.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 19 September 2013

'தல' அஜித்தின் தனிமனிதப் போராட்டம்!





”கதைக்கு ஏற்ற தலைப்பு 'ஆரம்பம்'. இந்த தலைப்பு வைத்ததே படத்திற்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது” என்று அடக்கமாக பேசுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இறுதிகட்ட பணிகள், இசை வெளியீடு என மும்முரமாக பணியாற்றி கொண்டிருந்தவரிடம் பேசினோம். 


'ஆரம்பம்' ஏன் இவ்வளவு லேட்?

 
“படத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் பெயர்களை கேட்டால் 'ஏன் இவ்வளவு தாமதம்' என்று கேட்க மாட்டீர்கள். அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா (கெஸ்ட் ரோல்), சுமன் ரங்கநாதன், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்சுரேகர் மட்டுமன்றி, அக்‌ஷ்ரா கெளடா என்ற பெண்ணையும் இப்படத்தில் அறிமுகம் செய்கிறேன். இவ்வளவு நடிகர்களின் கால்ஷீட் வாங்கி, படப்பிடிப்பு போக வேண்டும். படம் தாமதம் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அதுமட்டுமல்ல நான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தவே இல்லை என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.” 


படத்தலைப்பிலும் நிறைய குழப்பம் இருந்தது போல?

 
“படத்தலைப்பில் குழப்பம் இருக்கிறது நான் எப்போதாவது நான் கூறினேனா? நான் முதலில் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் படத்தலைப்பு பற்றி யோசிக்கவில்லை. 'ஆரம்பம்' என்ற டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றவுடன் வைத்தேன். அவவளவு தான். அந்த தலைப்பு வைத்தவுடன், இணையத்தில் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.” 


விஷ்ணுவர்தன் படம் என்றாலே அஜித் அல்லது ஆர்யா இருப்பார் என்றாகிவிட்டதே... வேறு நடிகருடன் படம் பண்ணும் ஐடியா எதும் இல்லையா?

 
“விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் இதனை பிரேக் பண்ணுவேன். அதுமட்டுமன்றி எனக்கு அஜித், ஆர்யா இருவரிடம் நடிகர்கள் என்பதையும் கடந்து நட்பு இருக்கிறது அதனால் நான் அவர்கள் இருவருடன் பணியாற்றும் போது மிக நன்றாக செயல்பட முடிகிறது. நல்ல சூழல் கிடைக்கிறது.” 


'பில்லா' நயன்தாரா - 'ஆரம்பம்' நயன்தாரா எப்படி இருக்காங்க?

 
“பில்லா' படத்தில் ரொம்ப கிளாமரா நடிச்சு இருப்பாங்க. ஆனால் இப்படத்தில் அப்படியில்லை. 'ஆரம்பம்' படத்தில் அஜித்திற்கு ஜோடி என்பதையும் தாண்டி ஒரு நல்ல பாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார்.” 


'ஆரம்பம்' கதை என்ன? அஜித்திற்கு என்ன ரோல்?

 
“ஒரு வரிக்கதையினை கூறினால் படத்தின் கதை உங்களுக்கு தெரிந்துவிடும். ஒரு தனிமனிதப் போராட்டம் தான் 'ஆரம்பம். அஜித் சார் என்ன பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதினை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் இன்னும் ஒரு சில பணிகள் இருக்கின்றன். 19ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும். படத்தின் பைனல் எடிட் பார்த்தேன். 'ஆரம்பம்' மிகவும் ஸ்டைலீஸாகவும், பரபரப்பாகவும் வந்து இருக்கிறது. படம் பார்க்கும் ஒருவருக்கு கூட 'ஆரம்பம்' போர் அடிக்காது.


காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)



ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.

அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.

மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.

அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.

அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.

காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.

காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.
 

சாம்சங் நோட் 3 ஸ்மார்ட் போன் அறிமுகம்!

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் புதிய நோட்-3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மற்றும் ஐடி பிரிவுத் தலைவர் விநீத் தனேஜா (இடது), இயக்கநர் மனு சர்மா.



செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


 ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. 


இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். 


விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.

கடலில் பாய்ந்து தோழர்களை மீட்ட தைரிய சிறுவன்!



கண்ணெதிரே ஒருவர் அடிபட்டுக் கிடந்தாலும், 'ஓரமா படுக்க வையுங்க சார்' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிப் போகும் இரக்க சிந்தனையாளர்களின் உலகம் இது. அவர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமான காரியம் ஒன்றை செய்திருக்கிறான் சிறுவன் ரிஷி. 



நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் இருக்கிறது திருமுல்லைவாசல் கிராமம். இங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் ரிஷி. பள்ளிக்குள் நுழைந்து ரிஷி என்று சொன்னதுமே நம் கைபிடித்து அழைத்துச் சென்று தலைமையாசிரியர் தமிழ்ச் செல்வனுக்கு முன் நிறுத்தி, 'சார் நம்ம ரிஷியைப் பார்க்க வந்திருக்காங்க' என்று அறிமுகப்படுத்துகிறார்கள் சக மாணவர்கள். திடீர் பிரபலமாயிருக்கும் அந்த சிறுவனுக்கு தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் எதுவும் தெரியவில்லை. என்னவோ ஏதோ என்று பயந்து கொண்டே உள்ளே வந்தவன் கையை கட்டிக்கொண்டு நிற்கிறான். அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஷமீர் பாரிஸுக்கும் சகாபுதீனுக்கும் தகவல் தெரிந்து அவர்களும் அங்கே வருகிறார்கள். இருவரும் உள்ளே நுழைந்ததுமே ரிஷியை பார்த்துவிட்டு ஓடிவந்து கட்டிக் கொள்கிறார்கள். 




