.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 September 2013

இயல்பு வாழ்க்கையில் இவர்கள்!



எடிசன்



மிகப் பெரிய ஆளுமைகள் என்று நாம் கொண்டாடுபவர்கள் தங்கள் உறவினர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இதோ ஒரு சுவையான பதிவு.


எடிசன் வாங்கிய 'பல்பு'

வெகுகாலம் முயன்று மின்சார பல்பை வெகு நேரம் எரிய வைக்கும் இழையை கண்டறிந்துவிட்டு எடிசன் குதூகலித்துக்கொண்டு இருந்தார். யாரிடமாவது தன்னுடைய சாதனையைக் காட்டவேண்டும் என்று கைகள் பரபரத்தன. வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் மனைவியைத் தவிர வேறு யாரை எழுப்புவது? அவரை எழுப்பி, “டியர் எத்தனை அளப்பரிய சாதனை செய்திருக்கிறேன் நான் பார்!” என்று சொன்னதும், அவரின் மனைவி, “நடுராத்திரியில விளக்கை இப்படியா எரியவிடுவீங்க? கண்ணெல்லாம் எரியுது. தூங்கவிடுங்க!” என்று சொன்னபோது, எடிசனின் முகம் எப்படி ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.


புத்தரின் உறுதிமொழி


புத்தர், சித்தார்த்தனாக இருந்த காலத்தில், அவரோடு பிணைந்திருந்த உறவுகளைக் காண நேரிட்டது. அவரின் தந்தை சுத்தோததனரை கண்டு வெகு இயல்பாக அவர் பேசினார். யசோதையை மனைவியாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும், புன்னகை மாறாமல் தன்னை நோக்கி வந்த யசோதையை புத்தத் துறவியாக தீட்சை கொடுத்துவிட்டு, “அன்னையே!” என்று அழைத்தார். கூடவே, கூடுதல் இணைப்பாக மிக இளைய சிறுவனான ராகுலனுக்கும் துறவை அவர் கொடுத்து விடவே, “இனி நான் என் அரசை ஆள எனக்குப்பின் யாரிருக்கிறார்? புத்தரே எனக்கொரு வாக்கு கொடுங்கள்... இனிமேலே பெற்றோரின் அனுமதி இல்லாமல் இளையவர்களுக்கு துறவு தரமாட்டீர்கள் என்கிற உறுதியை நீங்கள் எனக்குத் தர வேண்டும்!” என்று அவர் கதற, புத்தர் அதற்கு பின் அவ்வாறே நடந்துகொண்டார்.


ஐன்ஸ்டீனும் நிலாவும்


ஐன்ஸ்டீன் புது மாப்பிள்ளை ஆனார். கல்யாணம் முடிந்த சில நாட்களில் அவர் கைகளில் ஒரு தாளை அவரின் இளம் மனைவி திணித்தார். “நிலவைப் பற்றிய கவிதை இது!” என்று அவர் சொல்ல, ஐன்ஸ்டீன் அதை வாங்கி சலனமில்லாமல் படித்தார். ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும். உதட்டை பிதுக்கிவிட்டு, “என்ன இப்படி ஆஹா ஓஹோ அப்படின்னு நிலாவை புகழ்ந்து இருக்கே? நிலாவில் காற்றில்லை, முழுக்க மலைகள்தான். அங்கே ஒருத்தரும் வாழ முடியாது. முழுக்க அலங்கோலம். அதைப்போய் அழகு என்று கவிதை வேறு! என்ன பொண்ணுமா நீ?” என்று கடிந்துகொண்டார் ஐன்ஸ்டீன்.


செப்.20 வெளியாகும் ‘6’: சுதீப் பாராட்டு!






துரை இயக்கத்தில் ஷாம் நடித்திருக்கும் ‘6’ திரைப்படம், செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.


ஷாம், பூனம் கவுர், மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘6’ படத்தினை இயக்கி இருக்கிறார் வி.இசட். துரை. ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.


சுமார் மூன்று வருடங்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஷாம் 6 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமன்றி இப்படத்தின் ஒரு கெட்டப்பிற்காக தூங்காமல் இருந்து கண்ணுக்கு கீழ் எல்லாம் வீங்கி விட்டது. அவ்வாறு இப்படத்திற்கு பெரும் சிரத்தினை எடுத்து நடித்து இருக்கிறார்.


இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டாலும், பெரிய படங்கள் வெளியீட்டால் இப்படத்தினை ஒத்திவைத்து வந்தார்கள். தற்போது இப்படத்தினை அபி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ 9 நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளன.


