காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!
இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.
ஆனால், நம் நாட்டில் இதுவரை ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாதாரண மக்களின் முகங்களும் அஞ்சல்தலையில் வெளியிடப்படும் திட்டம் ஒன்றினை இந்தியத் தபால்துறை, தில்லியில் தொடக்கி வைத்தது.
இத்திட்டத்துக்கு, ‘எனது அஞ்சல்தலை’ என்று பெயரும் சூட்டப் பட்டது. பிரமாதமான வரவேற்பு. தொடர்ச்சியாக உ.பி., மும்பை மாதிரி வடஇந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல்தலையில் இடம்பெற்று விட்டார்கள். இதோ இப்போது அஞ்சல்தலையில் தமிழ் முகங்களும் சிரிக்க, நம் ஊருக்கும் வந்துவிட்டது ‘எனது அஞ்சல்தலை’ திட்டம்.
உயிருடன் இருக்கும் யாரும் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.300/- கட்டணம் செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் வழங்கப்படும்.
இந்த அஞ்சல் தலைகளை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் கடிதங்களில் ஒட்டி, அவர்களை அசத்தலாம்.
விண்ணப்பிப்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலை (டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறப்பு அஞ்சல்தலை சேகரிப்பு மையங்களில் மட்டுமே, ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவாரத்திலும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரங்களிலும் அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து, விரைவில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்" என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீமெர்வின் அலெக்ஸாண்டர் உறுதியினை அளித்திருக்கிறார்.
மறைந்த நமது தாத்தா, பாட்டிகளின் முகத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்யவைக்க இத்திட்டத்தில் இப்போதைக்கு இடமில்லை.
ஆனால், உயிரோடிருக்கும் நம் அம்மா, அப்பா ஆகியோர் (அடையாள அட்டை இருப்பின்) விண்ணப்பிக்கலாம்.
044-28543199 என்கிற தொலைபேசி எண்ணில் பேசினால்,
‘எனதுஅஞ்சல் தலை’ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தியத் தபால்துறை விளக்கமளிக்கிறது.