..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது.
கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நாதஜோதி அணைந்துவிட்டது. இசைவானிலும், திரைவானிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த அந்த ஒளி இனி ஒலிவடிவில்தான் உலா வரும்.
ராகம், தானம், பல்லவி எல்லோரும் பாடுவார்கள். ஆனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூகசேவைக்கும் கொடுத்த ஒரே இசைக்கலைஞர் எம்எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காகத்தான் இவருக்கு மாக்சேசே விருது தரப்பட்டது.
1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகத் தோன்றியவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார் எம்.எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
எம்.எஸ்.ஸிற்கு சக்திவேல் பிள்ளை என்ற அண்ணனும், வடிவாம்பாள் என்று ஒரு தங்கையும் இருந்தனர். மதுரை சக்திவேல் பிள்ளை ஒரு மிருதங்கக் கலைஞர். தங்கை எம்.எஸ்.ஸின் கச்சேரிகளுக்குப் பலமுறை இவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார்.
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கத்தில் ஜாம்பவான். எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். 1935ல் தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எம்.எஸ்.ஸுக்கு.
அதே ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியது அவரது மிகச் சிறந்த கச்சேரிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதன் பிறகுதான் தென்னிந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் எம்.எஸ்.ஸிற்கு அழைப்பு வரத் தொடங்கிற்று.
அரங்கேற்றம்
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு ('குஞ்சம்மாள்' என்று அழைப்பார் அவர்) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த 'ஆனந்த ஜா' என்னும் மராட்டிப் பாடலைச் சிறிதும் அச்சமின்றிப் பாடி வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி. அன்று எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம் நடைபெற்றபோது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் அங்கிருந்தார்.
இசை ஆசிரியர்கள்
அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார் எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர். எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாபநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸுக்கு கற்றுக் கொடுத்தனர்.
வெள்ளித் திரைத் தாரகை
இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பிரபல நாட்டியமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களின் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார் எம்.எஸ். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார்.
1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. 'காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களைப் பாபநாசம் சிவனும் எழுதியிருக்கிறார்.
மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம் மீரா ஆகும். அதுமட்டுமல்ல, மீராதான் எம்.எஸ். நடித்த கடைசிப்படமும்கூட.
திருமணம்
'சேவா சதனம்' படப்பிடிப்பு கிண்டியில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ்.- சதாசிவம் சந்திப்பு இங்கே தொடங்கி, திருமணத்தில் முடிந்தது. 1940ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
கல்கியின் விமர்சனம்
அக்காலத்தில் ஒரு திரைப்படத்தைப் பற்றி கல்கி அவர்கள் பாராட்டி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அவரது எழுத்துக்களுக்கு மகத்தான சக்தி இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து கல்கி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்பேது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்த ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று 'சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது முக்கியமானது.
தமிழ் இசைவளர்ச்சியில் எம்.எஸ்.ஸின் பங்கு
ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைதோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சாரும்.
சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஐக்கிய நாடுகளில் பாடிய குயில்
1966ஆம் ஆண்டு அக்டோ பர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ் பாடினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார்.
காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஐ.நா. நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமாக இயற்றிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி. சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர்.
மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்தனை தேசத்தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள்.
மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே.
சுப்ரபாதம்
வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனைத் துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், முத்துசாமி தீட்சதரின் 'ரங்கபுர விஹாரா' என்னும் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்ட போது அது உலக அளவில் பிரபலமாயிற்று.
முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தானம், 1975லிருந்து இதனை ஒலிபரப்ப ஆரம்பித்தது.
கணவரின் மறைவு
1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். கடந்த ஏழு வருடங்களாக அவர் மேடைக் கச்சேரிகள் செய்யவில்லை. 2002ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியது. உடல்நல குறைவால் அவ்விரதை எம்.எஸ். நேரே சென்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் எம்.எஸ். அவர்களின் வீட்டிற்கே நேரிடையாகச் சென்று விருதை அவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார்.
