பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.குறிப்பிட்ட நோய் குறித்த தகவல்களை, முதலுதவி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை நோயாளியோ, உறவினரோ இந்த 104ல் தொடர்பு கொண்டு அறியலாம். சென்னையில் இதற்கென கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, எந்நேரமும் தயாராக உள்ள சிறப்பு டாக்டர்களுக்கு இணைப்பு தருவர்.
இவர்களிடம் எந்த நோய் குறித்தும் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள், அலோபதியுடன், ஹோமியோபதி, சித்த மருத்துவ முறைகள் குறித்தும் கேட்டறியலாம்.இதுகுறித்து ‘104‘ சேவை மையத்தினர் கூறுகையில், ‘‘சோதனை முறையில் இச்சேவை தொடங்கப்பட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
ஆனால், இதில் 15 அழைப்புகளே மருத்துவ ஆலோசனை கேட்டு வருகின்றன. மீதி அழைப்புகள் அனைத்தும் இச்சேவை மூலம் என்னென்ன தகவல்கள் பெறலாம் என மக்கள் ஆர்வத்துடன் விவரம் கேட்பதாகவே இருக்கிறது. தற்போது தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தகவல் தெரிவிக்கிறோம். ஓரிரு வாரங்களில் இச்சேவையை தமிழக அரசு முறைப்படி தொடங்கியதும், 24 மணிநேரமும் தகவல் வழங்கப்படும். இந்த அழைப்பிற்கு வரும் போன் பேச்சு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது என்றனர்.