உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 



யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். 


ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதை இந்த மூவரும் வெவ்வேறு நிலைகளில் ஆராய்ந்தனர். 



உதாரணத்துக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. அந்த இன்சுலின் உரிய அளவில், உரிய நேரத்தில் ரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் போக்குவரத்து எளிதானதல்ல. மிகப் பெரிய நகரங்களின் நெரிசல் நேரத்தில் சாலைகளில் காணப்படும் வாகன நெரிசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த நெரிசல். அப்படியும் விபத்து ஏதும் இல்லாமல் போக்குவரத்து நடக்கிறது என்பதுதான் வியப்பு. 



மனிதர்கள் நடக்கவும் பேசவும் பாடவும் சூடான அடுப்பின்மீது தெரியாமல் வைத்து விட்ட கையைச் சட்டென்று எடுக்கவும் தான் சொல்ல விரும்பியதை எடுத்துச் சொல்லவும் ரசாயன அல்லது வேதியியல் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘நியூரோ-டிரான்ஸ்மிட்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் ஒரு நரம்பு செல்லிலிருந்து இன்னொரு நரம்பு செல்லுக்கு இந்த சமிக்ஞைகளை அனுப்பி இந்தச் செயல்களைச் செய்யவைக்கின்றன. 



வெசிகிள்கள் போக்குவரத்துக்குக் குறிப்பிட்ட சில மரபணுக்கள்தான் காரணம் என்பதை டாக்டர் ஷெக்மேன் கண்டு பிடித்தார். தங்களுடைய இலக்குகளுடன் வெசிகிள்கள் சேர்வதற்கு உதவும் புரதச் செயல்பாட்டை டாக்டர் ராத்மேன் கண்டுபிடித்தார். வெசிகிள்கள் தங்க ளுடைய சரக்குகளை உரிய இடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்க சமிக்ஞைகள் எப்படித் தரப்படுகின்றன என்பதை டாக்டர் சுதோப் வெளிப்படுத்தினார். 



இந்த வெசிகிள்கள் என்பவை மிகச் சிறியவை. அவற்றின் மீது சவ்வுபோன்ற படலம் மூடியிருக்கிறது. வெவ்வேறு அறை களுக்குப் புரதச் சரக்குகளை இவைதான் கொண்டுசேர்க்கின்றன. அல்லது பிற சவ்வுகளுடன் இணைந்துவிடுகின்றன. இதில் தவறு அல்லது குழப்பம் நேரிட்டால்தான் நரம்புக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு நோய்களைத் தடுக்கவும் நோய் வந்தால் சிகிச்சை தரவும் மிகவும் உதவியாக இருக்கும். 


டாக்டர் ஷெக்மேன் 

 
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், செயின்ட்பால் என்ற ஊரில் பிறந்த டாக்டர் ஷெக்மேன் 1970-களில் தன்னுடைய சோதனைகளைத் தொடங்கிய போது, ஒருசெல் ஈஸ்ட்டுகளைத்தான் ஆய்வுக்குப் பயன்படுத்தினார். ஒவ்வொரு செல்லின் ஒரு பகுதியிலும் வெசிகிள்கள் அப்படியே குவிந்துவிடுகின்றன. அப்படி அவை சேர்ந்து நெரிசல் ஏற்படக் காரணம், மரபுதான் என்று கண்டுபிடித்தார். 


பிறகு, செல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத் தும் மூன்று வகை மரபணுக்களை அடையாளம் காணும் ஆய்வுகளைத் தொடர்ந்தார். கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அவர் 1974-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 1976-ல் ஆய்வுப் பணியில் சேர்ந்தார். 


அவருடைய ஆய்வுகள் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்சுலின், ஹெபடைடிஸ்-பி தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தயாரிக்க அவர் ஈஸ்ட்டில் செய்த ஆராய்ச்சிகள் பெரிதும் கைகொடுத்தன. 



டாக்டர் ராத்மேன் 

 
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஹேவர்ஹில் நகரில் பிறந்தார் டாக்டர் ராத்மேன். 1980-கள், 1990-களிலேயே பாலூட்டிகளின் செல்களில் நடந்த வெசிகிள்கள் போக்குவரத்து குறித்து ஆராயத் தொடங்கினார். ஒருவிதப் புரதக் கூட்டுப்பொருள்தான், வெசிகிள்கள் தங்களுடைய இலக்கான சவ்வுகளை அடையாளம் கண்டு சரக்குகளை இறக்கிவிடவும் சேர்ந்துகொள்ளவும் காரணமாக இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். ஒரு ஜிப்பில் இரண்டு உலோகப் பகுதியும் ஒன்றோடொன்று பொருந்துவதைப் போல இவை பொருந்துகின்றன என்பதையும் கண்டுபிடித்துக் கூறினார்.



புரதங்கள் பலவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான கூட்டுப்பொருள் அதே அளவிலான தேவையுள்ள இடத்துக்குச் சென்றுசேர்கிறது என்று அறிந்தார். இதனால்தான் குழப்பம் ஏற்படுவதில்லை. இதே அடிப்படையில் தான் செல்லுக்கு உள்ளேயும் இயக்கங்கள் நடைபெறுகின்றன. ஒரு செல்லின் வெளியில் உள்ள சவ்வுடன் வெசிகிள் இணையும்போதும் இது நடக்கிறது. 



டாக்டர் ராத்மேன், ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து 1976-ல் டாக்டர் பட்டம் பெற்றார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்குப் பிந்தைய பட்டத்துக் கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1978-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அங்குதான் வெசிகிள் செல்கள் மீதான ஆராய்ச்சியை மேற்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்லோவன்-கெட்டரிங் புற்றுநோய் மையம் ஆகியவற்றிலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2008-ல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு செல் உயிரியல் துறையின் தலைவராக இப்போது பதவி வகிக்கிறார். 


டாக்டர் சுதோப் 

 
அமெரிக்கக் குடிமகனான டாக்டர் சுதோப், மேற்கு ஜெர்மனியில் உள்ள கோடிங்கென் நகரில் பிறந்தார். நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தகவல்தொடர்பு வைத்துள்ளன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் என்னவென்று அவர் கண்டுபிடித்தது பல புதிர்களை விடுவித்தன. நரம்பியல் நடவடிக்கைகளில் சாதாரணமானது முதல் மிகவும் சிக்கலானது வரை பலவற்றை அடையாளம் காண அவருடைய ஆய்வுகள் உதவின. 


ஜெர்மனியின் கோடிங்கென் நகர ஜார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பிறகு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டல்லஸில் உள்ள மருத்துவ மையத்தில் 1983-ல் பணியில் சேர்ந்தார். ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக 1991-ல் வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.