எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பின், சுமார் ஒருவருடம் வரை அதுகுறித்து, அக்கறைகொள்ளாத உளவுத்துறை, ராஜீவ் கொல்லப்படுவதற்கு சரியாக 24 மணிநேரத்திற்கு முன் விழித்துக்கொள்கின்றது.உளவுத்துறையின் இணை இயக்குனர் தாக்கூர், உள்துறை இணைச்செயலாளருக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதுகின்றார்.
அதில் ராஜீவ்காந்திக்கு உடனடியாக, என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்குங்கள் என கேட்டுக்கொள்கிறார்.தாக்கூர் இந்த கடிதத்தை தற்செயலாக எழுதினாரா? அல்லது மறுநாள் ராஜீவ் கொல்லப்படப்போகிறார் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா?.
இதுபோன்ற கேள்விகள் எழுவது, அந்த கடிதம் எழுதப்பட்ட காலத்தை வைத்து பார்க்கும் போது தவிர்க்க முடியாததாக தோன்றுகின்றது.உண்மை எதுவாக இருந்தாலும்….காலம் கடந்த அந்த வேண்டுகோளை, உள்துறை அமைச்சகம் பரிசீலினை செய்யும்போது ராஜீவ்காந்தி உயிரோடு இருக்கமாட்டார்.
மே 21, 1991, ஸ்ரீபெரம்பத்தூர்
ராஜாவை சூழ்ந்து நிற்கும் சிப்பாய்கள் அனைவரும் வீழ்ந்த பின்பு ஆட்டம் முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை.நெருங்கிவரும் ஆபத்தை தடுக்கக்கூடிய எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் தற்போது ராஜீவின் அருகில் இல்லை.அனைத்துவகையிலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த ராஜீவ்காந்தி, காத்திருந்த கண்ணியில் வசமா சிக்குகின்றார்.பாதுகாப்பு தளர்த்தப்பட்ட இலக்கை மனிதவெடிகுண்டு பெண் எளிதாக தாக்குகின்றாள்.ராஜீவுடன் சேர்த்து 18 பேர் கொல்லப்படுகின்றனர்.
ராஜீவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு, அரசு கூறும் காரணங்கள் வலுவானதாக இல்லை என வர்மாகமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜெயின் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்த பசாக் என்ற உளவாளி, ஒரு பரபரப்பான தகவலை வெளியிடுகின்றார். எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது, ராஜீவை கொலை செய்ய தயாராகலம் என்று, வெளிநாட்டு சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட சமிக்ஞை என அவர் கூறுகின்றார்.
1997, நவம்பர் 24
1997 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, அவுட்லுக் இதழில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகின்றது. 1989க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலத்தில், ராஜீவ்காந்திக்கு வழங்ககப்பட்டு வந்த பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள் அளித்த குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம், பிரதமர் அலுவலகத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை அந்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.
காணாமல்போன அந்த ஆவணத்திற்கு பதிலாக, அதேபோன்று, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவணத்தை ஜெயின் கமிஷனிடம், அரசு தாக்கல் செய்கின்றது. அந்த ஆவணம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ஜெயின் கமிஷன், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பிறகே, அந்த ஆவணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.
பல்வேறு இடங்களில் தேடிபார்த்த பிறகும், உண்மையான ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், ஆகவேதான் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை தாக்கல் செய்ததாகவும், ஜெயின் கமிஷனிடம் மத்திய அரசு தெரிவிக்கின்றது.
ராஜீவுக்கு வழங்கப்பட்டிருந்த, எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? யார் அதை முன்மொழிந்தது? என்ற மிக முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்லும் அந்த ஆவணம், உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
எம்.கே.நாராயணனின் பங்கும் வீடியோ ரகசியமும்
நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்படுகின்றார். அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டணை பெறுகின்றனர். ஆனால், இந்த கொலையில் வெளிவராத உண்மைகள் பலவற்றை தெரிந்தவர்கள் இன்னும் ஊமையாய் இருப்பதாக கூறுகின்றார் சி.பி.ஐ முன்னால் அதிகாரி ரகோத்தமன்.
மே21, 1991
கொலை நடைபெற்ற இடத்தில் சிறிதும் சேதமடையாமல் கிடந்த ஒரு கேமராவை போலீசார் கைப்பற்றுகின்றனர். அதிலிருந்த புகைப்படச்சுருள் மூலமாகவே, கொலையாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஹரிபாபுவின் நிழற்படங்கள், வெளிச்சத்திற்கு வந்தபிறகே, இந்தகொலையின் இருள்சூழ்ந்த பக்கங்கள் ஒளிபெற்றன. ஒரே பரிமாணம் கொண்ட 9 புகைப்படங்கள், மர்மத்தின் முகமூடிகளை கிழித்தெறிந்தன.ஆனால், படுகொலை நடந்த மாலைப்பொழுதின், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்த வீடியோவின் மூலமாக, சி.பி.ஐ எந்தவிதமான மர்மத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பது ஆச்சரியம் தரும் உண்மை.
