.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 September 2013

வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!!



சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.

"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா  இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.

சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்!


மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தவிர 56 மத்திய மந்திரிகளும் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sep 9 - manmohan singh

 


இதற்கிடையில் தற்போதுஅமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. அதிலுல் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி போன்ற முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. 

மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவரது மனைவி பிரதீபாவின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள்ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பு தாக்கல் செய்து இருக்கிறார். இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய மந்திரி குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

கிராமப்புற வளர்ச்சி மந்திரி ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோடியில் இருந்து ரூ.4.78 கோடி ஆகி இருக்கிறது. இவரது மனைவியின் சொத்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்து இருக்கிறது.
உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இருவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்து உள்ளது..

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்



கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது. 



தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.
Click Here

148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்!


மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.

சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.

கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர்.
பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.

நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.
பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.

நோக்கியாவின் சாதனைகள்

1871 - டயர், பூட் மற்றும் கேபிள்களைத் தயாரித்தது.
1987 - முதல் மொபைல் போன் மொபிரா சிட்டிமேன் வெளியானது எடை 1 கிலோ.
1992 - முதல் டிஜிட்டல் ஜி.எஸ்.எம். போன் நோக்கியா 1011 வெளியானது.
2003 - பேசிக் 1100 என்ற மொபைல் போனை வெளியிட்டது. 25 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டன. நோக்கியா அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த மொபைல் இதுதான். மக்களிடையே அதிகம் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனம் என்ற பெயரினைப் பெற்றது.

2011 - தன் சிம்பியன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கி, விண்டோஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.
2013 - இறுதியாக 41 மெகா பிக்ஸெல் திறனுடன், நோக்கியா லூமியா 1020 என்ற போனை வெளியிட்டது.

நோக்கியா தொடாத நபரே இல்லை

கடந்த 15 ஆண்டுகளாக, நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அதில் நோக்கியா போன் ஒன்று இருக்கும். 2000 ஆம் ஆண்டில் நோக்கியா போன் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அது நிச்சயம் நோக்கியா 5110 என்ற மாடலாகத்தான் இருந்திருக்கும். இதே போல புகழ் பெற்ற நோக்கியாவின் போன்கள் 8210, 3210 மற்றும் 3310 ஆகியவை ஆகும். 2003ல் வந்த நோக்கியா 1100 மாடல், அதிக விற்பனையை மேற்கொண்டு, சரித்திரத்தில் இடம் பெற்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கை

சாம்சங் - 10 கோடியே 75 லட்சம் - 24.7%
நோக்கியா - 6 கோடியே 9 லட்சம் - 14%
ஆப்பிள் - 3 கோடியே 19 லட்சம் - 7.3%
எல்.ஜி. - 1 கோடியே 70 லட்சம் - 3.9%
இஸட். டி.இ. - 1 கோடியே 52 லட்சம் - 3.5%
மற்ற நிறுவனங்கள் - 20 கோடியே 23 லட்சம் - 46.5%

நம்பிக்கை தருவாரா நவநீதம் பிள்ளை: இன்று மனித உரிமைமாநாடு!



ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார். இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.போருக்கு பின்னர் முதன்முறையாக, நவநீதம் பிள்ளை இலங்கை சென்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததால், அவரின் அறிக்கையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும் என தெரிகிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top