இப்படத்தினை பார்த்துவிட்டு ‘நான் ஈ’ பட வில்லன் சுதீப் தனது ட்விட்டர் தளத்தில் “ஷாம் நடித்த ‘6’ படத்தினைப் பார்த்தேன். மிக அற்புதமான படம். அவரது கடின உழைப்பிற்கு எனது பாராட்டு. படம் பார்த்ததும் அவர் மீதிருந்த மரியாதை இருமடங்காகிவிட்டது. படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டினேன். ’6’ மாதிரி ஒரு படத்தினை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். இது கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் “


செப்டம்பர் 20ம் தேதி 200 திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஷாம் நடித்து வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘6’ என்பது குறிப்பிடத்தக்கது.


தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்!

தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு.



அமெரிக்காவில் ஆண்டுதோறும் 23,000 பேர் நோய்த் தொற்றுகளால் மட்டும் உயிரிழக்கின்றனர். நோய்த் தடுப்பு மருந்து மாத்திரைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டுப்படாத நோய்த் தொற்றுகளால் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு உடல்நலம் கெடுகிறது. இது இப்போது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எனவேதான், அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் முதல் முறையாக நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாதவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.
"உயிரிழந்தவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிடக் குறைவாக இருக்கிறது. காரணம், தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்த் தொற்று இறந்தவர்களிடத்தில் இருந்தாலும் அதனால்தான் இறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பலருடைய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 



‘நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல மருந்துகளை நாம் தயாரித்தாலும், அந்த மருந்துகளால் பாக்டீரியாக்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிறகு அது பல மடங்கு வீரியத்துடன் வந்து சமூகத்தைத் தாக்குகிறது. அப்போது சாதாரண நோய்த் தொற்றுக்கே மனிதர்கள் இறக்க நேரிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். எனவேதான், இப்போதைய உயிரிழப்புகள் கவனமுடன் ஆராயப்படுகின்றன. தோராயமாகக் கணக்கிட்டு இறப்பு எவ்வளவு என்று முன்னர் கூறிவந்தவர்கள் இப்போது துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கின்றனர்" என்று டப்ட்ஸ் பல்கலைக்கழக நுண்ணியிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் லெவி தெரிவிக்கிறார். நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதற்கான சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். 



உலகமெங்கும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று 2007-ல் மதிப்பிடப்பட்டது. சிலவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டது. ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் பல பலனற்றுப் போய்விடவில்லை என்று இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே இறப்பைக் குறைத்துக் காட்டியிருப்பதாக டாக்டர் ஸ்டீவன் சாலமன் தெரிவிக்கிறார். "நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இறப்பு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்த இறப்புகளை மட்டும் கணக்கில் சேர்க்குமாறு கூறப்பட்டது" என்றார். 



அமெரிக்காவில் உள்ள பால், இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணை களில்தான் 70% நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைச் சரியாக ஆராய அந்தப் பண்ணைகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நோய்த் தடுப்பு மருந்துகளைக் கால்நடைகளும் உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனிதர்களின் உணவிலும் அப்படியே உடலிலும் இவை சேருகின்றன. எனவே நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பிராணிகளுக்குப் பண்ணையில் நோய்த்தடுப்பு மருந்து நோய் வராமல் இருப்பதற்காக மட்டுமல்ல, வேகமாக வளர்வதற்காகவும் தரப்படுகிறது. 



இப்படி பிராணிகளுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் பெரும்பாலானவை அவற்றுக்குத் தேவையானவையே அல்ல, அத்துடன் பொருத்தமானவையும் அல்ல. மனிதர்களுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்து ரகங்களிலும் பாதிக்கு மேல் பொருத்தமானவை அல்ல.
பாக்டீரியாக்களில் 17-வகையும் ஒரு பூஞ்சையும்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமி வகை களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன. "சி.ஆர்.இ. என்று பெயரிடப்பட்ட ஒருவகை பாக்டீரியா இப்போது அமெரிக்காவில் விற்கப்படும் எல்லாவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வமானது ஆனால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் இதற்குப் பலியாகின்றனர். வியப்பு என்னவென்றால் இது அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறது. 


இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தீர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று டாக்டர் மைக்கேல் பெல் நம்பிக்கையுடன் கூறுகிறார். 



