.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தமிழனின் வரலாறு!தமிழனின் கலைகள்!. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு!தமிழனின் கலைகள்!. Show all posts

Saturday 30 November 2013

சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு



சேரர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்


சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்



கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்


தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)



சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70


உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.



வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.



முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.


காலம்


பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை


அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.


இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148



செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.



ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.



தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.



குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்




சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை




சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை



சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

Saturday 16 November 2013

பூவின் 7 பருவங்கள்!

பூவின் 7 பருவங்கள்

• அரும்பும் நிலையில் அரும்பு

 
 • மொக்கு விடும் நிலை மொட்டு


 • முகிழ்க்கும் நிலை முகை

 
 • மலரும் நிலை மலர்


 • மலர்ந்த நிலை அலர்

 
 • வாடும் நிலை வீ


 • வதங்கும் நிலை செம்மல்

Friday 15 November 2013

வாழை இலை விருந்து ..

வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம். வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது. அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை இலையிலதான் சாப்பிடுவாங்க.


வாழை இலையில சாப்பிட்டாகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச் சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப் போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.


எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில் சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி, வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன் இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால் போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில் மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும், எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும் பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்.


" அதேபோல, வாழை இலையில எப்படி உணவு பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின் நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர் இலைதான் நல்லது.


இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய் விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும். உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும். கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.


ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல் தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில் இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை பதினெட்டு வகைகள் இருக்கு. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டாம்".


வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற, வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி இருக்குறதில்லை.


இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை, இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள், 10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில, என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார்.


அதுவும் ஐந்து ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது. டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில் இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு ஆசையே பட முடியாது போல!


புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!


 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.

இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.

 இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Tuesday 12 November 2013

64 கலைகள்!

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

தமிழரின் கலைகள் - களரிப் பயிற்று!

முன்னுரை:

சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் ”தற்காப்புக் கலைகள்” என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில் களரிப்பயிற்று பற்றியும் களரியில் சிலம்பம், வர்மம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

களரிப்பயிற்று:

களரிப்பயிற்று என்ற கலை ”களரி” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம் (கழகத் தமிழகராதி) என்றும் பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைந்து ”களரி பயிற்றுவித்தல்” என்று வழங்கப்படுகிறது. களரி பயிற்றுவித்தல்” என்ற தமிழ்ச்சொல் ”களரிப்பயிற்று” என்று மருவி வழங்கப்படுவதாகக் கருதப்படுகிறது. (க.இரவீந்திரன் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை) இது தமிழகத்தின் பழமையான வீரவிளையாட்டுக் கலையாகும். எதிரியைத் தாக்கவும் மடக்கவும் இக்கலை உதவுகிறது.

களரிப்பயிற்றின் வகைகள்:

மக்களிடையே இக்கலை வழங்கப்படும் நோக்கில் இரண்டு வகை, மூன்று வகை, நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். வடக்கன் களரி, தெக்கன் களரி, என இரண்டு வகைப் பிரிவுகள் உள்ளன. (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை). வடக்கன் களரி, தெக்கன் களரி, மத்திய களரி என மூன்று வகைப் பிரிவுகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர் (கோபுடா எஸ்.கிருஷ்ணமூர்த்தி உலக தற்காப்புக் கலைகள்). வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் களப்பணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் திருவிதாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெக்கன் களரி உருவானதாகவும் கேரளாவில் மலபார், கோகர்ணம் போன்ற பகுதிகளில் வடக்கன் களரி உருவானதாகவும் குறிப்பிடுகின்றனர். கோட்டயம், திருச்சூர் போன்ற பகுதிகளில் தெக்கன் களரி மற்றும் வடக்கன் களரி கலந்த பயிற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது. இதை மத்திய களரி என்று வழங்குகின்றனர். இக்கலையை முற்காலங்களில் சத்திரியர்களும் போர் வீரர்களும் அரச குடும்பத்தினரும் கற்றுள்ளனர். நாளடைவில் சாதி மத அடிப்படை இல்லாமல் அனைத்து மக்களும் கற்று வருகின்றனர்.

