இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.