"எம்.ஆர்.எஸ்.ஏ. என்று அழைக்கப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத மற்றொரு வகை பாக்டீரியாவின் தாக்குதலும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மருத்துவமனை அல்லாத பிற இடங்களில் இந்த நோய்த் தொற்று இரட்டிப்பாகிவிட்டது. அது மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது. மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்த லாம் என்றால் அவை வேறு இடங்களுக்குச் சென்று பரவுவது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அயோவா பல்கலைக்கழக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு துறையைச் சேர்ந்த எலி பெரன்சிவிச் தெரிவிக்கிறார். 


"கால்நடைப் பண்ணைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரில் 38% பேருக்கு எம்.ஆர்.எஸ்.ஏ. வகை பாக்டீரியாக்களின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


மிருதுவான தோல் அல்லது திசுக்கள் உள்ளவர்கள் இந்த பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றனர். இதற்குப் பண்ணைகளில் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளைவிட வேறு காரணங்களும் இருக்கலாம்" என்று இந்த ஆய்வுகளில் ஈடுபடாத ஆனால் தகவல் தெரிந்த ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த்தடுப்பு மருந்து மாத்திரைகள் விற்பனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரூபாய்களில் நடக்கிறது. டாக்டர்கள் தங்களுடைய அனுபவம், படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். 


ஆனால் அவற்றுக்கும் கட்டுப்படாமல் பாக்டீரியாக்கள் வலுப்பெற்று வருவதை இந்த ஆய்வுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன. 


அகராதி படைத்த சாமுவேல் ஜான்சன்!


சாமுவேல் ஜான்சனின் இல்லம்


ஆங்கில மொழியை உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள் என்று நமக்கு தெரியும். அம்மொழி அவர்களின் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயன்பாட்டில் அருகி இருந்தது என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பிரெஞ்சும்,லத்தீனும் அதன் இடத்தை பிடித்துக்கொண்டு சிரித்தன. 



பின்னர் மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன். 


சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. படிக்க புத்தகங்கள் வாங்கித்தரக் கூட காசில்லை, அந்த புத்தக வியாபாரியிடம். 



“வா மகனே! “ என்று உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் தந்தை. அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொண்டார் அவர். 



எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். இவரின் நேரமோ என்னவோ பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை,வறுமை மட்டுமே. இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல,கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள். 



பிரெஞ்சு அகராதி உருவாவதற்கு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். இருந்தாலும், நம்பிக்கையோடு 'மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்' என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி ஏகத்துக்கும் வேலை வாங்கி தொலைத்தது. செஸ்டர்பீல்ட் கனவானிடம் உதவி கேட்டார்; அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். 



காசநோய், விரை புற்றுநோய், பல்மோனரி பிப்ரோசிஸ், தௌரேட் சிண்ட்ரோம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறை போய் மீண்டதும் நடந்தது. எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்துபோயிருந்தார். மனிதர் அசரவில்லை. ஒன்பது வருடகாலத்தில் அந்த ஒற்றை மனிதரின் உழைப்பில் அகராதி எழுந்தது. 



இந்த புள்ளிவிவரம் அது எத்தகைய உழைப்பு என்பதை காட்டும். 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் செம தடியாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்து நாட்டை கலக்கி எடுத்தது. உலகம் முழுக்க மனிதரின் புகழ் பரவியது. பணமே தராத செஸ்டர்பீல்ட் கனவான், தான் உதவி இவர் அகராதியை முடித்தது போல கடிதங்கள் எழுதி வெளியிட்டார். இவர் மெல்லிய நகைச்சுவை இழையோட, “ஏழாண்டு காலம் உங்கள் வீட்டின் முன் காத்திருந்தும் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? “ என்று பொங்கிவிட்டார். 



அவரது அகராதி நூற்றி ஐம்பது வருடங்களுக்கு ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது.அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவிப்போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார். 



சாகிற வரை அவரை வறுமை தான் துரத்தியது. என்றாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன அவரின் வரிகளான,”மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்,குறைசொல்லிக்கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்பது அவரின் வாழ்வுக்கே பொருந்தும். ஆனால்,அந்த வாழ்வில் அவர் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார் என்பதே நமக்கான பாடம். 



சாமுவேல் ஜான்சன் என்கிற இணையற்ற இலக்கிய மேதைக்கு இன்று (செப்.18) பிறந்தநாள். அயராது பங்காற்றி ஆங்கில இலக்கிய உலகின் போக்கை மாற்றியவர் அவர் என இன்றைக்கு அவரை கொண்டாடுகிறார்கள். 

"நாம் வெற்றி பெற".- (நீதிக்கதை)



 
இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...
இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது.

ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...

மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.
நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது.

பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...

எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...

நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top