.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 30 August 2013

சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது – ஆய்வில் தகவல்!

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 -Idli-and-Sambar-1

 

இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது; இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்கத்தை பிரதிபலிப்பதற்காக அல்ல; உணவில் குறிப்பாக காலை உணவில் நாம் சாப்பிடும் முறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கானதாகும்; உணவு தொடர்பாக நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வில் அதிகப்படியாக மக்கள் காலை உணவை தவிர்ப்பதும், உணவு சாப்பிட்டாலும் குறைந்த அளவு சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது; 

தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கோல்கட்டாவின் பாரம்பரிய காலை உணவில் மைதா அதிக சேர்க்கப்படுகிறது; இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்; மிகக் குறைந்த அளவே புரோட்டீன் சேர்க்கப்படுகிறது; நார்சத்து கிடையாது; டில்லி உணவில் எண்ணெய் மிகவும் அதிகம்; மும்பையில் முறையற்ற உணவு சாப்பிடப்படுகிறது; இங்குள்ளவர்கள் வெறும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள். இவ்வாறு மும்பை நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மும்பையில் 79 சதவீதம் மக்கள் போதிய சத்துக்கள் அற்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். டில்லியில் 76 சதவீதம் பேரும், கோல்கட்டாவில் 75 சதவீதம் பேரும் சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் பேர் மட்டுமே போதிய சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்களாம். மற்றவர்களை விட தென்னிந்திய கிராமப்புறங்களில் வாசிப்பவர்களின் உணவில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் ராகியை அதிகம் பயன்படுத்துவதால் அதில் வைட்டமின் பி, நார்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதாக மெட்ராஸ் மருதஅதுவ கல்லூரியின் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்துள்ளார். பிரபலமான இட்லி, சாம்பார் தான் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய முழுமையான உணவு எனவும் மீனாட்சி தெரிவித்துள்ளார். 

இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு உணவில் முழுமையான சத்துக்களை அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்பு சரிவிகித அளவில் சேர்க்கப்படுவதால் சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால் சென்னையில் காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகவும் குறைவு. சத்துக்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களும் சென்னையில் குறைவு. சென்னையில் 50 சதவீதம் குடும்ப பெண்களும், 30 சதவீதம் வயதானவர்களும், 20 சதவீதம் வேலைக்கு செல்பவர்களும் காலை உணவாக ஆற்றல் தரும் பானங்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன குட்டி கதைகள்! .


சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.

jayalalitha
 

”அறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். 

துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப் பலனை நாம் உணர முடியும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். 

கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. 

சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி.

ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.
“என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.

உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.

ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்.

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

இதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம” என்று சொன்னார்.

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி இளம்பெண்!


:உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெவர்லி சிங் (29). தென் ஆப்ரிக்காவில் தயாராகும் ப்ளட்ஹான்ட் சூப்பர்சானிக் கார் எனப்படும் உலகிலேயே அதிவேக கார் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிஸ்டல் அருகில் உலகின் மிகச் சிறந்த சுமார் 30 பொறியியல் வல்லுநர்கள் அடங்கிய குழு, சூப்பர்சானிக் கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மணிக்கு 1,220 கி.மீ என்ற வேகத்தில் செல்லும் கார்தான் இதுவரை உலக சாதனையாக உள்ளது. தற்போது ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சானிக் கார் இந்த சாதனையை முறியடிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

30 - lady car eng

விரைவில் வெள்ளோட்டத்துக்கு தயாராக உள்ள இந்த சூப்பர்சானிக் கார் குறித்து வல்லுநர்கள்,”ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் ப்ளட்ஹான்ட் சூப்பர்சானிக் கார் எனப்படும் உலகிலேயே அதிவேக கார் தயாரிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த புதிய கார் 2016ம் ஆண்டு மணிக்கு 1609 கி.மீ வேகத்தில் செல்லும் என்கின்றனர். கார் தயாரிப்பு குழுவில் போயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட உலகில் உள்ள பிரபல நிறுவனங்களின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் இந்திய வம்சாவளி பெண் பெவர்லி இடம்பெற்றுள்ளார்.

பெவர்லி சிங் (29) போர்ட் எலிசபெத்தில் உள்ள வெஸ்ட் ஆப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். அடுத்த மாத இறுதியில் ஹைடெக் கார் தயாரிப்பு குழுவில் இணைய உள்ளார். இதுகுறித்து பெவர்லி கூறுகையில், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த குழுவில் இணைவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னால் முடிந்த அளவு பங்களிப்பு அளிப்பேன் என்றார்.

Indian-origin woman to help build world’s fastest car
 

*********************************************************************
A 29-year-old Indian-origin woman from South Africa is set to join the team of specialist engineers building the world’s fastest car in the UK.Beverly Singh, a mechanical engineer from Port Elizabeth, will help design the Bloodhound supersonic car, currently being built by a team of about 30 engineers in a high-tech centre near Bristol.


கண்ணாடியின் கதை!


 
 
 
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான்.

அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.

கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள்.

பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது.

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட் (Chocolate)


 
 
 
தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்த மட்ட குழுவினர் வாராந்தம் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.

இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாகும்.
நரம்பியல் குறித்த சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவ்ரான, சுவீடனின் கரோலின்ஸ்கா கற்கைகள் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.

இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.

இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது.

ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.

ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அத்துடன் சாக்லேட்டில் அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்படுவதும் உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top