களத்தின் அமைப்பு:

களரிக் களமானது 42 அடி நீளமும் 21 அடி அகலமும் சுற்றிலும் 9 அடி உயரத்திற்கு மதில் சுவர் கட்டப்பட்டதாகவும் இருக்கும். 42 அடி நீளமும் 21 அடி அகலமும் கொண்ட களம் தரை மட்டத்திற்குக் கீழ் அமைக்கப்பட்டு மேல் பகுதியில் தென்னங்கீற்றுக் கூரை வேயப்பட்டிருந்தால் அது ”குழிக் களரி” என்று அழைக்கப்படுகிறது. களரிக் களத்தின் தென் மேற்கு மூலையில் (கன்னி மூலை) கால் வட்ட வடிவில் ஏழு படிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஏழாவது படியில் களரி தெய்வத்தை (சிவன் அல்லது விஷ்ணு) வைத்து பூஜிப்பர். இந்தப் பகுதிக்கு ”பூத்தறை” என்று பெயர். இந்த படிகளின் இரு பக்கங்களிலும் ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

பயிற்சியின் வகைகள்:

வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கதாரி, வெறுங்கைப் பிரயோகம் என்னும் பயிற்சி முறைகள் உள்ளன.

வாய்த்தாரி:

வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்வர். இவ்வாறு வாய்மொழியாகப் பாடும் பாடலை வாய்த்தாரி என்று வழங்குகின்றனர். இப்பாடல் பிறருக்குப் புரியாத அடையாள வார்த்தைகளால் அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.


”தொழுது மாறினு வச்சு வலத்து சவுட்டி
வலந்திரிஞ்நு இடது கொண்டு இடது காலின்றெ வெள்ள தொட்டு
கைநீர்த்தி கைக்கு நோக்கி கை நெற்றிக்கு வச்சு வணங்கியமர்ந்து
வலத்து நேரே மும்பில் சவுட்டி இடத்து கொண்டு
இடது காலின்றெ…..”


மெய்த்தாரி:

மெய்த்தாரி என்பது களரிப்பயிற்சி முறைகளை மிக நன்றாகச் செய்யும் வண்ணம் உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.


”கை தொழுது மாறத்துப் பிடிச்சு வலத்து சவுட்டி
வலபாகம் திரிஞ்நு நீர்ந்து இடது காலின்றெ வெள்ள தொட்டு
தொழுதமர்ந்து முட்டூந்தி கும்பிட்டு……”


அங்கதாரி:

ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறைகளை அங்கதாரி என்று அழைக்கின்றனர். இதனைப் பின்வரும் பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.


”அமர்ந்து அங்கம் தொட்டு வந்திச்சு
அங்கமெடுத்து களரிக்கு வந்நிச்சு கைகூட்டி
நெஞ்சத்து வச்சு வணங்கியமர்ந்து பொங்கி உளவு
மாறி வலத்துளவுட இத்துளவு…….”


கோல்த்தாரி:

கோல்த்தாரி என்பது கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையாகும்.

வெறுங்கைப்பிரயோகம்:

கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் பயிற்சி முறையாகும்.

ஆசனங்கள்:

ஆசனங்கள் என்பவை உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சி முறைகளாகும். ஆசனங்களை யோகாசனங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆசனங்களின் வகைகளாக பத்மாசனம், சிரசாசனம், உத்கட்டாசனம், பசுமுகாசனம், மயூராசனம், ஏகபாதாசனம், மகராசனம், புஜங்காசனம், மேருதண்டாசனம், சலபாசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், வஜ்ராசனம், சவாசனம் போன்றவற்றைத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுதங்கள்:

கோல்த்தாரியில் இடம் பெறும் ஒரு சாண் கம்பு, முச்சாண் கம்பு(மூன்று சாண் கம்பு) ஆறு சாண் கம்பு, ஒற்றைக் கம்பு, பன்னிரண்டு சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் மூக்கு வரை நீளமுடையது) ஆகியவையும் அங்கதாரியில் வாள், வடிவாள், சுரிகை, உறுமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி (கெட்டுகாரி), வெண்மழு, குந்தம் (ஈட்டி), பரிஜை (கேடயம்), கெதை ஆகிய ஆயுதங்களும் இடம் பெறுகின்றன.

