வேத காலம்
உலோக காலத்தை தொடர்ந்து வந்த காலம் வேதகாலம் என்றழைக்கபடுகிறது.
கி.மு1000 லிருந்து வேதகாலம் ஆரம்பமாகிறது. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள்
நாகரீக வாழ்வை அடைந்ததும் மொழிகள் தோன்ற ஆரம்பித்தன மொழிகள் தோன்ற
ஆரம்பித்ததும் வேதங்களும், புராணங்களும் தோன்றியது.இப்படி படிப்படியாக முன்னேறிய மனித சமுதாயம் ஒரு சீரிய முன்னேற்றத்தை அடைந்தது வேத காலத்தில் தான். இந்தியாவின் பழமையான வேதங்களாக கருதப்படும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள், உபநிடதங்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டன, மேலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் ஹிந்து மதம் தோண்டியது, உலகில் மூன்றாவது பெரிய மதம் நம் ஹிந்து மதம் தான், புத்த மதம், சமண மதம் தோன்றியது வேத காலத்தில் தான். இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் நடந்ததும் இயற்றப்பட்டதும் இக்காலகட்டத்தில் தான் .
தென்இந்தியாவை பொறுத்தவரை திராவிட மொழி தோன்றியது, மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள் தென்இந்தியாவை ஆண்டு வந்தனர். தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது மேலும் தமிழின் பழமையான நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டது. இனி வேத கால வரலாற்றை பற்றி படிப்படியாக பார்ப்போம்.
கி.மு1200 ஆண்டு வாக்கில் சிந்துசமவெளி நாகரிகம் அழிந்த பின்பு வட இந்தியா முழுவதிலும் பல இடங்களில் சிற்றரசுகளும், பேரரசுகளும் தோன்றி வளர ஆரம்பித்தன. இதில் முக்கியமானதாக கருதப்படுவது மகாஜனபதங்கள் என்றழைக்கபடும் 16 பேரரசுகள் அல்லது நாடுகள் ஆகும். இவற்றின் காலம் கி.மு1000 இல் இருந்து கி.மு 400 வரை.
மகாஜனபதங்கள்
மகாஜனபதங்கள் என்பது பண்டைய இந்தியாவில் காணப்பட்ட பேரரசுகள் அல்லது
நாடுகளைக் குறிக்கும். இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம்
முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு
அரசுகளாகும்.
1. அங்கம் (anga)
2. கோசலை (kosala)
3. காசி (kashi)
4. மகதம் (magadha)
5. வஜ்ஜி (vajji)
6. மல்லம் (malla)
7. சேதி (chedi or cheti)
8. வத்சம் (vatsa or vamsa)
9. குரு (kuru)
10. பாஞ்சாலம் (panchala)
11. மத்சம் (matsya or machcha)
12. சூரசேனம் (surasena)
13. அஸ்மகம் (ashmaka or assaka)
14. அவந்தி (avanti)
15. காந்தாரம் (gandhara)
16. காம்போஜம் (kamboja)
அங்க நாடு என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஒரு ராச்சியமாகும். அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. மேலும் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றாக அங்கம் உள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல இடங்களிலும் அங்க நாடு வருகிறது.
மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.
ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.
மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார் மற்றும் ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா மற்றும் சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின் படி துரியோதனன் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான்.
மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம் மற்றும் வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம்.
அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.
கோசல நாடு
கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இப்பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும். கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன. புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது.
ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் இஷ்வாகுவின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். புராணங்களில் இஷ்வாகு முதற்கொண்டு பிரசன்னஜித் வரையான இஷ்வாகு வம்ச அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது.
காசி நாடு
காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது.
பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர்.
காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.
மகத நாடு
மகத நாடு மகாஜனபதங்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம்,மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்புஅதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.
கி.மு 684 இல் மகத நாடு தோற்றுவிக்கப்பட்டது. ப்ரிஹ்றத ராஜ்ஜியம், பிரத்யோட ராஜ்ஜியம், ஹரயங்க ராஜ்யம், சிசுங்க ராஜ்ஜியம் போன்ற பலதரப்பட்ட ராஜ்யதால் கி.மு684 முதல் கி.மு424 வரை ஆளப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.
மகாஜனபதங்களில் உள்ள மற்ற ராஜ்ஜியங்களை பற்றியும் வேத காலத்தில் தென் இந்தியாவின் வரலாறு பற்றியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்...
அடுத்த பதிவு அடுத்த வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்,. இனி பிரதி வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்...
பதிவு பற்றிய கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்க்கபடுகின்றன...