.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 23 August 2013

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்

 முன்னுரை
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்


1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.

6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி  நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை
 பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

கவிதைகள்!

கவிதைகள்

வாழ்க்கை

இன்று
தவறிவிடும்
லட்சியக்குறி
நாளை
காத்திருக்கும்
கேள்விக்குறியாம்!
 

புன்னகை
பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!
 
கடவுள்
யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

தேசிய கீதம்
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்

நிலநடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!
  
ஒற்றுமை
அருகருகே இருந்தாலும்
முட்டிமோதாது சுழலும் சமாதானம்
மின்விசிறி!
 
வெளிநாட்டு வேலை
உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்

கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்!

கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்

Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM - தற்காலிக‌  நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers(0,1) - இரும எண்கள் / துவித‌ எண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC(Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command -  கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language -  கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT(Information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise - ஒத்தியக்கம்

தத்துவங்கள்!

++தத்துவங்கள்++

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.


வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!


ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.


நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.


நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!


உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.


கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!


உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்


இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!


நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!


நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.

ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

சுவையான தகவல்கள் சில....

எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
 
தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். 

 உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.

 குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
 
திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.
இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.

கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).

திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top