1997ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்.எஸ். பாடினார். அதுதான் அவர் கடைசியாகப் பாடிய கச்சேரி!
அவரது குரலும், இனிய இசையும் இந்தப் பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் பெற்றவை என்பதில் ஐயமில்லை!
இந்திய மொழிகள் அத்தனையிலும் இவர் பாடியுள்ளார் என்பதும் ஒரு சரித்திரம். இதற்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை.
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி பாரதமாதாவிற்குப் பாடினானே, அந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கும் பொருந்தும் அல்லவா!
தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில் "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை,
கண்டுபிடித்து உள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும்,
மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை
அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக
மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும்
மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின்
ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின்
கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.
ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக்
கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும்
ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம்
செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது.
இந்த
சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட
முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப்
பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு
உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும்.
எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து
பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி
பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த
கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
“தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.”என்று பூவுலகின் நண்பர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,”மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தண்ணீரும் முதன்மையானது, உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. ஆரோக்கியமான, சுத்தமான தண்ணீர் மழையாய் பொழிந்து, ஆறுகளின் வழியாக காலம்காலமாக நமக்குக் கிடைத்து வருகிறது. வரலாற்றில் நாகரிகங்கள் தோன்றி வளரக் காரணமாக இருந்தது பெரும் நதிகள்தான்.
நம் நாட்டில் எதிரி வீடுகளுக்குச் சென்றாலும்கூட, முதலில் நமக்குக் கொடுத்து உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர்தான். மேலும், ஒருவரிடம் ஒரு குவளை தண்ணீர் வாங்கிக் குடித்தாலும், அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்களாகி விடுகிறோம்.
காலங்காலமாக தண்ணீர் பந்தல் அமைத்தும், வீட்டின் முன்புறம் மண்பானை வைத்தும் தண்ணீரை இலவசமாக தந்தது நமது பண்பாட்டின் பெருமைமிகு அடையாளம். சுவாசிக்கும் காற்றைப் போல பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பொதுச்சொத்தாக, அனைவருக்கும் இலவசமாக கிடைத்து வருவது போலவே தண்ணீரும் கடந்த நூற்றாண்டு வரை இலவசமாகவே கிடைத்து வந்தது. ஆனால், தண்ணீர் இன்றைக்கு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்கும், அதற்கு 20 ரூபாய் கொடுப்பது தப்பில்லை என்றொரு மனப்பான்மை வலிந்து திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான காசில் அரசிடம் இருந்து வாங்கி, அதை 10 ரூபாய், 20 ரூபாய் என்று விற்கும் மிகப் பெரிய பகல் கொள்ளை நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தமிழக அரசே பாட்டில் குடிநீரை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது.
கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவு கொள்கையும் (2012) தண்ணீரை விற்பனைப் பண்டமாக முன்னிறுத்துகிறது. மக்களின் உழைப்பு, அறிவை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நேர்மாறாக, மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை ஆதாரங்களை கூறுபோட்டு விற்பதையே மத்திய, மாநில அரசுகள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. காற்று, தண்ணீர், காடுகள் போன்ற அனைத்தும் மக்களின் பொதுச் சொத்து, இவற்றை மத்திய, மாநில அரசுகள் விற்பனைப் பண்டமாக்கி விற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது மிகப் பெரிய ஆபத்து.
அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஏற்கெனவே நாம் பணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எல்லா நாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. அப்படியே விநியோகிக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர் தரமானதாக இல்லை.
