.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 3 October 2013

முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)



 
கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.
 


அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான்.


வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான்.


உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார்.


அவனும் அப்படியே செய்தான்.


இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார்.


'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி.


'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா


விதைகளும் நம்மால் தூக்கி எறியப்படப் போகின்றன.ஆனாலும்.. ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றன.


பல வீணாகிப் போனாலும் ஏதேனும் ஒன்று ஆப்பிள் மரமாக ஆகத்தானே போகிறது.அதுபோலத்தான் நம் முயற்சிகளும்...


வெற்றி கிடைக்காததால் ....அது பெரிய தோல்வியாக எண்ணாமல் ..அடுத்த முயற்சியில் ஈடுபடு...அப்போது என்றேனும் வெற்றி உனக்கு கிட்டும்'


என்றார் கோபியின் தந்தை.


கோபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.


இதையே வள்ளுவர்


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும் ...  என்றார்.
 

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.முயற்சியே சிறந்த செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது பொருள்.
 
 

உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?


நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் நாடுகளை தரம் பிரித்து உலக மனித வள மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு (டபிள்யு.இ.எப்.) நியூயார்க் நகரில் 122 நாடுகளின் தரப் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இடம்பெற்றுள்ளதாகவும். சீனா 43வது இடத் திலும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளதாகவும் தென் ஆப்ரிக்கா இந்தியாவைவிட பின்தங்கி 86வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



3 - human-resources.



இதற்கிடையில் ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது.


ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது.


முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.
அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன.


மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.


தற்போதைய பட்டியலில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளின் தனித்தன்மை வரையறையில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்றுள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர்களின் சுகாதாரம், வசதி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி நிலையில் உள்ளது. தொழிலாளர்களின் உடல் நலம், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் மிகவும் குறைந்த புள்ளிகள் உள்பட வேறு சில காரணிகளும் மொத்த குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.


எல்லா பிரிவுகளிலும் சிறப்பிடம் பெற்ற சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பின்லாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, டென்மார்க், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


உலக நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 122வது இடத்திற்கு யேமன் தள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் 112வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும், எப்படி தங்களின் மனித வள ஆற்றலை பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள பயன்படுத்தும் புதிய கணிப்புதான் மனித வள மூலதன குறியீடு. பின்னர் நீண்ட கால தொழிலாளர் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகள் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


தொழிலாளர்களின் மேம்பாடு, உடல் நலன், கல்வி மற்றும் திறமை ஆகிய நான்கு பிரிவுகள் , கல்வி, உடல்நலன், சுகாதாரம், உழைப்பாளர் சக்தி, வேலைவாய்ப்பு, மேம்பாட்டு சூழல் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று உலக பொருளாதார அமைப்பின் நிர்வாக தலைவர் ஹலூஸ் ஸ்வாப் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்!



உணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம்.



சொக்லெட்


சொக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.


நட்ஸ்


நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.


கீரை வகைகள்


பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது.


இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.


பாஸ்தா


முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.


கோதுமை பிரட்


முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு.


அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் மன அழுத்தத்தை நீக்கலாம்.


ப்ளூ பெர்ரி


சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.


பாதாம்


பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.


ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.


க்ரீன் டீ


உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது.


மீன்


சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.


ஓட்ஸ்


உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால்,
அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.


பால்


பாலில் ட்ரிப்டோபைன் இருப்பதால், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மனதை ஆசுவாசப்படுத்தும்.


வாழைப்பழங்கள்


குறைவான நார்ச்சத்தை கொண்ட வாழைப்பழங்கள் வாய்வு இடர்பாட்டை குறைக்கும். அதனால் மனது அமைதி பெற்று, நாள் முழுவதும் மன சோர்வு இல்லாமல் இருக்கலாம்.


சாதம்



கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதம் இதற்கு பெரிதும் துணை புரியும்.


மேலும் குறைவான கொழுப்பை கொண்ட சாதம் செரிமானத்தையும் சுலபமாக்கும்.

மேற்கூறிய சில உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
அது மனக்கலக்கத்தை குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது!!!





 இம்மாதம் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோளான ‘மங்கல்யான்’, பெங்களூரில் இருந்து நேற்று கன்டெய் னர் லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்பட்டது. ‘இந்த செயற்கைக்கோள் சிறப்பு கன்டெய்னர் லாரியில் வைத்து அனுப்பப்பட்டது’ என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். செயற்கைக்கோள் எடுத்துச் சென்ற கன்டெய்னரின் முன்னும் பின்னும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்து சென்றன.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இன்று மாலை அந்த லாரி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் லாரி மெதுவாக ஓட்டிச் செல்லப்பட்டது. காந்தி ஜெயந்தி பொது விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும். எனவே, செயற்கைக்கோளை கொண்டு செல்ல நேற்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளதாக சமீபத்தில் தேசிய நிபுணர் கமிட்டி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து வரும் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ உகந்த சூழ்நிலை நிலவுகிறதா, மீத்தேன் வாயு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ள இந்த செயற்கைக்கோள், செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்க ளையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளது.
வானிலை ஒத்துழைத் தால் வரும் 28 மாலை 4 மணி 14 நிமிடம், 45 வினாடிகளுக்கு ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து பிஎஸ்எல்வி ,சி25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்ப டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா தகவல்

1,350 கிலோ எடை கொண்ட மங்கல்யான் செயற்கைக்கோள், பூமியில் இருந்து விலகிய பிறகு 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும்.

லாலுக்கு 5 ஆண்டு சிறை!





 கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னதாக, சிறையில் உள்ள குற்றவாளிகள் 45 பேரும் வீடியோகான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்து போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்போது பீகாருடன் இணைந்திருந்த ஜார்கண்டில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து, கால்நடை தீவனம் வாங்க போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி பெறப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக முதல்வர்களாக இருந்த லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 56 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக கடந்த 1996ல் சிபிஐ விசாரணையை தொடங்கியது. அதன்பின் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 1997ம் ஆண்டு முதல்வர் பதவியை லாலு ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது 7 பேர் இறந்தனர். சிலர் அப்ரூவராக மாறினர். ஒருவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற கோரி, ஜார்கண்ட் ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் லாலு பிரசாத் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் லாலு தரப்பு வக்கீல், தனது தரப்பு வாதத்தை கடந்த 17ம் தேதி முடித்துக் கொண்டார். 17 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி பிரவாஸ் குமார் சிங் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜகதீஷ் சர்மா உள்பட), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரம் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.கே.சிங் வீடியோ முன்பாக அவர்கள் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

எம்.பி. பதவியை இழக்கிறார் லாலு

மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழந்து விடுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதை செல்லாததாக்க அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், ராகுல் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த அவசரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், தண்டனை அறிவிக்கப்பட்ட லாலுவிற்கும் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஜகதீஷ் சர்மாவின் எம்.பி. பதவி பறிபோய் விடும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top