களரியும் வர்மக்கலையும்:

உடலில் மறைந்துள்ள முக்கியமான இடங்களைக் கணித்து அவற்றைத் தாக்கி எதிரியை நிலை குலையச் செய்யும் கலை. நாடி நரம்புகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலைத் திகழ்கிறது வைத்திய முறைக்கும் பங்களிக்கிறது உடலில் அடிப்பட்ட இடத்தில் வர்மம் கொண்டிருந்தால் அதற்கேற்ப வைத்திய சிகிச்சை முறையை மேற்கொள்வர் இந்த முறையை ”சித்த வர்ம வைத்தியம்” என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர் (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). இந்த சிகிட்சை முறையை களரி ஆசான்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

களரிப்பயிற்றில் சீடர்கள் பயிற்சியின் போது வர்மம் கொள்ள நேர்ந்தால் ஆசான்கள் உடனடியாக சிகிச்சை செய்து அவர்களைக் காப்பாற்றுவர். களரி பயிற்றின் வாரி, ஆனவாரி இவை போன்ற பூட்டுகள் வர்மப் புள்ளிகளைக் குறிவைத்தே செய்யப்படுகின்றன. இந்த வர்மமும் வர்ம வைத்திய முறையும் அகத்திய முனிவரின் தலைமையிலான சித்த முனிவர்களால் எழுதிவைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் 108 வர்மப் புள்ளிகள் காணப்படுகிறது. வர்மப் புள்ளிகளை உடம்பில் கொள்ளச் செய்யும் முறையின் அடிப்படையில் தொடுவர்மம் 96, படுவர்மம் 12 மொத்தம் 108 என்றும், இதே வர்மப் புள்ளிகளை உடம்பின் கண்டங்களின் அடிப்படையில் தலையில் 25, கழுத்து முதல் நாபி வரை 45, நாபி முதல் மூலம் வரை 9, கையில் 14, காலில் 15 மொத்தம் 108 என்றும், தோஷங்களின் அடிப்படையில் வாத வர்மம் 64, பித்த வர்மம் 24, சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6, உள் வர்மம் 14 மொத்தம் 108 எனவும் குறிப்பிடுகின்றனர்.

களரியும் சிலம்பும்:

சிலம்பம் என்று அழைக்கப்படும் சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் களரியில் கோல்த்தாரியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஒத்தது. களரியில் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையையே சிலம்பம் என்று வழங்குகின்றனர். சிரமப் பயிற்சி பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கும் சுவடுகள் அடங்கியது ஆகும். எனவே அதை மட்டும் பயின்று சிலர் அதை ஒரு தனிக்கலையாக உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முடிவுரை:

கலைப் பொக்கிஷங்களின் வரிசையில் களரி என்ற தற்காப்புக் கலை மிகவும் சிறப்பிடம் பெற்றுத் தனித்தன்மை வாய்ந்த கலையாகத் திகழ்கிறது. தவ முனிவர்கள் தந்த இக்கலையை அதன் மகிமையை அறிந்து முற்காலத்தில் பலர் பயின்று தேர்ச்சிப் பெற்ற ஆசான்களாகவும் மிகச் சிறந்த போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர். தற்போதைய இளைஞர் சமுதாயம் இக்கலையின் பழமையையும், பெருமையையும் அதன் உயிரோட்டமான நயங்களையும் அறியாததால் அதை விரும்பிப் பயில ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தல் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியின் குண்டுகளைக் கூட இக்கலையை பயின்று தேர்ச்சிப் பெற்றவர்களால் தடுக்க இயலும். மேலும் மனிதன் தன்னைத் தானே புரிந்து கெண்டு பிறருக்கு உதவிச் செய்யக்கூடிய நல்லுள்ளம் கொண்ட ஒரு முழு மனிதனாக வாழ இந்த கலை உதவிச் செய்கிறது. எனவே இன்றைய இளைஞர்கள் இக்கலையை ஆர்வமுடன் பயின்று அவர்களும் பயன்பெற்று அழிந்து வரும் உயிரோட்டமான இக்கலையை உயிர் பெறச் செய்து சமுதாயத்திற்கும் உகந்த கலையாகப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை

Monday 11 November 2013

பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.!