மே 22, 1991, ரகசியம்
கொலைநடந்த மறுநாள் பிரதமர் சந்திரசேகருக்கு, அப்போதையை உளவுத்துறை இயக்குனரும் தற்போதைய மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநருமான, எம்.கே.நாராயணன் ஒரு கடித்தை எழுதுகின்றார். அதில், கொலைநடந்த பொதுக்கூட்டத்தை பதிவுசெய்த வீடியோகேசட் ஒன்றை உளவுத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றார். அந்த வீடியோகேசட் மூலம் கொலையாளி, ராஜீவ்காந்தியை எவ்வாறு நெருங்கினார் என்பதை ஆராய்ந்துவருவதாகவும் கூறுகின்றார்.
ஆனால், இன்றுவரை அந்த வீடியோகேசட் எங்குள்ளது என்பது யாருக்கும் தெரியாது.ராஜீவ்கொலை குறித்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்தியாவில் இருக்கும், எம்.கே.நாராயணனிடம், அந்த கேசட் குறித்து இதுவரை விசாரணை நடத்தியதாக தகவல் இல்லை.
கொலைநடந்த இரவில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு வீடியோ கேசட்டை வர்மா கமிஷனிடம் சி.பி.ஐ வழங்கியது. பொதுவிசாரணையின்போது அந்த வீடியோ கேசட் அனைவரின் முன்பாகவும் திரையிடப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த வீடியோவில், சில முக்கியமான காட்சிகள் மங்கலாக்கப்பட்டிருப்பதும், சில காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.
எம்.கே.நாராயணன் தன்னிடம் உள்ளதாக கூறிய வீடியோவும், சி.பி.ஐ வர்மா கமிஷனிடம் சமர்ப்பித்த வீடியோவும் ஒன்றுதானா? அவை இரண்டும் ஒன்றே என்றால், அதில் உள்ள முக்கிய காட்சிகளை அழித்தது யார்? அந்த காட்சிகளுக்குள் ஒழிந்துள்ள ரகசியம் என்ன? யாரைக்காப்பாற்ற அவை அழிக்கப்பட்டன????
ஜீன் 12 1992
வர்மா கமிஷன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது, அதில், எம்.கே.நாராயணன் உட்பட நான்கு அரசு அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை வழங்குகின்றது. ஆனால் அந்த பரிந்துரை கிடப்பில் போடப்படுகின்றது.
வர்மா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நான்கு வருடம் கழிந்தபின்பும் அதன் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், பல்வேறுதரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி முற்றுகின்றது.இறுதியில், உளவுத்துறை தலைவராக பணியாற்றிய, எம்.கே நாராயணன் உட்பட நான்கு முக்கிய அதிகாரிகளிடம், காலம் கடந்து விளக்கம் கேட்கப்படுகின்றது. ஆனால், சட்டத்தில் உள்ள தங்களுக்கு சாதகமான அம்சங்களை பயன்படுத்தி அந்த நாள்வரும் விசாரணையிலிருந்தே தப்புகின்றனர்.
நாட்டின் மிக முக்கியமான தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு தெரிந்த உண்மையை தானே முன்வந்து தெரிவிக்க வேண்டியது, நல்ல அரசு அதிகாரியின் கடமை.பல்வேறு அரசு உயர்பொறுப்புகளை வகித்து வந்துள்ள எம்.கே.நாராயணனோ இன்றுவரை வாய்திறக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றார் முன்னாள் சி.பி.ஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்.
தற்போதும் கூட எம்.கே.நாராயணன், “மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர்” என்ற மிக முக்கிய பொறுப்பை வகித்துவருகின்றார்.உளவுத்துறையின் செயல்பாடுகுறித்து கருத்துதெரிவித்துள்ள நீதிபதி வர்மா, “அரசியல் தலையீட்டின் காரணமாக.இந்திய உளவு நிறுவனங்கள்.மோசமாக உள்ளன” என்று குற்றம்சாட்டுகின்றார். மேலும் “அரசியல் சார்பில்லாமல்…..புதிய அமைப்பாக (உளவுநிறுவனங்கள்) உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
பல்வேறு இயக்கங்களின் கூட்டுத்திட்டம்.அவற்றை இயக்கிய வெளிநாட்டு உளவு நிறுவனங்கள், விசாரிக்கப்படாத கருப்பு பக்கங்கள்,விசாரணைக்கு ஒத்துழைக்காத அரசு அதிகாரிகள்.என ராஜீவ் படுகொலைக்குப் பின்னால், இன்றளவும், மறைந்திருக்கும் மர்மங்கள் ஏராளம்.
ஒருபுறம், உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, உண்மைகள் பல அறிந்திருந்தும் இன்றளவும் வாய்திறக்க மறுக்கின்றனர் பலர்.மறுபுறம் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் இருக்கும்போது அவர்களே முன்வந்து வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தூக்குதண்டனையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.
காணொளி:
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-1 http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4010
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-2 http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4009
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-3 http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4008
Thank you.... Puthiyathalaimurai.tv