''ஞாயித்துக்கிழமை (15.9.13) காலையில நான், அமிருதீன் (இதேபள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்) சகாபுதீன் மூணு பேரும் கடலுக்கு குளிக்கப் போனோம். நேரம் போறது தெரியாம ரொம்ப நேரமா கடல்ல ஆடிக்கிட்டு இருந்தோம். அப்ப, திடீர்னு ஒரு அலை வந்து, அமிருதீனை இழுத்துருச்சு. அவன காப்பாத்துறதுக்காக நானும் சகாவும் பின்னாடியே போனோம். ஆனா, அதுக்குள்ள அவன் ஏழு பாவம் தூரம் (கிட்டதட்ட 200 மீட்டர்) போயிட்டான். பாதி தூரம் போனவுடனே எங்களூக்கும் ஆழம் நிலைக்கல. முழுவ ஆரம்பிச்சட்டோம். ஒருத்தரை ஒருத்தர் பிடுச்சுகிட்டாலும் ஒண்ணும் செய்ய முடியல. ஆனாலும், தாக்கு பிடிச்சு தத்தளிச்சுக்கிட்டே இருந்தோம். அப்பதான் ரிஷி தூரத்தில ஒரு மரத்துல வேகமா வரது தெரிஞ்சுது. அவன், கிட்ட வந்ததும் அந்த மரத்தை எட்டி பிடிச்சுகிட்டோம்”' என்று படபடப்புடன் விவரித்தான் ரிஷியால் உயிர் பிழைத்திருக்கும் சிறுவன் ஷமீர்பாரிஸ்.
"நானும் எங்க தெரு பசங்களும் அங்கதான் குளிச்சிக்கிட்டிருந்தோம். 




இவனுங்க அந்த பக்கம் குளிச்சுகிட்டு இருந்துருக்காங்க. அமிருதீனை அலை இழுத்துகிட்டு போனதும் எல்லா பசங்களும் மேடேறிட்டானுங்க. பக்கத்துல பெரியாளுங்க வேற யாரும் இல்லை. உடனே நான் எப்பவும் வைச்சு வெளையாடற மரத்தை எடுத்துகிட்டு கடலுக்குள்ள போயிட்டேன். மரத்துல படுத்துக்கிட்டு, வேகமா இவங்ககிட்ட போனேன். கிட்டப் போனதும்தான் பயமே வந்துச்சு. இவங்கள காப்பாத்தப் போயி நம்மளும் சிக்கிக்கிட்டா.. என்ன பண்றதுன்னு பயம். ஆனது ஆகட்டும்னு மரத்துல ஒரு மொனையில நான் படுத்துகிட்டு இன்னொரு மொனையில இரண்டு பேரையும் தொத்த வைச்சேன். அப்படியே கையால தண்ணிய தள்ளி தள்ளியே ரெண்டு பேரையும் கரைக்கு கொண்டாந்துட்டேன்" என்று தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியம் தெரியாமல் சர்வசாதாரணமாய் சொன்னான் ரிஷி. 




தாமதமாக செய்தியைக் கேள்விப்பட்ட மீனவர்கள், படகுகளில் போய் அமிருதீனை மீட்டிருக்கிறார்கள். ஆனால், தண்ணீரை அதிகம் குடித்திருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அமிருதீனின் உயிர் பிரிந்துவிட்டது. அப்போதுதான், இன்னும் இரண்டு சிறுவர்களை ரிஷி காப்பாற்றிய விஷயம் பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்திருக்கிறது. 



'' இவனுக்கு கடல்ல பயமே கிடையாது சார். இவன்பாட்டுக்கு நீந்தி நடுக்கடலுக்கு போயிடுவான். ஏதாவது மர துண்டைப் பிடுச்சுகிட்டு நாள்பூராவும் கடல்ல மிதப்பான். இவன் சரியான கடல்சுறா”” என்கிறது ரிஷியின் வாண்டு வட்டம். ‘'அலை வேகமா இருக்கு, பின்னால இழுக்குது, குளிக்க போகாதீங்கடான்னு எங்க தெரு பெரியபசங்க சொன்னாங்க. ஆனா அமிருதீன், அதையெல்லாம் கேட்காமதான் எங்களையும் இழுத்துட்டுப் போனான். ரிஷி மட்டும் இல்லைன்னா அமிருதீன் போன எடத்துக்கே நாங்களும் போயிருப்போம். நாங்க செத்துப் பொழைச்சிருக்கோம்; எங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கான் எங்க ரிஷி. இனி, அவன்தான் எங்களுக்கு கடவுள்” - சகாபுதீனின் இந்த வார்த்தைகளில் புகழ்ச்சி இல்லை, நெகிழ்ச்சிதான் இருந்தது. 


Wednesday, 18 September 2013

டாப் 20 சமையல் குறிப்புகள்!


  1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
  3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.
  4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.
  5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.
  6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
  7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.
  8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.
  9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.
  10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.
  11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.
  12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
  13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
  14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
  15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
  16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
  17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
  18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
  19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
  20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top