இதற்குக் காரணம் கழிவுநீரை சுத்திகரிப்பது, கால்வாய்களைக் கட்டி நகர்ப்புற கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற செயல்களை மேற்கொள்ளாமல் நம் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் ஆறுகளை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலும் நீராதாரங்களும் அழிந்து போக அரசே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருப்பதுதான்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் அனுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை சில மாதங்களுக்கு முன் மூடியபோது, தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் ஒட்டுமொத்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை 3 நாள்களுக்கு மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை முறைப்படுத்துவதற்கு எதிராகத்தான், அந்த அமைப்பு செயற்கையான ஒரு குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி, தன் வலிமையைக் காட்டியது. இதன்மூலம் தெரிய வருவது என்னவென்றால், இவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் நமக்குத் தேவையான தினசரி குடிநீரை தடுக்க முடியும், நினைத்த விலையை வைத்து விற்க முடியும், எப்படி வேண்டுமானாலும் நம்மை பிளாக் மெயில் செய்ய முடியும்.
தண்ணீரை விற்பனைப் பண்டமாக்குவதன் மூலம், நிலத்தடி நீர் கண்மண் தெரியாமல் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரியும். ஏற்கெனவே, விவசாயம், வீட்டுப் பயன்பாடுகளுக்கு பெருமளவு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுவிட்டதால், நிலத்தடி இயற்கை ஊற்றுகள் வற்றி விட்டன, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் விவசாயிகள், பெருமளவு மக்கள் ஏழைகள். ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் இவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக உள்ள சூழ்நிலையில், தண்ணீர் போன்ற அடிப்படை தேவையை விற்பனைப் பண்டமாக்கி, காசுக்கு விற்பனை செய்வது அவர்களை கூடுதல் நெருக்கடியிலேயே தள்ளும்.
தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது என்பது, இது போன்ற வேறு பல பெரும் பிரச்சினைகள் உருவாகக் காரணமாக இருக்கும். எனவே, அதை முதல் நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர் தொட்டியுடன், நீர் சுத்திகரிப்பு கருவியை பொருத்தினாலே போதும், மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைத்துவிடும். இதற்கு பெரும் முதலீடும் தேவையில்லை, பணிச் சுமையும் பெரிதாக இருக்காது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தண்ணீர் சேகரிப்புக்கு அது போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இப்போது யோசிக்கலாம். இயற்கையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெருமளவு தண்ணீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயாமல், பன்னாட்டு, உள்நாட்டு வியாபாரிகளுக்கு தண்ணீர் விற்பனையை திறந்து விடுவதால், நமது தண்ணீர் தேவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகின்றன.
இந்த விவகாரத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் “தண்ணீர் என்பது பொதுச்சொத்து, அதை விற்பதற்கு அரசுக்கு உரிமையில்லை” என்பதுதான். உலகின் பல நாடுகளில் தண்ணீர் பொதுச்சொத்தாகவே இருக்கிறது. ஐ.நா. சபையும் தண்ணீர் வழங்குவதை, அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிட்டிருக்கிறது.
தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.
தமிழக அரசு, தனியார் தண்ணீர் விற்பனையை தடைசெய்ய வேண்டும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவுக் கொள்கை – 2012யை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. “என்று பாரதிராஜா வேதனையுடன் குறிப்பிடடத்தை பற்றி கோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் எழுதி, இயக்கியுள்ள “ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா முன்னிலையில் நடிகர் சூர்யா ஒலிப்பேழையை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது,”டைரக்டர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது ‘தவமாய் தவமிருந்து’ படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார்.
சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.
தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும்.ஆனாலும் தமிழ்த் திரையுலகில் இன்று, இளம் இயக்குனர்கள் வித்தியாசமான சிந்தனைகளுடன் படங்கள் இயக்குகிறார்கள். நாம் எந்தக் கதையை வேண்டுமானாலும் இயக்கலாம்.
ஆனால், தமிழ் மண்ணையும், கலாசாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மறக்ககூடாது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து நடத்த இருப்பதை அறிந்தேன். நம் உணர்வுகளை சொல்ல, நமக்கென்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.
ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு என்று சங்கம் இல்லை. தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இல்லை. தமிழ் திரைப்பட வர்த்தக சபை இல்லை. எனவே, இதுபோன்ற அமைப்புகள் தொடங்க வேண்டும்” என்று பாரதிராஜா பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார.