் பிரச்சினைகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இவர்களின் செல் ஆராய்ச்சி இருந்தது.

ஜேம்ஸ் இ.ராத்மேன் (62 வயது), மெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் செல் உயிரியல் துறைத் தலைவர். ரே‘ண்டி டபிள்யூ.சேக்மேன் (64 வயது),  அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழக செல் உயிரியல் துறைப் பேராசிரியர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தாமஸ் சி.சூடாஃப் (57 வயது), அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரி-வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக்கேல் லெவிட், மார்ட்டின் கார்ப்ளஸ், ரீக் வார்ஷெல் ஆகியோர் இந்த ஆண்டு  வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேதியியல் செய்முறைகளை கம்ப்யூட்டர் மாதிரிகள் மூலம் உருவாக்குவதற்கு அடித்தளமிட்டதற்காக இவர்கள் இந்த  விருது பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பணியாற்றி வரும்  மைக்கேல் லெவிட், இங்கிலாந்து, இஸ்ரேலிய, அமெரிக்கா  குடியுரிமை பெற்றவர். ஸ்ட்ராஸ்போர்க்  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மார்ட்டின்  கார்ப்ளஸ், மெரிக்காவில் வசிக்கும் ஆஸ்திரியர். தெற்கு கலிபோர்னியா  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரீக்  வார்ஷெல்,  அமெரிக்காவில் வசிக்கும் இஸ்ரேலியர்.

இயற்பியலில் முதல்  நோபல் பரிசு பெற்றவர்
வில்ஹம் கான்ட்ராட் ராண்டஜன்
ஜெர்மன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரே
விருது ஆண்டு:  1901


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
மேரி கியூரி
திருமணத்திற்கு முன்பு: போலந்து
திருமணத்திற்குப் பின்பு: பிரான்ஸ்
கண்டுபிடிப்பு: கதிர்வீச்சு
விருது ஆண்டு: 1903
வேதியியலுக்காக 1911இல் நோபல் பரிசு பெற்றவர்.


இயற்பியலில் மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர்
லாரன்ஸ் பிராக் -  25 வயது
பிரிட்டன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரேக்களுக்குப் பயன்படும் கிரிஸ்டல் அமைப்பு.
மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவரும் இவர்தான்.
விருது ஆண்டு: 1915


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற அதிக வயதானவர்
ரேமண்ட் டேவிஸ் ஜூனியர்
அமெரிக்கா
88 வயது
கண்டுபிடிப்பு:  காஸ்மிக் நியூட்ரினோஸ்
விருது ஆண்டு: 2002
 
மருத்துவத்துக்காக  முதல் நோபல் பரிசு  பெற்றவர்
எமில் டாலப் வான் பெங்ரிங்
ஜெர்மனி
கண்டுபிடிப்பு : சீரம் தெரபி
விருது ஆண்டு: 1901


மருத்துவத்துக்காக  நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
ஜெர்ட்டி கோரி
அமெரிக்கா  
கண்டுபிடிப்பு: கிளைக்கோஜன் குறித்த ஆய்வு
விருது ஆண்டு : 1947


மருத்துவத்துக்காக  மிகக் குறைந்த வயதில்  நோபல் பரிசு பெற்றவர்
பிரெடரிக் பாண்டிங்
கனடா
வயது :32  
கண்டுபிடிப்பு: இன்சுலின்
விருது ஆண்டு: 1923


மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்றஅதிக வயதானவர்
பெடன் ரூஸ்
அமெரிக்கா
87 வயது
கண்டுபிடிப்பு: வைரஸை தூண்டும் கட்டி குறித்த ஆய்வு
விருது ஆண்டு: 1966


இயற்பியலில் இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  107 பேர்.
அதில் பெண்கள் 2 பேர்  
இயற்பியலுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்றவர்   ஜான் பர்டீன்
மருத்துவத்துக்காக இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  105 பேர்
அதில்  பெண்கள்  10 பேர்
 

களைப்பில்லாமல் களையெடுக்கலாம்!

சூரிய ஒளியில் இயங்கக் கூடிய களை எடுக்கும் இயந்திரம் ஒன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது

கண்டுபிடிப்பின் பெயர்: சோலார் ட்ரில்லர்
கண்டுபிடிப்பாளரின் பெயர்: எல்.முகேஷ் நாராயணன்


படிக்கும் பள்ளி: ஆத்மாலயா பள்ளி, கீழகாசாக்குடி,காரைக்கால்


கண்டுபிடிப்பின் பயன்: தற்போது பெரும்பாலான விவசாயிகள் களை எடுப்பதற்கு கோனோ வீடர் என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். வயலில் தள்ளிச் செல்லும் அமைப்புள்ள  இந்தக் கருவி, சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப களைகளை நீக்கும். ஆனால் கோனோவீடரை அதிக நேரம் கையாளும்போது விவசாயிகள் களைப்படைகின்றனர். இதற்கு முற்றிலும் மாற்றாக இந்த சோலார் ட்ரில்லர் கருவி செயல்படுகிறது.

இதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த இயந்திரத்தை எளிதாக விவசாயிகள் கையாள முடியும். களைகளை துல்லியமாகவும் அகற்ற முடியும். மேலும் இந்த ட்ரில்லரை  சிறிய அளவிலான விவசாய நிலங்களை உழுவதற்கு டிராக்டருக்கு மாற்றாகவும்  பயன்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

கோனோவீடரால் துல்லியமாக களைகளை அகற்ற முடிவதில்லை. இதனால் விவசாயிகள் ஒருமுறைக்கு பல முறை கோனோவீடரை நிலத்தில் பயன்படுத்த வேண்டி  இருக்கிறது. இப்படிப் பலமுறை கோனோவீடரை நிலத்தில் தள்ளிச்செல்லும்போது உடல் வலி ஏற்படுவதாக விவசாயிகள் பேசிக் கொள்வதைக் கவனித்தேன்.

மேலும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக சில ஏழை விவசாயிகள் மற்றவர்களைவிட தாமதமாகவே தங்கள் நிலங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்குவர். இதனால் இவர்கள் தங்கள் நிலத்தை உழுவதற்கு முன்னரே அதைச் சுற்றியுள்ள நிலங்களில் விவசாய வேலைகள் முடிந்து பயிர்கள் வளரத் தொடங்கிவிடும். இதனால் உழவு செய்ய மாடுகளையோ, டிராக்டரையோ நடுவிலுள்ள அவர்களின் நிலத்திற்கு கொண்டுசெல்ல முடியாது. இதனால் தண்ணீர் இருந்தும்  விவசாயம் செய்யாத பல விவசாயிகளைப் பார்த்தேன். எனவே இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே கருவியின் மூலம் தீர்வு காண வேண்டும் என நினைத்து இந்தக் கருவியை வடிவமைத்துள்ளேன்.

25 வாட்ஸ் திறனுள்ள சோலார் தகடு இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோலார் தகட்டின் மூலம் பெறப்படும் மின்சாரம், சார்ஜ் கண்ட்ரோலரின் உதவியால் 12 வோல்ட் டி.சி. மின்சாரமாக பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட மின்சாரம்  மூலம் டி.சி. மோட்டார் இயக்கப்படுகிறது. மோட்டாரை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஸ்விட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது. களை எடுக்க மற்றும் உழவு செய்ய மோட்டாருடன் கியர் பாக்ஸ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தின் அமைப்பிற்கேற்ப  இயந்திரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்" என்கிறார் முகேஷ் நாராயணன்.

இயந்திரத்தின் சுழலும் அமைப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் துரு பிடிக்கும் பிரச்சினை கிடையாது. இதை எளிதாக தள்ளிச் செல்லலாம் என்பதால் மனித உழைப்பு அதிகம் தேவையில்லை. எரிபொருள் செலவும் இல்லை. சோலார் பேனல் மற்றும் பேட்டரியோடு இதன் விலை 15,000 ரூபாய். சோலார் பேனல் இல்லாமல் 3,750 ரூபாய். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறையலாம்.

தொடர்புக்கு: 95666 68066

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top