பழமொழிகள்

பழமொழி = பழமை+மொழி. பழமையான மொழி, நம் பண்டைய மக்கள் ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், புறிதலுமாய் விளங்க பழமொழிகளை பேசி பயன்படுத்தி வந்தனர். பழமொழிகள் நம் மக்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. பழமொழிகள் "ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள்" என்று கூறுகின்றனர். இவை "நாட்டுப்புறவியலின்" ஒரு கூறாகவும் அமைகின்றன.

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார்.

பழமொழிகளை  நினைவுக்கூர்வோம்:

* அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
* அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
* அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
* அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
* அடியாத மாடு படியாது.
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
* அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.


* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆசை காட்டி மோசம் செய்தல்.
* ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
* ஆடு பகை குட்டி உறவு.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
* இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
* இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
* இளமையில் கல்.
* இளங்கன்று பயமறியாது.
* இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
* இளமையில் கல். முதுமையில் காக்கும்.
* இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
* இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
* இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
* இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
* இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
* இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
* இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
* இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
* இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
* இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
* இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
* இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
* இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
* இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.


* உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
* உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.

* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு.

* ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு                  ஓட்டை இருக்கிறது.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

* எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக் கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

* ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
* ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.

* ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
* ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
* ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

* ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
* ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
* ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
* ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
* ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
* ஒழுக்கம் விழுப்பம் தரும்.
* ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
* ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
* ஒத்தடம் அரை வைத்தியம்.
* ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
* ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
* ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

*  ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.
* ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
* ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
* ஓடிப் பழகிய கால் நிற்காது.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.


* கண்ணுக்கு இமை பகையா?
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
* கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
* கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
* கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
* கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
* கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
* கடுங்காற்று மழைக்கூட்டும்.கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
* கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
* கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
* கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
* கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
* கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
* கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
* கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
* கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
* கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
* கல்வி விரும்பு.
* கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
* கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
* கணக்கு எழுதாதன் நிலைமை.கழுதை புரண்ட இடம் மாதிரி.
* கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
* கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
* கடலில் கரைத்த பெருங்காயம் போல.
* கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
* கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
* கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
* கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
* கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?


* காலம் போகும் வார்த்தை நிற்கும்.
* கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
* கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
* கார்த்திகை கன மழை.
* கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
* கார்த்திகை கண்டு களம் இடு.
* கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
* காணிச் சோம்பல் கோடி நட்டம்.
* காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
* காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
* காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
* காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
* காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
* காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
* கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
* கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.
* கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.

* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள்:

* பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
* விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
* மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
* நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
* பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
* நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும்  புளிக்கும்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளும்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* பேராசை பெருநட்டம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில்விழுவது மேல்.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
* பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
* தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

உவமையாக வரும் பழமொழிகள் 



*  கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
* பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
* எருமை மாட்டில் மழை பெய்தது போல.
* தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
* குப்பைமேடு கோபுரமானது போல.
* குறைகுடம் கூத்தாடுவது போல."


இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன:


* நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
* நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
* சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
* தன் முதுகு தனக்குத் தெரியாது.
* எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
* வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
* குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
* கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
* குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
* கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
* மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
* சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
* வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
* பணம் பாதாளம் வரையும் பாயும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பேராசை பெரும் நட்டம்.
* முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
* தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
* கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
* தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
* தன் வினை தன்னைச் சுடும்.

* குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
* காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
* விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
* முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
* குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
* தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
* தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
* வரவு எட்டணா செலவு பத்தணா.
* கிட்டாதாயின் வெட்டென மற.
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.


             மேலே கண்ட பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top